அஞ்சலி

முதல் சூப்பர் ஸ்டார்… வாழ்க்கைப் பாடம்..

இந்தியத் திரை உலகில் பேசும் சினிமா தொடங்கியபோது மாநில அளவில் பல்வேறு மொழிகளில் முதல்  சூப்பர் ஸ்டார்கள் உண்டு.
ஆனால் தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் என எம் கே தியாகராஜ பாகவதர் போல் அவர்கள் பெரும் புகழை பெற்றிருக்கவில்லை. புகழ் என்பதை விட வெறித்தனமான ரசிகர்கள் கூட்டம் என்றே சொல்ல வேண்டும்.
இன்றைக்கு சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியின் நிலைமை பலருக்கும் தெரிந்த விஷயம்.
ரஜினிக்கு முந்தைய சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆர் திரைத்துறையிலும் அரசியலும் ஒரே நேரத்தில் எவ்வளவு புகழோடு வாழ்ந்து அதேபுகழோடு  சேர்ந்தார் என்பது உலகமே அறிந்த விஷயம். 
ஆனால் முதல் சூப்பர் ஸ்டாரின் வரலாறு மிக மிக வித்தியாசமானது…படிப்பில் ஆர்வம் காட்டாத சிறு பிள்ளைக்கு கண்டிப்பாக வேறொரு விஷயத்தில் அசாத்திய திறமையும் ஆர்வமும் இருக்கும்.. அப்படிப்பட்ட பிள்ளைகளில் ஒருவர்தான் தியாகராஜன்..
இன்றைக்கு 110 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த அச்சிறுவனுக்கு இசை மீதும் பாடுவதிலுமே எண்ணம் மேலோங்கியிருந்தது..
படிக்காத பிள்ளையை எந்த பெற்றோர் நேசிப்பார்கள்? இங்கும் அதே வரலாறுதான், படிக்க மறுத்துவீட்டைவிட்டே ஒடிப்போனான் பிள்ளை.. பாடிப்படி எங்கெங்கோ பிழைப்பு. கடைசியில் ஒரு நாள் தந்தையின் கண்ணில் சிக்க, மறுபடியும் வீட்டு வாசம், 
ஆனால் இம்முறை உன் இஷ்டம் என்று விட்டுவிட்டார்கள் பெற்றோர்.தியாகராஜனின் பாடும் குரல்வளம் நாடகங்களில் வாய்ப்புகளை அள்ளியது. அந்த வாய்ப்பு, சினிமா டைரக்டர் கே.சுப்பிரமணியத்தின் பார்வையில் பட, பவளக்கொடியில் கதாநாயகன் என்ற அறிமுகத்தை கிடைக்கச்செய்துவிட்டது. 
பவளக்கொடி படம் 1934ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. நவீன சாரங்கதாரா, சத்யசீலன் என அடுத்தடுத்து இரண்டு படங்கள் … அவைகளும் வெற்றிமாலை சூடின.
நான்காவது படம்தான் சிந்தாமணி.. ராயல் டாக்கிசார் தயாரித்த அந்த படத்தை இயக்கியவர் ஒய்.வி.ராவ், (நடிகை குமாரி ருக்மணியின் கணவர், நடிகை லட்சுமியின் தந்தை)
சிந்தாமணி படம் திரையிட்ட இடங்களில்லொம் தாறுமாறாய் ஓடியது. தமிழ் திரை உலகில் ஒரு வருடத்திற்கு மேலே ஒடிய முதல் படம் என்ற கிரீடத்தையும் சூட்டிக்கொண்டது..படம் அள்ளித்தந்த வசூலை வைத்து மதுரையில் சிந்தாமணி என்ற பெயரில் ஒரு தியேட்டரே கட்டப்பட்டது.
தியாகராஜன் என்ற ஹீரா பாடல்களுக்காக கொண்டாடப்பட்டார். எம்.கே. தியாகராஜ பாகவதர் என்றாகி எம்கேடி என்றெழுத்து தாரக மந்திரமும் ரசிகர்கள் மத்தியில் உண்டானது. ஆம். இப்படித்தான் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் உருவெடுத்தார்.
அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார் சிவகவி என மேலும் நான்கு பாக்ஸ்ஆபிஸ் ஹிட் படங்கள். ஒரு பக்கம் பணம் கொட்டோ கொட்டுவென கொட்டியது. 
இன்னொரு பக்கம் எங்கு சென்றாலும் ரசிகர்களின் இன்பத்தொல்லை. பாகவதரின் தோற்றத்துக்கும் குரல் வளத்துக்கும் அடிமையாகிப்போன ரசிகைகள் இன்னும் அதிகம்.
1944ல் தமிழ் சினிமா உலகின் முதல் கனவுக்கன்னியான டிஆர் ராஜகுமாரியுடன் ஹரிதாஸ் படத்தில் இணைகிறார் பாகவதர்..
மன்மத லீலையை வென்றவர் உண்டோ..
இந்தப் பாடல் 77 ஆண்டுகளுக்கு பிறகும் இன்றும் உலுக்கி எடுக்கிறது. அப்படியானால்1944-ல் ஹரிதாஸ் படத்தின் இந்தப்பாடல் தியேட்டர்களில் ஓடும்போது ரசிகர்கள் ஆரவாரம் எப்படி இருந்திருக்கும்?
ஹரிதாஸ் படம் சூப்பர் டூப்பர் ஹிட். 110 வாரங்கள். அதாவது மூன்று தீபாவளியை காண்கிறது.. பத்துக்கும் மேற்பட்ட படங்கள் பாகவதவருக்கு புக் ஆகின்றன. 
விதி வேறு விதமாக பாகவதர் கனவிலும் நினைத்துப்பார்க்கமுடியாத அளவுக்கு விளையாடுகிறது.. 
பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனோடு பாகவதர் கைதாகி சிறைக்கு போகிறார்.. 
வழக்கு நடக்கிறது.. நடக்கிறது. இன்னொரு பக்கம் வழக்குக்களுக்காக சொத்துகளும் கரைகின்றன..லண்டன்வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தி மூன்றாண்டுகள் கழித்து 1947ல் விடுதலையாகி வெளியே வருகிறார் பாகவதர்.
ஆனால் திரையுலமே மாறிப்போயிருக்கிறது.. அதாவது பாகவதரை கண்டுகொள்ள ஆளில்லாமல் அடியோடு மறந்துபோயிற்று,
வேறுவழியில்லாமல் பாகதவரே சொந்தமாக படம் எடுக்கிறார். விஎன்ஜானகி மற்றும் பானுமதி என இரு கதாநாயகிகள்.. ஏற்கனவே அசோக்குமார் படத்தில் பாகவதருடன் நடித்த எம்ஜிஆரும் ராஜமுக்தியில் நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்புடன் வந்த ராஜமுக்தி படு பிளாப்..
ஒன்பதே படங்களில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் உச்சத்துக்கு போன பாகவதருக்கு. முக்கியமான கட்டத்தில் வெளிவந்த பத்தாவது படம் அவுட்.. இதன்பிறகு என்னென்னவோ முயன்று பார்த்தும் எம்கே தியாராஜபாகவதாரல் நிமிரவேமுடியவில்லை….
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சொந்தக்குரலில் பாடமுடிந்தவர்கள் மட்டுமே ஹீராவாக நடிக்கமுடியும் என்ற நிலைமாறி டப்பிங் வசதி வந்து எம்ஜிஆர் சிவாஜி போன்றோர் தலை தூக்கிவிட்டதே..
மேலும் மூன்று படங்கள் ஓடாத நிலையில் பாகவதர் இறந்தபிறகு அவரின் 14 வது மற்றும் கடைசி படமான சிவகாமி 1960ல் வெளியானது. பாகவதர் நடித்த சில காட்சிகளை வைத்து தெலுங்கு நடிகர் ஜக்கையாவை வைத்து ஒப்பேற்றி எடுத்து கந்தல் கோலத்தில் வெளியிட்டார்கள்..
பாகவதரின் சிவகாமி படத்தில் அவர் பாடிய பாடல்களை விட ஜக்கையாவுக்காக டிஎம்எஸ் பாடிய ”வானில் முழு மதியை கண்டேன் வனத்தில் ஒரு பெண்ணை கண்டேன்” என்ற பாடல் செம ஹிட்.. 
இன்றளவும் சிவகாமி படத்தை இணையத்தளங்களில் ஓட்டிக்கொண்டிருப்பது, ஜக்கையா பாடியபடி வர நடிகை ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ ஆடியபடி வரும் அந்த பாடல்காட்சிகள்தான்.
எம்கேடியின் வாழ்க்கை அலாதியானது. கதாநாயகனாக மட்டும் இசைக்கச்சேரிகளிலும் பெரும் ஆர்வம் காட்டினார். மிகப்பெரிய செல்வந்தர்கள் வீட்டு திருமண நிகழ்ச்சிகளில் அவரின் கச்சேரி மிகபெரிய அடையாளமாக கௌரவமாக கருதப்பட்டது. பாகவதர் கேட்ட பணத்தை கொட்டிக்கொடுத்தார்கள்..
செல்வம் புரண்டது. சென்னையில் மூன்று பிரமாண்டமான பங்களாக்கள், திருச்சியில் ஒரு பங்களா என கட்டினார். சகோதரிகளையெல்லாம் மிகுந்த செலவில் திருமணம் செய்துவைத்தார். வெள்ளி அண்டாவில்தான் குளிப்பார். தங்கத்தட்டில்தான் சாப்பிடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது பாகவதரின் வாழ்க்கை.
பணத்திலேயே புரண்டாலும் எம்கேடி பாகவதர் கல்வி நிறுவனங்களில் வளர்ச்சிக்கோ, கோவில்களுக்கோ கச்சேரி செய்தபோது பத்து பைசாகூட வாங்காமல் இலவசமாகவே செய்துகொடுத்தார் என்பார்கள்.
அப்படிப்பட்ட தமிழின் சூப்பர் ஸ்டார் எம்கே. தியாகராஜபாகவதர், வறுமைக்கு ஆளாகி கடைசில் சென்னை அரசு மருத்துவமனையில் காலமாகும்போது வயது வெறும் 49 தான்..
பாகவதர் 1947ல் சிறையிலிருந்து வெளியே வந்தபோது திராவிய இயக்கத்தை சேர்ந்த பிரபலங்கள் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவை ஆக்கிரமிக்க துவங்கியிருந்தார்கள்.  எம்ஜிஆர் முதன் முதலாய் கதாநாயகனாகி கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியிருந்தநேரம் அது..
திராவிட இயக்கத்தை சேர்ந்த கலைவாணர் என்எஸ்கே போன்றோர், பாகவதரை தங்கள் பாதைக்கு வருமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் மிகுந்த தெய்வபக்தி கொண்ட பாகவதர் நாத்திக கருத்துக்களோடு ஒப்புக்கொண்டுபோக மறுத்துவிட்டார். 
ஒருவேளை பாகவதர், திராவிட இயக்க பக்கம் போய் நடிப்பில் வேறு அவதாரம் எடுத்திருந்தால் வரலாறு வித்தியாசமாக போயிருக்கலாம்..
எம்கேடி இறந்து இன்றோடு 62 ஆண்டுகள் ஆகின்றன.. அவர் பாடிய,
சொப்பன வாழ்வில் மகிழ்ந்துசுப்ரமணிய சுவாமி உனை மறந்தார்அந்தோ,அற்பப் பணப் பேய் பிடித்தேஅறிவிழந்து அற்பர்களைப் புகழ்வார்.. 
போன்ற பாடல்கள் இன்னமும் தமிழர்களின் காதுகளை ஆட்டிப்படைத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

பட்டேலும்… பாஜகவின் பொய்களும்

#பட்டேலும்… பாஜகவின் பொய்களும்
#அமித்ஷா பேசியது : காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தான அரசியல் அமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்ததன் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
#மோடி பேசியது : அரசியல் அமைப்பின் 370 வது பிரிவை நீக்க எனக்கு தூண்டுகோளாக இருந்தவர் சர்தார் பட்டேல். இந்த முடிவை நான் அவருக்கு அற்பணிக்கிறேன்.
இவர்கள் இப்படி பேசினார்கள் ஆனால் வரலாற்று ஆவணங்கள் என்ன சொல்கிறது….
1949 ம் ஆண்டு மே மாதம் 15, 16 தேதிகளில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 வது வரைவு பிரிவை உருவாக்குவது தொடர்பான கூட்டம் பட்டேல் அவர்கள் இல்லத்தில் நடக்கிறது.  அங்கே, அப்போதைய காஷ்மீர் பிரதமர் ஷேக் அப்துல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு சார்பில் நியமிக்கப்பட்ட #என்ஜிஅய்யங்கார் தான் வரைவை தயார் செய்கிறார். அப்துல்லாவுக்கு  நேரு தரப்பிலிருந்து அனுப்ப வேண்டிய வரைவு சம்பந்தமான அறிக்கையை தயாரித்த அய்யங்கார் பட்டேலிடம் காண்பித்து, “நீங்கள் ஒப்புதல் அளித்த பின்பு இந்த வரைவு ஒப்பந்தத்தை நேரு சார்பில் அப்துல்லாவுக்கு அனுப்பிவிடலாம்.” என்று சொல்கிறார். பிறகு, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கு நான் உடன்படுகிறேன், எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று நேருவுக்கு பட்டேல் கடிதம் அனுப்புகிறார். 
1949 ல் கூட்டப்பட்ட காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் 370 வது பிரிவை அனைவரும் ஏற்க வேண்டும் என்று பட்டேல் வலியுறுத்துகிறார். 
அந்த ஆண்டு அக்டோபர் மாதம் நேரு வெளிநாடு செல்லவே, பிரதமருக்கான பொறுப்பை பட்டேல் கவனிக்கிறார். அந்த சமயத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பட்டேல் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சிறப்பு அந்தஸ்து தொடர்பாக அப்துல்லாவின் கோரிக்கைகளை பட்டேல் ஏற்றுக்கொண்டிருக்கிறார். 
பிறகு இந்த வரைவு அரசியல் அமைப்பில் அங்கீகாரம் பெறவேண்டிய சூழ்நிலையில் நேரு சற்று யோசித்த சமயத்தில் அதனை அரசியல் வரைவறிக்கையில் சேர்த்தவர் சர்தார் பட்டேல். 
அதே போல மகாராஜா ஹரி சிங்கை காஷ்மீரை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டவர் பட்டேல். 
அடுத்ததாக 1952 ம் ஆண்டு ஆகஸ்ட் 7 ம் நாள் மக்களவையில் பேசிய (அன்றைய பாரதிய ஜனதா)  #ஜனசங்க தலைவர் #சியாமாபிரசாத்முகர்ஜி “காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லலாம் என்று அரசு எடுத்த முடிவில் நானும் அங்கமாக விளங்குகிறேன். அது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த விசயம்…” என்று சொல்லியிருக்கிறார்.
அதாவது நேருவோடு சேர்ந்து பட்டேல் எடுத்த முடிவுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்த மோடி அதனை  பட்டேலுக்கு அர்பணிக்கிறேன் என்று சொல்கிறார். அமித்ஷாவோ 370 ரத்து செய்ததன் மூலம் பட்டேல் கனவு நிறைவேற்றபட்டது என்கிறார். இதுல என்ன வேடிக்கைன்னா காஷ்மீர் பிரச்சனைய ஐ.நாவுக்கு எடுத்துட்டு போயி நேரு மாபெரும் தவறு இழைத்து விட்டார் என்று பாஜக சொல்கிறது. ஆனால் அந்த முடிவை பாஜக தலைவர்களும் சேர்ந்தே எடுத்திருக்கிறார்கள்.
இந்தியாவில் மற்ற எல்லா கட்சிகளிலும் தொண்டர்கள் அறியாமையில் பொய் சொல்லுவார்கள், ஆனால் பாஜகவில் மட்டும் தான் தொண்டர்கள் மட்டுமின்றி தலைவர்களே பொய் சொல்லக்கூடிய மோசமான நிலை இருக்கிறது. 
பட்டேல் பிறந்தநாளில் புகழ் வணக்கம்…

புனித்

புனித் ராஜ்குமாரை ‘கன்னடத்தின் விஜய் ‘ எனலாம். கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. ‘பவர் ஸ்டார்’ என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம். ஒட்டுமொத்த மாநிலமே ‘அப்பு’ என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர்.
46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மரணம் வந்து ‘நலமா, என் பழைய நண்பனே!’ என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.
‘நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது’ என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
நேற்று இரவு 12 மணி வரையிலும்  பர்த்-டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜாலியாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே  நடனமாடிக் கொண்டு இருந்திருக்கிறார் புனித். இன்று காலை எழுந்து வழக்கம் போல ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார். உடனடி Cardiac arrest ஏற்பட்டு சில நிமிடங்களில் மரணம். பிரிந்து பல காத தூரம் கடந்து சென்று விட்ட உயிரை மீண்டும் உடலில் ஒட்ட வைக்க முடியாதா என்று போராடி இருக்கிறது மருத்துவமனை. நண்பகல் 12 மணியளவில் கை விரித்து மரண அறிவிப்புச் செய்து இருக்கிறார்கள்.
எந்த வித முன்னறிவிப்பும் தராமல் ‘இனிமேல் துடிக்க மாட்டேன்’ என்று இதயம் திடீரென ஸ்ட்ரைக் செய்து ஏனோ நின்று போய் விடுகிறது. massive cardiac attack. இதற்கான சரியான காரணங்கள் இன்னும் வரையறுக்கப் படவில்லை என்றே தெரிகிறது. சும்மா நம் ஆறுதலுக்காக ‘unhealthy lifestyle’ என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால்  இறுதி நிமிடம் வரை புனித்  ‘fit as fiddle’ ஆகத் தான் இருந்திருக்கிறார். 
வாடகை வீட்டில் இருப்பவர் குறைந்தது ஒரு மாதம் முன்பாக ‘நான் காலி செய்யப் போகிறேன்’ என்று ஓனருக்கு  நோட்டிஸ் தரவேண்டும் என்பார்கள். உடம்பென்னும் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் உயிர் அப்படி எந்த நோட்டிசும் தருவதில்லை. ‘Interval’ கார்டை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில் ‘The End’ கார்டு காட்டிப் பாதியில் அபத்தமாக நின்றுவிடும் ஒரு சுவாரஸ்யத் திரைப்படம் போல திடீரென்று விலகி விடுகிறது உயிர்!
இது தத்துவமோ வேதாந்தமோ, எதிர்மறை உணர்ச்சிப் பிரச்சாரமோ அல்ல. இதில் positive ஆகச்  சிந்திக்கவும் சில  விஷயங்கள் உள்ளன.
ஆயிரம் வருடங்கள் இங்கே இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அத்தனை சுயநலத்தோடு, அத்தனை பகைமையோடு, அத்தனை காழ்ப்புணர்ச்சிகளோடு! முதுகுக்குப் பின்னால் மரணத்தை வைத்துக்கொண்டு முப்பது ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறோம். இந்த விஷயங்களைக் கொஞ்சம் யோசிப்போம்.
– பகை, போட்டி, பொறாமை, பேராசை, ஈகோ இவை எல்லாம் தேவை இல்லாத baggage கள். எப்போது யார் போய்ச் சேருவார்கள் என்று தெரியாது. அப்புறம் ‘ச்சே, நேத்து கூடப்  பார்த்தேனே, பழசை எல்லாம் மறந்துட்டு கொஞ்சம் சிரிச்சுப் பேசி இருக்கலாமே’ என்று அங்கலாய்ப்பதில் பொருள் இல்லை.
– நிகழ்காலத்தில் வாழ்வது. மேலே சொன்னது போல நாம் போடும் ‘முப்பது வருடத்  திட்டத்தைப்’ பார்த்து மெல்லப் புன்னகைக்கிறது முதுகின் பின் ஒளிந்து கொண்டிருக்கும் நம் மரணம். 
–  தொலையாத கவலைகள். உலகின் பாரத்தை எல்லாம் நம் தோள் மீதி ஏற்றியது போலத் தூக்கிச் சுமக்கும் கவலைகள்.  ‘செத்ததற்கு அப்புறம் என் குடும்பம் என்ன செய்யும்?’ என்பது போன்ற கவலைகள். reality என்னவென்றால் ‘they will be just fine!’.  நம்மால் தான் எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பைத் தூரப் போடுவோம்.’அழவா இங்கே வந்தோம்? ஆடு பாடு ஆனந்தமா!’
–  பற்றின்மை:  பொருட்களை நாம் உபயோகிக்கலாம். பொருட்கள் நம்மை உபயோகிக்கத் துவங்கும் புள்ளியை அறிந்து கொண்டு ஒரு கும்பிடு போட்டு விலகி நின்று விட வேண்டும். இந்த நிமிடம் மரணம் வந்து அழைக்கும் போது ‘சரி, வா, போகலாம்’ என்று உதறி விட்டுச் செல்லும் பக்குவம் வேண்டும்.
– நன்றி உணர்ச்சி:  நிலையற்ற வாழ்வில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு மகத்தான பரிசு தான் என்று தோன்றுகிறது. ‘இன்று நான் படுக்கையில் இருந்து எழுந்து விட்டேன், வரவிருக்கும் இந்த நாளுக்கு நன்றி’ என்று எழுந்திருக்கும் போதும், ‘இன்று ஒரு நாளை நான் கடத்தி விட்டேன், இன்றைய நாளுக்கு நன்றி’ என்று இறைவனுக்கோ, பிரபஞ்சத்துக்கோ நன்றி சொல்லத் தெரிந்திருத்தல். ஒவ்வொரு தினத்தையும் வாழ்வின் கடைசித் தினம் போல வாழப் பழகிக் கொள்ளுதல்.
-not but not the least: பகிர்ந்து கொள்ளுதல்,  உதவி செய்தல், தேவைப் படுபவர்களுக்குக்  கரம் நீட்டுதல், உயிர்களிடத்தில் அன்பு.
-கடவுள் நம்பிக்கை. இது ஒருவிதத்தில் ஆத்திகர்களின் advantage. ‘காலா, உன்னைக் காலால் எட்டி உதைப்பேன்’ என்னும் தைரியத்தைத் தரும் நம்பிக்கை. ‘அவன் பார்த்துக் கொள்வான், இம்மையிலும், மறுமையிலும் என்னைச் சரியான இடத்துக்கு அவன் கூட்டிச் செல்வான்’ என்ற திட நம்பிக்கை. மரணமும் இவர்களுக்கு ‘This is but a scratch’!!!
மரணத்தின் போது ஒரு நிமிடத்தில் நம் வாழ்க்கை முழுவதும் நம் கண் முன்பு ஒரு திரைப்படம் போல பிளாஷ் ஆகுமாம். அப்போது அந்தத் திரைப்படம் பார்ப்பதற்குச் சிறந்த ஒரு ‘feel-good movie’ யாக இருக்க வேண்டாமா?  .   Dr.D.Ravikumar

கர்நாடகத்தின் .‌.நாயகன்…..மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்….‌‌

48 இலவச பள்ளிக்கூடங்கள் ,
26 ஆதரவற்றோர் இல்லங்கள் ,
16 முதியோர் இல்லங்கள் ,
சுமார்
1800 மாணவ , மாணவியரின் கல்வி ,
என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கான பயனுக்காகவும் என வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார் .
இன்று தன் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்கி பார்வையற்ற ஓர் பாமரனின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் .

மனிதம் காப்போம் 🙏

ஆழ்ந்த இரங்கல்கள் 🙏

கர்நாடகத்தின் .‌.நாயகன்…..
மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்….‌‌. 

பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு

பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு

பொதுவாழ்வில் நேர்மையும், தனிவாழ்வில் தூய்மையும் நிறைந்த மனிதர்களின் எண்ணிக்கை அரசியல் களத்தில் நாளுக்கு நாள் அருகி வருவது ஆழ்ந்த வருத்தத்தைத் தருகிறது. அரசியல் களம் என்பது தன்னலம் துறந்து மக்கள் நலனுக்காகத் தங்களை முற்றாக அர்ப்பணித்துக் கொள்ளும் வேள்விச்சாலை என்றுணர்ந்து சேவையாற்றிய தலைமுறையின் தளபதியாக விளங்கிய நன்மாறன் அவர்கள் கண்மூடிய செய்தி ஆரோக்கியமான அரசியலை நேசிக்கும் அனைவரையும் கண்ணீரில் நனையவிட்டது. 

பத்தாண்டுகள் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த பின்பும் வசிக்க ஒரு வீடின்றி வறுமையில் வாடிய அரிய மனிதர் நன்மாறன். மூச்சு முடியும்வரை ஓர் உண்மையான கம்யூனிஸ்டாக ஓய்வின்றி மக்கள் பணியாற்றிய மகத்தான மனிதர் அவர். ஒரு மார்க்சியவாதி எப்படியிருக்க வேண்டும் என்பதை வார்த்தைகளில் விளக்காமல் செயல் வடிவத்தில் வாழ்ந்து காட்டிய தோழர் நன்மாறனை இன்றைய இளைய சமுதாயம் நெஞ்சில் வைத்துப் போற்ற வேண்டும்.

அவரோடு பல மேடைகள் பகிர்ந்து கொண்டவன் நான். நகைச்சுவை இழையோட சமூக அவலங்களை அவரைப் போன்று விமர்சித்தவர்கள் வேறு யாருமில்லை.

அவருடைய இழப்பு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டுமல்ல, பொதுவாழ்வில் நேர்மை துலங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொருவருக்குமான இழப்பு என்பதுதான் பொய்யின் நிழல் படாத நிஜம்.  

அன்புடன்
தமிழருவி மணியன்