தாமிரச் செப்பில் திரட்டிய கங்கை

தாமிரச் செப்பில் திரட்டிய கங்கை

சிற்பி பாலசுப்பிரமணியம்

யிரில் முளைத்த சிறகு காதல். அது ஓசையில்லாத சலனம். ஆனால் உயிரை இயக்கும் அசைவு.

வாழ்வின் ஒவ்வொரு துளியையும் வைரக்கற்களாய் ஒளிவிடச் செய்யும் கிரணம். வண்ணங்களின் உறைவிடம். ஆனால் அதில் சற்றே பிசகு நேர்ந்தால் ஒரே வண்ணம் – கருப்பு.

உலகில் காதல் இலக்கியங்கள் இல்லாத மொழியே இல்லை. எழுத்து இல்லாத மொழியில் கூடக் காதல் உண்டு. அதன் உன்னதமே மொழியையும் தாண்டி வாழும் அதன் நுண்ணிய ஆற்றல்.

சேக்ஸ்பியரின் காளிதாசன் வரை பைரனிலிருந்து பழநி பாரதி வரை அதன்மாய அழகில் ஈடுபடாத கவிஞர்கள் எவரும் இலர்.

சிந்தனைகளைக் கருத்தரித்துச் சொற்களில் தாலாட்டி விடும் இறையன்பும் அதில் கரைந்து போனதன் விளைவு;  ‘வைகை மீன்கள்’.

*

வைகை மீன்களை’த் தந்தவர் முன்பு ‘வாய்க்கால் மீன்களைத்’ தந்தவர்தான். ஆனால் இந்தத் தலைப்பில் ஒரு தனிச்சிறப்பு உண்டு. நீரோட்டம் குறைந்த வைகையில் மீன்கள் தவிக்கும் தவிப்பு இருக்கிறதே அந்தத் தவிப்பு இந்தக் கவிதைகளின் கடைசிச் சொல் வரையிலும் இரத்தத்தின் அணுக்களைப் போல் பரவிக் கிடக்கிறது.

அவனும் அவளும் தவிப்பின் எல்லையைத் தொடும் பயணமே  ‘வைகை மீன்கள்’.

உயிர்ப்புமிக்க இக்காதல் கவிதைகளின் நாயகன் யாராக இருக்கலாம் என்று வாசகன் மனமும் தவிக்கிறது. அவன் அவரே தானோ? அவரைப் போல்தான் கனிவு, கண்டிப்பு, கட்டுப்பாடு, கருத்துள்ள வாழ்க்கையை அவன் மேற்கொண்டிருக்கிறான்.

அவராக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அது எப்படி இருந்தாலும் இந்தக் கதைக்குள் தன் வரலாற்றுக் கீற்றுக்கள் தென்படுகின்றன என்பதில் ஐயமில்லை. இந்த அடையாளம் பாரதியின் சுயசரிதைக் கவிதை போல ஓர் அர்த்தச் செறிவை நமக்குள் ஏற்றி விடுகின்றது,

அந்த வகையில் – எளிமையில் வலிமையை உள்ளடக்கிய இச்சிறு காவியம் ஒரு தன் வரலாறு தழுவிய படைப்பு ( Autobiographical Narrative Poem) என்ற கனத்தையும் பெருமையையும் பெறுகிறது.

*

அவன் சராசரி மனிதர்களிலிருந்து வேறுபட்டவன். போலிகளை முகப் பூச்சுகளுக்கும் ஒப்பனைப் பேச்சுக்களுக்கும் அப்பால் அடையாளம் காண வல்லவன். வெளித் தோற்றங்களின் உள்ளே இருக்கும் சூனியத்தை அவனால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

ஒரு பள்ளிக்கூடத்தில் உரையாற்றப் போகும்போது அந்தப் பள்ளியின் கட்டடங்களைக் கண்டு அவன் பிரமிப்பதில்லை.

‘கட்டடஙகளின் அடர்த்தி

அதிகமாகும்போது

ஆத்மாக்கள் காணாமல் போய்விடுகின்றன’

என்பதைப் புரிந்து கொண்டவனாகிறான். கல்வி  ‘வர்த்தகம்’ ஆகிவிட்டது குறித்து அவன் கவலை அவனைத் தனித்து அடையாளம் காணச் செல்கிறது.

ஆண்டு விழாவில் காணும் செயற்கைத் தனம் அவனுக்கு எரிச்சலூட்டுகிறது. அங்கு நிகழும் அறிமுக நாடகம் அலுப்பூட்டுகிறது.

‘ஒரு குறும்படத்தில் நடித்த

சலிப்பு’

அவனுக்கு,

அங்கே அந்த நெடும் பாலையில் – அவன் தன் கருத்துச் செறிந்த உரையால் பசுமையை விதைக்கிறான், என்ன வியப்பு! அங்கே ஒரு பசுமை எதிர்பாராமல் ஏற்கெனவே அங்கே காத்திருந்தது.

தொகுப்புரை வழங்கும் அவள் – அவனுடைய மாணவப் பருவத்தை மணமூட்டி மகிழ்வித்த மருக்கொழுந்து.

‘கவிதைக்கே கால் முளைத்தது மாதிரி’ இருந்த அவள், கவிதையும் வாசித்தாள். அதே தருணம் அவனுடைய இதய வீணையையும் வாசித்தாள். ஆனால் நேசித்த மங்கை மின்னலைப் போல மறைந்து காணாமல் போய்விட்டாள்.

இருபதாண்டுகளுக்குப்பின் இப்போது நினைவுச் செடியில் புதிய பூ.. இல்லை இல்லை பழைய பூவின்… இல்லை இல்லை நம்பிக்கைப் புதுப்பூ.

இதற்கிடையில் அவன் இரக்கத்தால் செய்த திருமணம் – முதல் மனைவியின் அரக்கத் தனத்தால் தோற்று மன முறிவில் மண முறிவாகி விடுகிறது.

மீண்டும் சந்தித்த காதல் கவிதை அவனை உண்ணவிடாமல், உறங்க விடாமல் அலைக்கழிக்கிறது. இன்னும் திருமணமாகாத அவளை எப்படித் தன் உயிருக்குள் பொதிந்து வைப்பதென மனக்குழப்பம்.

ஒவ்வொரு சந்திப்பும் அவன் காதலில் அமுதம் ஊற்றுகிறது. ஆனாலும்,

‘அவளுக்கு நம்மீது இருப்பது

நட்பா? நேசமா?’

என்ற கேள்விக்குறிகள் அவனை முள்வேலிக்குள் சிறைப்படுத்துகின்றன எப்படி?… எப்படி?…. என்னை உணர்த்துவது?’

மறைமுகமாக அவளுக்குத்  ‘திருமணம் தனிமையைத் தவிர்க்குமே’ என்று பொத்தாம் பொதுவில் சொல்லியும் பார்க்கிறான் அவன்…..

பதில் மோனாலிசாவின் உறைந்த புன்னகை, இதற்கு ஆயிரம் உரைகள் எழுதலாம், எதிர்பார்த்த பொருள் இருக்குமா? இல்லையா?

அவன் பரவவிட்ட அதிர்ச்சி அலைகளால் அவளும் உறங்கவில்லை. அவள் பெண்ணில்லையா? பெண்களுக்கு எச்சரிக்கை விளக்கெரிக்கும் மின்சாரம் இயற்கையாகவே இருக்கிறதே…

‘வேண்டாம், வேண்டாம்..

கற்பனை மரநிழலில் கணிசநேரம் தங்கினால் கூட

யதார்த்த வெயில் சுடும்போது

கருதி விடுவோமே!’

என்று தவிப்புக்கு ஒரு முடிவு காண யத்தனிக்கிறது அவள் உள்ளம்.

தவிப்புகள் கனமாகி இமயமலையை இதயத்தின் மேல் ஏற்றுகிற தருணத்தில் ஒரு கவிதை நூலின் சமர்ப்பண வரிகள் அதல பாதாளத்தில் விழுந்த காதலைக் கரையேற்றி விடுகின்றன.

‘கை குலுக்கிப் பிரிவாளோ

கை பிடித்துத் தொடர்வாளோ

எனத் தெரியாத என்னுயிர்த் தோழிக்கு

காணிக்கை’

என்பது சமர்ப்பணம். அந்த நான்கு வரிகளால் நான்கு விழிகள் மீண்டும் சந்திக்கின்றன. காதலைக் கனிவு மிகுந்த இல்லற வாழ்வுக்கு அர்ப்பணிக்கின்றன.

உணர்கவுளின் அரங்கங்கள் அந்தரங்களுக்குள் ஆழ்ந்து அமைதியில் முத்துக் குளிக்கும்அனுபவமாகி விடுகிறது இறையன்புவின் இதயத்தை வருடும் இந்த நூலில்…..

*

இது காதலைத் துகிலுரியும் துச்சாதனர்களின் காலம், எழுத்துக்களால் இளம் மனங்களைக் காமவேள் நடன சாலைகள் ஆக்கும் காலம். அதைக் கலையின் பெயரால் நியாயப்படுத்தும் காலம். அதை எழுத்துச் சுதந்தரம் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றும் காலம். மெல்லிய வீணைத் தந்திகளைச் சம்மட்டியால் மீட்டி, இது தான் இசை என்று நம்ப வைக்கும் காலம்.

இதோ இறையன்பு பூசை அறையில் அர்ச்சனைக்கு வைக்கப்பட்ட பனி படர்ந்த பூவைப் போல் ஒரு காதல் கதையை, கவிதை என்ற வெள்ளித் தட்டில் வைத்து வழங்குகிறார்.

தகிக்கும் வெட்டவெளி வெம்பரப்பிலும் கண்ணாடி நீர் ஊற்று ஒன்று கண்விழித்தல் சாத்தியம் என்று நிரூபித்திருக்கிறார்.

*

வெறும் காதல் கவிதையாக மேகங்கள் இன்றி வெறிச்சோடும் வானமாக இந்தச் சிறுகாவியம் அமைந்து விடவில்லை.

ஒவ்வொரு பக்கத்திலும் சிந்தையை அள்ளும் சிந்தனைகள் ஒரு விளைந்த நெல்வயல் போல் தங்கத்தைக் கொட்டிக் காத்திருக்கின்றன.

விளம்பரத்துக்காகவும் பொருள் சம்பாதிப்பதற்காகவும் ஆன்மா இல்லாத கல்லறைகளாகப் பெருகும்கல்வி நிறுவனங்களைக் குறித்து இறையன்பு எழுதுகிறார்.

‘இவர்கள் கல்விக் கண்ணைத் திறக்கிற அவசரத்தில்

ஞானக் கண்ணை தோண்டி விடுகிறார்கள்

மூளையைப் பலப்படுத்தும் முனைப்பில்

இதயத்தைப் பலவீனப்படுத்தி விடுகிறார்கள்’

பொய்முகங்களோடு செய்யப்படும் உபசரிப்பும், அளிக்கப்படும் பூங்கொத்துக்களும் அருவருப்பாய்ப் படுகிறது.

‘கைகளில் கொடுக்கப்படுவது

காதுகளில் வைக்கப்படுவதற்கு

முன்னோட்டம் தான்’

என்கிறார் கவிஞர்.

கல்வி எது என்ற கேள்விக்கு அழுத்தமாகக் கிடைக்கும் இறையன்புவின் கச்சிதமான பதில் இளைஞர்களைச் சிந்திக்க வைக்கக் கூடியது.

‘அறியாமையை அறிவதே

கல்வியின் முதல்படி

அறிந்தவை அனைத்தும்

அறியாமையே

என்பதே அதன் கடைசிப்படி’

என்ற வரிகளில் படிப்பின் படிகள் வரிசைப்படுத்தப்படுகின்றன.

உவமைகளும் உருவகங்களும் பருத்திப் பூப்போல் வெடித்துக் குலுங்குகின்றன நூல் முழுவதிலும்.

காதல் மனம் முழுதும் நிறைந்து கனப்பதைக் குறித்து கவிஞர் சொல்கிறார்.

‘மடியிலிருக்கும் பாலாய்

அவன் கனவுகள் காத்திருந்தன’

மொழியைப் பற்றி, மொழி பயில்வது பற்றி ஓர் உருவகம்:

‘மொழியே பாத்திரம்..

உறிஞ்சியவர் வாயின் அமைப்பே

உரிய பாத்திரத் தேர்வுக்கு இலக்கணம்’

இளமையிலே முற்றி முதிர்ந்த அறிவு பெற்றிருந்த கண்ணகியை இளங்கோ  ‘சிறுமுதுக்குறைவி’ என்று சிறப்பித்திருப்பார். அதுபோல் இந்தக் கதையில் வரும்  ‘அவனு’ டைய முதிர்ச்சியை,

‘இருபத்தைந்து வயதிலேயே

கருத்துக்களில் நரைத்திருந்தான்’

என்கிறார் இறையன்பு.

தோற்றுப்போன திருமணத்தை  ‘நிழல்களின் சங்கமம்’ என்கிறார்.

தனக்காகக் காதலி வாசலிலேயே காத்திருப்பதை  ‘வாசலிலேயே கால்கள் வேர்விடுமளவு காத்திருந்தவள்’  என்று நிறங்களின் மெருகேற்றிச் சொல்கிறார்.

இரண்டு பேருமே காதலை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல் நாகரிகம் காக்கின்றனர். இந்தப் பண்பாட்டைச் சொல்லும் இறையன்பு

‘உள்ளம் ஒருவரையொருவர்

எண்ணும் போதே உற்சாகத்தில்

துள்ளிக் குதித்தாலும்

உதடுகளில் கடிவாளமிட்டு

உணர்வைக் கவாத்து செய்தனர்.’

என எல்லைகளைக் காக்கும் ராணுவ வீரனைப் போல கவனமாகச் செயல்படுகிறார்.

இந்தக் காதல் காவியத்தினூடே அடிஅடியாய், அணு அணுவாய்ப் பயணம் செய்யச் செய்ய வாசக நெஞ்சில் இறுக்கமும், அழுத்தமும் கூடிக்கொண்டே போகின்றன… என்ன நேரும் என்ன நேரும் என்பதாக….

ஜார்ஜ் சிமனான் என்ற பிரெஞ்சு நாவலாசிரியரின் கதை சொல்லும் நேர்த்தி எப்படியிருக்கும் என்பதைச் சொல்லும்போது இப்படிச் சொல்லுவார்கள்… “கதையின் முடிவு நமக்குத் தெரியும், ஆனாலும் ஒரு பரபரப்பு. ரயில் வருகிறது என்று தெரிந்தாலும் அது நெருங்க நெருங்கப் பிளாட்பாரத்தில் ஏற்படும் பரபரப்பு போல…” என்பார்கள்.

இறையன்புவின் கதை நிகழ்த்தும் நேர்த்தியும் அதற்கு நிகரான பரபரப்பை உண்டு பண்ணுகிறது. தாமிரச் செம்பில் வைத்த கங்கை நீராய்ப் பரிசுத்தம் தாங்குகிறது  ‘வைகை மீன்கள்’.

இரும்புச் சட்டமாக இருக்கும் இந்திய ஆட்சிப் பணியில் இதயம் உள்ள மனிதராக விளங்கும் இறையன்புவை நான் எப்போதும் நேசித்து வந்திருக்கிறேன். இதோ இந்த முன்னுரை எழுதும் வாய்ப்பைத் தந்து அதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை அளித்து விட்டார்.

இறையன்புவுக்கு என் நெஞ்சின் நிறைய அன்பு.

*

இறையன்புவின் நூல்களைத் தொடர்ந்து வெளியிடும் நற்பணிக்காக விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம் அவர்களைப் பாராட்டி மகிழ்கிறேன்.

சிற்பி பாலசுப்பிரமணியம்

பொள்ளாச்சி

20.8.09