‘ஆத்தங்கரை ஓரம்’ – திரு.ஜெயகாந்தன் அவர்களின் அணிந்துரை

‘ஆத்தங்கரை ஓரம்’ என்ற இந்த நாவல் சிந்தூர் என்ற கிராமத்தின் அழகையும் அதனுடே நிகழ்ந்த அவலங்களையும் மனிதாபிமான நோக்கில் சித்திரிக்கின்ற கதை.

பெயரில்லாத அந்த ஆற்றில் பெரியதொரு அணை கட்டத் திட்டமிடப்படுகிறது. கதையில் அந்த அணை கட்டும் முயற்சி திடீரெனத் தோன்றுகிறது. அரசாங்கமும் அதிகாரிகளும் சிந்தூர் கிராமத்தை அழித்தொழிக்கிற நோக்கம் தவிர வேறெந்த நன் நோக்கமும் இல்லாமற் செயற்படுகிறார்கள். நகரங்கள் வாழும் இடங்களோ என்ற ஐயப்பாட்டினை ஏற்படுத்துகிறது. அதிகாரிகள் என்போர் அரசாங்கச் சம்பளத்துக்காக அடிமைப்பணி புரிகிறவர்கள். சமயமுளபடிக்கெல்லாம் பொய்கூறி அறன் கொல்லும் சுமடர்கள். இவர்கள் மத்தியில் நல்லிதயமும் நற்பண்புகளும் கொண்ட சுதீர் போன்றவர்கள் நாளடைவில் நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு ஒதுக்கப்படுவர். என்னதான் மக்களைத் திரட்டி வன்முறை தவிர்த்து அறவழியில் போராடினாலும் அரசாங்கத்தின் மூர்க்கத் தனத்தோடு அதன் திட்டங்கள் நிறைவேறும். இறுதிவரை அதை எதிர்த்தவர்கள் ‘இதுவே கடைசி அணை’ என்ற சுய திருப்தி அடைந்து, அடுத்து இன்னொரு இத்தகையதொரு முயற்சியை எதிர்த்து அணி திரட்டிப் போய்விடுவர்.

இந்த யாதார்த்த நிலையை அடிப்படையாகக்கொண்டு மிகவும் மேன்மையாக எழுதப்படிருக்கும் இந்த நாவல் தமிழில் எழுதப்பட்ட இந்திய இலக்கியம் எனலாம்.

கதையின் களம் தமிழ்நாடு அல்ல; கதை மாந்தர்களும் தமிழர்கள் அல்லர் என்பதால் படிப்பவர்க்கு ஒரு மொழிபெயர்ப்பைப் படிக்கிறோமே என்னும் மயக்கத்தை ஏற்படுத்துகிறது. இது ஒரு குறையாக அல்ல. நிறைவாகவே அமைந்திருக்கிறது.

இந்நாவலில் வருகிற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் பிசிறில்லாமல் வார்க்கப்பட்டுள்ளனர். எல்லோருமே மேன்மையானவர்கள். அதிகாரிகள் கூட நமது பரிதாபத்துக்குத் தான் ஆளாகிறார்கள். மக்கள் மீது நேசம் கொண்ட அதிகாரியான சுதீரும் அவரது மனைவியும் அவர்களது தாம்பத்திய இசைவும் அழகாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கதையே அவரது பார்வையில்தான் சொல்லப்பட்டிருக்கிறதாக எனக்குப் படுகிறது.

ராதாபடேங்கரும் அவரது கணவரும் சுதீர் தம்பதிகளுக்கு மாறுபட்ட இணை. எனினும் அவர்களது முரண்பாடுகள் அவர்கள் இருவரின் மேன்மையான பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

கோகுலை நரபலியிட்டதும் நிதின் வன்முறையைக் கைக்கொண்டதும் சிறையில் அவன் தற்கொலை செய்து கொண்டதும் இந்தக் கதையில் வரும் அவலச் சுவைக்கு அழுத்தம் தந்து வாசகன் மனத்தில் வடுவை ஏற்படுத்துகிறது. பெருமூச்செறிய வைக்கிறது. ஆத்தங்கரையோரத்தில் அல்லது இந்த அணைக்கட்டின் பக்கத்தில் எங்கேனும் அந்தக் கோவிந்த்பாய் சுருட்டுப் புகைத்துக்கொண்டு இப்போதும் உட்கார்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது. அந்த மண்ணைவிட்டு ஒருபோதும் அவரது ஆத்மா பிரிந்துபோகாது.

நாகரிகம் நடந்து வந்த பாதை எங்கணும் இவ்விதம் நொறுங்கிப் போன மனித இதயங்கள் வரலாறு நெடுகிலும் எவ்வளவு  எவ்வளவோ?

ஆக்கப் பணிகள் என்ற நம்பிக்கையில் அனைவரின் சம்மதத்தையும் பெற்று இக்காரியங்கள் நடத்தப் பெறவேண்டும். அதற்கு காலதாமதமாயினும் பரவாயில்லை. விஞ்ஞானிகளும் பொறியியல் வல்லுனர்களும் அரசும் சேர்ந்து  திட்டமிட்டு நிறைவேற்றும் இப்பணிகளில் சம்பந்தப்பட்ட அப்பிரதேசத்தில் பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் மக்களின் மனப்பூர்வமான பங்களிப்பும் இருக்கவேண்டுவது எவ்வளவு அடிப்படையானது. அவசியமானது என்ற கருத்தைத்தான் இந்நாவல் வலியுறுத்துகிறது.

பெருகிவரும் நகரங்களும் நகரங்களின் தேவைகளும் இயற்கை எழிலுக்கும் வளத்துக்கும் விடுக்கின்ற சவாலை நாம் எவ்வாறு சமாளிப்பது என்ற கேள்விக்கு உரிய பதிலை நாம் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும்.

நகரங்கள் மட்டும் என்ன வானத்திலிருந்து வந்து குதித்ததா? எழிலும் வளமும் பொருந்திய கிராமங்களில்ருந்து வசதி படைத்தவர்களும் வறியவர்களும் வந்துகூடி உருவாக்கியவை தானே நகரங்கள்? நகரமே வேண்டாம், ஆற்றை கடக்க ஒரு தோணியே போதும்; நாங்கள் தனி உலகமாக வாழவே விரும்புகிறோம்’ என்று சிந்தூரைப் போல் சொல்லுகின்ற கிராமங்கள் இந்தியாவில் எத்தனை உண்டு? சிந்தூருக்குப் பிரச்சினை சிந்தூர் மட்டுமே. இநதியாவின் பிரச்சினை எண்ணற்ற ‘சிந்தூர்’ களின் வளர்ச்சியும் வாழ்வும் சம்பந்தப்பட்டது.

‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்பது மாறி இந்தியாவிலுள்ள கிராமங்கள் நகரங்களை நோக்கியும், நகரங்கள் கிராமங்களை நாடியும் நம்பியும் சஞ்சரித்துக்கொண்டிருக்கிற ஒரு சங்கம யுகம் இது.

விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சியும், தகவல் தொடர்பு சாதனங்களின் சாதனைகளும் கிராமத்து மனிதனின் தேவைகளையும், நகர மனிதனின் தேவைகளையும் வித்தியாசமில்லாமல் ஒன்றுபடுத்தி வருகின்ற காலம் இது.

எந்த கிராமமும் எந்த நகரமும் எத்தகைய மாற்றங்களுக்கும் இடம் தராமல் என்றும் போல் ஒரே மாதிரியாக இருக்கமுடியாது. நகரங்கள் கிராமங்களையும் கிராமங்கள் நகரங்களையும் பரஸ்பரம் சார்ந்துதான் வாழமுடியும். வளரமுடியும் என்ற நிலையைக் கணக்கில்கொண்டு இந்த இரண்டுக்கும் இசைவும் பரஸ்பரச் சார்பும் சமமாக எந்தப் பகுதிக்கும் பாதிப்பு இல்லாமல் நிறைவேற வேண்டும். அதற்கு அனைத்துப் பகுதி மக்களின் ஆலோசனைகளும் சம்மதமும் வேண்டும். இதைத் தெருவில் வைத்துப் போராடித் தீர்க்க முடியாது. தக்கோர் ஒன்றுகூடி மக்களின் பிரதிநிதிகளை அழைத்து விஞ்ஞானிகளோடும் வல்லுனர்களோடும் சகல அம்சங்களைக் குறித்தும் விவாதித்துத் திட்டமிட்டு ஒரு தேசியக் கடமையாக நிறைவேற்ற வேண்டும்.

அல்லாமல் அரசாங்கம் என்பது ஏதோ அந்நியர்களின் நலனுக்கான அமைப்பு போன்றும் அதிகாரிகள் என்போர் கொலைத்தண்டனை நிறைவேற்றும் கூலிகள் என்றும் அறிவாளிகள் என்போர் பாமர மக்களைத் தூண்டிவிட்டு ஆக்கப் பணிகளுக்குக் குந்தகம் விளைவிப்போர் என்றும் நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் ஏதோ பகைமை என்றும் பார்க்கிற போக்கும் நிலையும் பரவுமானால் ‘சிந்தூர்’ கிராமத்துக்கு ஏற்பட்ட அவலங்கள்தான் தொடரும் என்று இந்நாவல் நயம்பட எச்சரிக்கிறது.

வாசகனின் மனதை விசாலப்படுத்திச் சிந்தனையைக் கிளர்த்துகிற அதே சமயத்தில் அழகியல் உணர்வையும் மனித நேயப் பண்புகளையும் வலியுறுத்தி எழுதப்பட்ட ஆசிரியரின் உன்னத நோக்கம் பாராட்டுதற்குரியது.

எவ்வளவோ உற்பாதங்களுக்கும் அழிவுகளுக்கும் காரணமும் களமுமான இரண்டாம் உலக மகாயுத்தம் எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் உருவாக எல்லா மொழிகளிலும் வித்திட்டதுபோல், சிந்தூரின் அழிவிலிருந்து ‘ஆத்தங்கரை ஓரம்’ என்ற ஓர் அற்புதமான தமிழ் நாவல் விளைந்திருக்கிறது.

ஆசிரியர் இறையன்பு அவர்களை வாழ்த்துகிறேன். வாசகர்களுக்கும் வாழ்த்து.

அன்பு

த. ஜெயகாந்தன்