தினமணியின் தடுமாற்ற தலையங்கம் – சொல்லியா தரவேண்டும்?

முதலில் தினமணியின் தலையங்கம் உங்கள் அனைவரின் பார்வைக்காக….

வாக்காளப் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வரலாறு காணாத அளவில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்கு “தினமணி’ வாசகர்களின் சார்பில் வாழ்த்துகள்.

தேமுதிக என்கிற கட்சி தொடங்கப்படாமல் இருந்திருந்தால், ஒருவேளை 2006-லேயேகூட அதிமுக வெற்றிபெற்று தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த பெருமையும்கூட இப்போது அவருக்குக் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், இந்த ஐந்தாண்டு இடைவெளியேகூட ஒருவகையில் பார்த்தால் அவருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும். தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்பதைச் சிந்தித்துச் சீர்தூக்கி, மக்களால் நிராகரிக்கப்பட்ட கடந்த திமுக ஆட்சியின் தவறுகளைத் தவிர்த்து, ஒரு நல்லாட்சியைத் தலைமையேற்று நடத்தும் பக்குவத்தை இந்த இடைவெளி அவருக்கு நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும்.
ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ராஜாஜியும் பெரியாரும் மிக நெருங்கிய நண்பர்கள். “ஆச்சாரியாரே’ என்று ராஜாஜியைப் பெரியாரும், “நாயக்கரே’ என்று பெரியாரை ராஜாஜியும் அழைத்து உரையாடும் அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் இருந்ததை உலகறியும்.
ஒரு கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டு அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்களாம். அப்போது, ஒருவர் ஏதோ ஒரு பிரச்னை பற்றிக் கூறிய கருத்துகள் ராஜாஜிக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த தனது நண்பர் பெரியாரிடம், அந்தப் பேச்சாளரின் கருத்துகளுக்கு எதிரான வாதங்களை முன்வைத்துப் பேசும்படி கேட்டுக் கொண்டாராம் ராஜாஜி.
அடுத்தாற்போல பேசிய பெரியார், தனக்கு முன் பேசியவரின் அத்தனை கருத்துகளையும் தர்க்க ரீதியாக விமர்சித்துப் பேசி, அவரது வாதங்களை உடைத்தெறிந்தார். பேசிவிட்டுத் தனது இருக்கையில் வந்தமர்ந்ததும், “ஆச்சாரியாரே, எதற்காக என்னை அந்தக் கருத்துகளை விமர்சித்துப் பேசச் சொன்னீர்கள்?’ என்று கேட்டாராம் பெரியார். அதற்கு ராஜாஜி “”அதைத்தானே நீங்கள் பிட்டுப் பிட்டு வைத்துப் பேசினீர்கள். அதற்காகத்தான் சொன்னேன்” என்று பதிலளித்ததாகக் கூறுவார்கள்.
ஜெயலலிதா தலைமையில் இன்று ஆட்சிப் பொறுப்பேற்கும் அதிமுக அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்குப் பட்டியல் எதுவுமே போடத் தேவையில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவையில் நடந்த ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான விலைவாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி, திருச்சி, மதுரையில் நடந்த பொதுக்கூட்டங்களிலும், தனது தேர்தல் பிரசாரத்தின்போதும் அவர் பேசிய பேச்சுகளை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தாலே போதும், இந்த அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதும், என்னென்ன செய்யக்கூடாது என்பதும் அவருக்குத் தெரிந்துவிடும்.
கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்குவதில் தொடங்கி, மின் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளைச் சீர்படுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறையை உண்மையிலேயே மக்களின் நல்வாழ்வுக்குத் சேவைசெய்யும் துறையாக மாற்றுவது, காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தீர்வு, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்கள் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பது, தெருவுக்குத் தெரு காளான்களாகி இருக்கும் “டாஸ்மாக்’ கடைகள், கல்விக் கொள்ளை, உயர் கல்வியில் நடக்கும் ஊழல்கள் என்று தமிழகத்தை எதிர்நோக்கும் அத்தனை பிரச்னைகளையும் கடந்த ஓராண்டாக எல்லா கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதா பேசி வந்திருக்கிறார் என்பதால், புதிதாக அவருக்கு எதையும் நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை.
அமோக வெற்றிக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும், தனது தனிப்பட்ட பேட்டிகளின்போதும், ஜெயலலிதாவின் பேச்சில் நிறையவே மாற்றம் காணப்படுகிறது. “நான்’ என்கிற வார்த்தைகள் குறைந்து “நாங்கள்’ என்கிற வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்தது. “நான்’, “எனது’ என்கிற வார்த்தைகளை ஒரு முதல்வர் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல, முடிந்தவரை தவிர்ப்பது அவரது பெருமைக்குப் புகழ் சேர்க்கும். கடைசிவரை எம்.ஜி.ஆர். தனது அரசு என்று கூறிக்கொள்ளாமல், “உங்களது அண்ணாவின் அரசு’ என்று குறிப்பிடுவார் என்பதை நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
மக்கள் மத்தியில் ஜெயலலிதா என்று சொன்னாலே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் ஆட்சி என்கிற கருத்து இருக்கிறது. நிர்வாகத்திலோ, காவல்துறை தனது கடமையைச் செய்வதிலோ, ஆளும் கட்சி அமைச்சர்களோ, தொண்டர்களோ தலையிடுவதை அனுமதிக்காத நிர்வாகம் ஜெயலலிதாவுடையது என்பது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, உண்மையும்கூட. கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்களிலிருந்து, கவுன்சிலர்கள்வரை நடத்திய அதிகாரத் துஷ்பிரயோகங்களும், சட்ட வரைமுறை மீறல்களும், அவர்களது தலைமையில் நடந்த கட்டப் பஞ்சாயத்துகளும், நிச்சயமாக ஜெயலலிதா தலைமையிலான இந்த ஆட்சியில் தொடராது என்று நம்பலாம்.
ஜெயலலிதா தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்கிறது. முதன்முறையாக, சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகளைக் கவனிக்க ஒரு தனித்துறை அமைக்கப்பட்டு அதற்கு ஓர் அமைச்சரும் நியமிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர் ஒருவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும், உதகையைச் சேர்ந்தவர் சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சராகவும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மீன்வளத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சரியான நபர்கள் சரியான துறைக்கு, முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டம் படித்த ஒருவர் சட்டத்துறை அமைச்சராக்கப்படவில்லை என்பது மட்டும்தான் ஒரு சின்ன நெருடல்.
கடந்த ஆட்சியில் நடந்த பல தவறுகள் திருத்தப்பட வேண்டும். தவறான திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் நிராகரிக்கப்படத்தான் வேண்டுமா? கோயம்பேடு பஸ் நிலையத்துக்குக் காட்டப்பட்ட கருணை ஏன் புதிய தலைமைச் செயலகத்துக்கும் காட்டப்படக் கூடாது?
சரித்திரத்தில் தனது பெயர் நிலைபெற வேண்டும் என்பதற்காக, முந்தைய ஜெயலலிதா அரசு கட்ட இருந்த தலைமைச் செயலகத் திட்டத்தைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுக் கருணாநிதி அரசால் கட்டப்பட்டதுதான் புதிய தலைமைச் செயலகம். தேவையில்லாமல் பல கோடி ரூபாயை விழுங்கி அரைக்கோள வடிவில் விதானம் அமைக்கப்பட்டிருப்பது பணவிரயம். ஆனாலும், மக்களின் வரிப்பணமல்லவா விரயம் செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தாமல் இருப்பது என்ன நியாயம்? புதிய தலைமைச் செயலகம், தலைமைச் செயலகமாகத் தொடர்ந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டியது என்று கூறுவார்கள் என்பதைவிட இன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெருந்தன்மையைப் பறைசாற்றி அவருக்குப் புகழ் சேர்க்கும் என்பதும் நிஜம்தானே?
ஒரு சில அனுபவசாலிகளும், பல புதியவர்களும் அடங்கிய இளமைப் பொலிவுடன்கூடிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. இதேபோல, செயல்திறம் மிக்க, நேர்மையாளர்கள் தலைமைச் செயலராகவும், செயலர்களாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுவதைப் பொறுத்துத்தான் நல்லாட்சி அமையும் என்பதை மூன்றாவது முறையாகப் பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்குச் சொல்லியா தரவேண்டும்?
துதிபாடிகளைச் சற்று தள்ளியே இருக்கச் செய்து, தேவையில்லாத விளம்பரங்களுக்கும், பாராட்டு விழாக்களுக்கும் முந்தைய முதல்வர்போல ஆசைப்படாமல், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அதை ஆரோக்கியமான விமர்சனமாக ஏற்றுக்கொண்டு அந்தத் தவறுகளைத் திருத்த முற்படும் ஆட்சியாக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.
இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள்!

இந்த தினமணியின் தலையங்கம், புதிய தமிழக அரசு என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்று நேரிடையாக சொல்லாமல், புதிய முதல்வர் அனைத்தும் அறிந்தவர் என்று நினைப்பது சரியில்லை.

கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்குவதில் தொடங்கி, மின் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளைச் சீர்படுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறையை உண்மையிலேயே மக்களின் நல்வாழ்வுக்குத் சேவைசெய்யும் துறையாக மாற்றுவது, காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தீர்வு, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்கள் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பது, தெருவுக்குத் தெரு காளான்களாகி இருக்கும் “டாஸ்மாக்’ கடைகள், கல்விக் கொள்ளை, உயர் கல்வியில் நடக்கும் ஊழல்கள் என்று தமிழகத்தை எதிர்நோக்கும் அத்தனை பிரச்னைகளையும் கடந்த ஓராண்டாக எல்லா கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதா பேசி வந்திருக்கிறார் என்பதால், புதிதாக அவருக்கு எதையும் நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை.

இவை அனைத்து தாங்கள் அறிந்தது தான் என்றாலும், அவற்றை தங்களுக்கு நினைவு படுத்துவது எண்களின் கடமை என்றல்லவா இருக்க வேண்டும்.

அது என்ன பயமா, பவ்யமா? எதனால் இவ்வளவு பயம் மற்றும் பவ்யம்? ஏன் இந்த தடுமாற்றம்?

தெருவுக்குத் தெரு காளான்களாகி இருக்கும் “டாஸ்மாக்’ கடைகள்

என்ன இது? டாஸ்மாக் என்பதே அம்மாவின் குழந்தை அல்லவா? அது அய்யாவின் ஆட்சியில் வளர்ந்து கல்லூரிக்கு செல்ல துவங்கி உள்ளது.

தாங்கள் உண்மையாலும் தமிழ் சமுகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் என்றால், டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுமாறு அறிவுரை தர வேண்டாமா? அது உங்களின் கடமை அல்லவா? அது சரி டாஸ்மாக்-யை முதல்வர் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் விரும்புகிறீர்கள்.

கல்விக் கொள்ளை, உயர் கல்வியில் நடக்கும் ஊழல்கள்

தமிழகத்தின் பல கல்வி தந்தைகள், முதல்வரின் கட்சியை சார்ந்தவர்கள் அல்லவா? என்ன வேண்டும் முதல்வரிடம், தாங்கள் இதைப்பற்றி தனியாக தலையங்கம் எழுதவேண்டும்.

கடந்த ஆட்சியில் நடந்த பல தவறுகள் திருத்தப்பட வேண்டும். தவறான திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் நிராகரிக்கப்படத்தான் வேண்டுமா? கோயம்பேடு பஸ் நிலையத்துக்குக் காட்டப்பட்ட கருணை ஏன் புதிய தலைமைச் செயலகத்துக்கும் காட்டப்படக் கூடாது?

என்னது கருணையா? அய்யா இது ஜனநாயக நாடு, இங்கே முந்தைய அரசுகளின் முடிவுகள் மதிக்கப்படவேண்டும், இல்லையென்றால் சரியான காரணங்கள் இருக்க வேண்டும். மக்கள் நலனே முதலாவதாக வரவேண்டும். விருப்பு வெறுப்பு இன்றி செயல் பட வேண்டும். இல்லையென்றால் அது தவறு, அதனை தவறு என்று சுட்டிகாட்ட வேண்டியது பத்திரிக்கை தர்மம்.