‘அமைச்சருக்குப் பங்கு கொடுக்கணும்!’

நன்றி : ஜூனியர் விகடன்

பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மீது ஈரோட்டில் இருந்து ஒரு புகார்! 

ஈரோடு மாவட்டம் ஊத்துக்குழி அருகே 433 ஏக்கரில் பால​தொழுவுக் குளம் உள்ளது. இந்தக் குளத்தில் பல ஆண்டுகளாக அகற்றப்படாத முள் அடிக்​கட்டை​களையும் மரங்களையும் வெட்ட, பொதுப்பணித் துறை மூலம் டெண்டர் விடப்​பட்டது. அந்த டெண்டர் விவ காரத்தில்தான் அமைச்சரின் தலை உருள்கிறது.

புஞ்சை பாலதொழுவுக் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளர் நடராஜ் நம்மிடம் பேசி​னார். ”பாலதொழுவுக் குளத்தில் கருவேலம், வேம்பு, ஈட்டி, வெள்ளைவேலம், பியன் என்று பலவகை மரங்கள் இருக்கின்றன. இங்கே மான், மயில், முயல் எனப் பல உயிரினங்களும் இருக்கின்றன. பத்து வருடத்துக்கு ஒருமுறை குளம் நிறைந்தாலே, சுற்றி உள்ள கிராமங்கள் அத்தனைக்கும் பயன்படும். குளத்தில் உள்ள முட்புதர்களை அகற்ற டெண்டர் விட்டு இருக்கிறார்கள். டெண்டரைப் பற்றி எந்த விளம்பரமோ, அறிவிப்போ வெளியிடவில்லை. அதனால், அ.தி.மு.க-வினர் மட்டுமே இந்த டெண்டரில் கலந்து கொண்டோம். எங்கள் கட்சியைச் சார்ந்த அப்புக்குட்டி என்பவர் 85 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார். அரசுக்கு அதைக் கணக்கு காட்டிவிட்டு இவர்கள் அடுத்து ஒரு கோல்மால் செய்துள்ளனர்.

அதாவது, எங்கள் கட்சியைச் சேர்ந்த சென்னிமலை சேர்மன் கருப்புசாமி தனியாக ஒரு ஏலம் நடத்தினார். அதில், ஊஞ்சப்​பா ளையத்தைச் சேர்ந்த மரக்கடை உரிமையாளர் மாதேஸ்வரன் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். அரசுக்கு 85 ஆயிரம் செலுத்தி விட்டு, மீதி உள்ளதை எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பிரித்துக் கொண்டனர்.

433 ஏக்கர் உள்ள இடத்தில் முள் அடிக்கட்டைகளை அகற்றினாலே, 80 லட்சத்துக்கு மேல் கிடைக்கும். ஏலம் எடுத்த மாதேஸ்வரனோ, முள் அடிக்கட்டைகளை அகற்றியதோடு அல்லா​மல் மரங்களையும் வெட்டினார். நாங்கள் அதைத் தடுத்து விட்டோம். இது அத்தனைக்கும் காரணம் கருப்புசாமிதான். இவர் பொதுப்பணித் துறை அமைச்சர் ராமலிங்கத்துக்கு நெருக்கமானவர். அவர்​கிட்ட நான் கேட்டதற்கு, ‘ இதுல நீ தலையிடாதே.. கட்சிக்காரர்களுக்கும் அமைச்சருக்கும் பங்கு கொடுக்கணும். உன்னால அந்தப் பணத்தைக் கொடுக்க முடியுமா?’னு கேட்கிறார். அமைச்சருக்குத் தெரியாமல் எதுவும் நடந்து இருக்காது. எங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வும், வருவாய்த் துறை அமைச்சருமான தோப்பு வெங்கடாஜலத்தின் கவனத்துக்கு இந்த விஷயத்​தைக் கொண்டு சென்றோம். அவர் அதிகாரிகளை அனுப்பி விசாரித்தார். ஆனாலும், நடவடிக்கை எதுவும் எடுக்க​வில்லை” என்கிறார்.

கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வகுமார், ”எங்கள் கிராமம் வறட்சியால் தவிக்கிறது. யார் ஆட்சிக்கு வந்தாலும் கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்​கிறார்கள். பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் இந்தக் குளம் இருக்கிறது. அமைச்சர் ராமலிங்கத்தின் உதவியோடுதான் குளத்தில் இருக்கும் மரங்களைக் கொள்ளை அடிக்கிறார்கள். இவர்கள் விட்ட ஃபோர்ஜரியான டெண்டரை நான் எதிர்த்தேன். அதனால், என்னை அங்கே நிற்கவிடாமல் துரத்தி​விட்டனர். புதர்களை அகற்றுவதாகச் சொல்லி அங்குள்ள மரங்​களையும் மணலையும் கொள்ளை அடிக்கிறார்கள்” என்று கொந்தளித்தார்.

சென்னிமலை யூனியன் சேர்மன் கருப்புசாமியிடம் கேட்டால், ”இந்த விவகாரத்​தில் யாரோ தூண்டி விடுகிறார்கள். ஏலம் முறைப்படிதான் நடந்தது. அமைச்சருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அமைச்சருக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்று நான் யாரிடமும் சொல்லவில்லை” என்கிறார்.

அமைச்சர் தோப்பு வெங்கடாஜலத்திடம்  பேசினோம். ”குளம் என்னுடைய தொகுதிக்குள் இருந்தாலும், பொதுப்பணித் துறையின் கட்டுப்​பாட்டில் இருக்கிறது. ஏலத்தில் சில பிரச்னைகள் நடந்து இருக்கிறது. அதனால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்தப் பிரச்னையை சுமுக​மாக முடிக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. அதனால் மக்கள் விருப்பப்படி மறுஏலம் நடத்த, அதிகாரிகளையும் அமைச்சரையும் கேட்டு இருக்கிறேன்” என்றார்.

பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம் குற்றச்சாட்டுகளுக்கு என்ன பதில் சொல்கிறார்? ”அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்து முறை​யாகத்தான் ஏலம் நடந்தது. ஏலம் முடிந்து இவ்வளவு நாள் கழித்து புகார் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? என் மீது குற்றம் சாட்டும் பஞ்சாயத்துத் தலைவரும் அந்த ஏலத்தில் கலந்து கொண்டார். அவரால் ஏலம் எடுக்க முடியவில்லை. 80 லட்சத்துக்கு ஏலம் போகும் என்பது எல்லாம் பொய். 40 லட்சம் கொடுத்து விட்டு, அவரையே ஏலம் எடுத்துக்​கொள்ளச் சொல்லுங்கள். எல்லாம் முறைப்படி நடந்து இருக்கும்​போது எதற்காக மறுஏலம் நடத்த வேண்டும்?” என்று கேட்கிறார்.

பஞ்சாயத்துத் தலைவர் மட்டும் இல்லாமல், அ.தி.மு.க-வைச் சேர்ந் தவர்களே இந்த விவகாரத்தில் அமைச்சர் மீது குற்றம் ​சாட்டுகிறார்கள். அப்படி இருக்கும்போது மறுஏலம் நடத்துவதுதானே சரி!

வீ.கே.ரமேஷ், படங்கள்: க.ரமேஷ்