என்று விடிவு தமிழுக்கு…

நன்றி : ஜூனியர் விகடன்
 
 
”தமிழில் வாதாடக் கூடாது!”
 
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற முழக்கம் எல்லாம் அர சியல்வாதிகளின் வெற்றுக் கூச்சல். அந்தக் கூச்சல்கள் எல்லாம் நீதிமன்றத்தில் செல்லாது’ என்று சொல்லாமல் சொல்லி​விட்டது சென்னை உயர் நீதி மன்றம். 

கடந்த 2-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சிவக்குமாருக்கும் வழக்கறிஞர் பாரிக்கும் இடையே நடந்த வாதப் பிரதிவாதம்தான் நீதிமன்றத்தில் தமிழுக்கான இடம் என்ன என்பதை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. அன்று நீதிமன்றத்தில் நடந்ததை அப்படியே தருகிறோம்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் முன்பு, உரிமையியல் வழக்கு ஒன்றில் வாதாட ஆஜரான வழக்கறிஞர் பாரி, தமிழில் தன்னுடைய வாதத்தை எடுத்து வைத்தார். அப்போது நடந்தது இதுதான்…

நீதிபதி சிவக்குமார்: ”நீங்கள் ஏன் தமிழில் வாதாடு​கிறீர்கள்? ஆங்கிலம்தானே நீதிமன்றத்தின் அலுவல் மொழி. அது உங்களுக்குத் தெரி​யாதா? நீங் கள் ஆங்கிலத்தில் வாதா​டுங்கள்” என்றார்.

வழக்கறிஞர் பாரி: ”நான் பல ஆண்டுகளாக, இந்த நீதிமன்றத்தில் தமிழில்தான் வாதாடுகிறேன். அப்படி வாதா டுவதற்கு இதுவரை யாரும் தடை விதித்தது இல்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தமிழில் வாதாடலாம் என்று தலைமை நீதிபதி இக்பால் உத்தரவிட்டுள்ளார்.”

நீதிபதி சிவக்குமார்: ”தலைமை நீதிபதி அப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்தாரா? எப்போது அப்படி உத்தரவிட்டார்? அந்த உத்தரவின் எழுத்துப்​பூர் வமான நகலை இந்த நீதிமன்றத்தில் உங்களால் சமர்ப்பிக்க முடியுமா?”

வழக்கறிஞர் பாரி: ”அது வாய்மொழியான உத்தரவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்த நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று என்னைப்போன்ற வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்​தினோம். அப்போது, எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தலைமை நீதிபதி இக்பால், ‘நீங்கள் இந்த நீதிமன்றத்தில் தமிழில் வாதாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை’ என்று வாய்மொழியாக உத்தர விட்டார். தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவு வாய்மொழியானதுதான் என்றாலும், அதைப் பின்பற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. தமிழகத்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் நான் தமிழில் வாதாடுவதைத் தடுப்பது, எனது தொழில்செய்யும் உரிமையைப் பறிக்கும் நட வடிக்கை. எனவே, நீதியரசர் என்னை தமிழில் வாதாட அனுமதிக்க வேண்​டும்.”

நீதிபதி சிவக்குமார்: ”தலைமை நீதிபதி​யின் உத்தரவு வாய்மொழி உத்தரவு என்று நீங்கள் சொல்வதை என்னால் ஏற்க முடியாது. உங்களின் வழக்கையும் நான் விசாரிக்க விரும்பவில்லை. எனவே, இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவிடுகிறேன்.”

– இந்த வாதப் பிரதிவாதங்களை அடுத்து, இது​வரை தமிழில் வாதாடி வழக்கு நடத்தி வந்த பல வழக்கறிஞர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வழக்கறிஞர் பாரியைச் சந்தித்தோம். ”இந்திய அரசியல் சாசனம் 348(2)-வது பிரிவின்படி, ஒரு மாநில சட்டமன்றம் விரும்பினால், தீர்மானம் இயற்றி ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று உயர் நீதிமன்றத்தில் பிராந்திய மொழியை அலுவல் மொழியாக அறிவிக்கலாம். இதைப் பின்பற்றி 1970 காலகட்டங்களில் குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய நான்கு மாநில உயர் நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக இந்தி கொண்டு​ வரப்பட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் 1977-ல் வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில், ‘இந்தி உட்பட பிராந்திய மொழிகளை நீதிமன்றங்களின் அலுவல் மொழியாகக் கொண்டு வருவதில் எந்தத் தடையும் இல்லை’ என்று தீர்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகும் தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களுக்குத் தமிழை நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற சிந்தனையே ஏற்படவில்லை.

ஒரு வழியாக, கடந்த முறை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி இதற்காக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். அந்தத் தீர்மானத்துக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதியரசர்கள் அடங்கிய கொலீஜியமும் ஒப்புதல் அளித்தது. கவர்னரின் கையெழுத்துப் பெறப்பட்டு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. மத்திய சட்ட அமைச்சகம் பரிசீலித்துவிட்டு, உள்துறை அமைச் சகத்துக்கு அனுப்பி வைத்தது. அந்தத் தீர்மானம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு சட்டமாக்கப்பட வேண்டும். ஆனால், உள்துறை அமைச்சகம் அதை ஜனாதிபதிக்கு அனுப்பாமல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. இது வழக்கத்துக்கு மாறான நடைமுறை. எதற்காக உச்ச நீதிமன்றத்துக்கு அதை அனுப்பினர் என்று தெரிய வில்லை. அந்தத் தீர்மானத்தைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இப்போதைக்கு தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நீண்ட கடிதம் எழுதிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, இந்த முடிவை மறுபரிசீலனை செய் யுமாறு கோரினார். அவரது கோரிக்கையை, மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. அதன்பிறகு, அதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

இத்தனைக் குளறுபடிகளும் நடைமுறைத் தவறுகளும் நடைபெற்றபோது, தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம்​தான் உள்துறை அமைச்சராக இருந்தார். தமிழகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி. தமிழ் வழியில் பயின்று மிகப்பெரிய விஞ்ஞானியாக உயர்வு பெற்ற அப்துல்​கலாம்தான் நாட்டின் ஜனாதிபதி. இவர்கள் நினைத்து இருந்தால், அப்போதே தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவித்து இருக்கலாம். அப்படிச் செய்யாததால், இப்போது அலுவல்​மொழியாகக்கூட அல்ல, குறைந்த பட்சம் தமிழில் வாதாடவும் தடை ஏற்பட்டுள்ளது” என்று ஆதங்கப்பட்டார்.

இந்தப் பிரச்னை பற்றி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் சமீபத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘அது காலாவதி ஆகிவிட்ட விஷயம்’ என்றார். தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தப் பிரச் னையைக் கையில் எடுத்தால் மட்டுமே, தமிழுக்கு உரிய மரியாதை கிடைக்கும்!

ஜோ.ஸ்டாலின்