சாந்தன், முருகன், பேரறிவாளனை தூக்கில் போட வேண்டும்- தங்கபாலு

சென்னை: ராஜீவ் கொலையாளிகள் மூன்று பேருக்கும் வழங்கப்பட்ட தூக்குத் தண்டனை நியாயமானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காங்கிரஸ் தலைவரும், இந்தியத் நாட்டின் பிரதமருமான தலைவர் ராஜீவ் காந்தி படுகொலை, அதன்வழி நீதிமன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற 20 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் தடுக்கப்பட்ட நீதி இப்பொழுது செயல் வடிவம் பெறும் போது அதனை தடுப்பதற்கு புதுப்புது அர்த்தங்கள், புதுப்புது தகவல்கள் மற்றும் மனிதாபிமானம், தமிழர் பண்பாடு, கலாச்சாரம் என்று பல்வேறு கோணங்களில் சில தலைவர்கள், சில கட்சிகள் மற்றும் சிலர் சில்லறை சில்லறையாய் ஆங்காங்கே அறிக்கை விடுவதும், அதற்காக போராடுவதாக அறிவிப்பதும் நாம் எங்கே போகிறோம் என்ற கேள்வி ஒவ்வொரு தனிமனிதனும், ஒவ்வொரு கட்சியும், ஏன் அதன் தலைவர்களும், தொண்டர்களும் எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிது.

இந்தியத் நாட்டின் இணையற்ற தலைவர் ராஜீவ் காந்தி ஒரு தனி மனிதர் அல்ல. அவர் இந்திய தேசிய காங்கிரசின் தலைவர். இந்திய நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகத்தான பிரதமராக விளங்கியவர். அவரது படுகொலை என்பது அதுவும் தமிழ்நாட்டில் எந்த தமிழ் இனத்திற்காக தன் இன்னுயிரை பணயம் வைத்து பாடுபட்ட தலைவரை பலி கொடுத்ததும், தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களே படுகொலை செய்தது இன்னும் ஒவ்வொரு தமிழன், இந்திய குடிமக்கள் அனைவரது நெஞ்சங்களிலும் தீப்பிழம்பாக உள்ளது.

சட்டத்தின் ஆட்சியை மதிக்கிற இந்தியாவில் சட்டம் வழங்கிய தீர்ப்புகளை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமையாகும்.

ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்தம் அப்பா, அம்மா, உறவினர்கள், மனைவி மற்றும் உறவினர்கள் என்று அவர்களுக்காக வாதாடுவது தனிப்பட்ட முறையில் இயல்பான ஒன்று. அதே நிலையில் தான் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், தோழர்களும் தங்கள் கட்சியின் தலைவர் படுகொலைக்கு காரணமானவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, அதற்கான தண்டனையை வழங்கப்பட்டபோது அதை வரவேற்பதும், அதை நிறைவேற்ற வேண்டுவதும் இயல்பான ஒன்று. அதில் தார்மீகமும், தர்மமும் கூட உண்டு.

இன்றைக்கு தங்கள் கட்சியின் தலைவர் அல்லது தங்கள் குடும்பத்தின் தலைவர் எவராவது ராஜீவ் காந்தியைப் போல படுகொலை செய்யப்பட்டிருந்தால், அதற்குப்பின் படுகொலையாளர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றிருந்தால், அப்படி தண்டனை பெற்றவர்களை விடுவிக்க வேண்டுமென்று அந்தக் கட்சித் தலைவர் மற்றும் அந்த கட்சியைச் சார்ந்த தொண்டர்கள், அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்பட வேண்டுமென்று கூறுவார்களா? அல்லது மன்னிப்பு வழங்க வேண்டுமென்று மன்றாடுவார்களா? அல்லது ஆர்ப்பாட்டம் தான் நடத்துவார்களா?.

தனக்கு வந்தால் ஒரு நீதி! மற்றவருக்கு வந்தால் வேறு நீதி என்று வரலாற்றுப் பிழைகளை தினந்தினம் அரங்கேற்றிக் கொண்டிருக்கும் அன்புள்ள கட்சித் தலைவர்களே!, அதன் தொண்டர்களே! அதன் தோழர்களே! பகுத்தறிவு மற்றும் தமிழுணர்வு, மனிதானிமானம் பற்றி மணிக்கணக்கில் வாதாடுகிற நண்பர்களே உங்கள் நெஞ்சில் ஈரம் இருந்தால் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்?.

இதே நிலை உங்கள் கட்சிக்கு அல்லது குடும்பத்திற்கு வந்ந்தால் உங்கள் குடும்பத்தினர் என்ன நிலையில் இருந்ப்பார்கள் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா? அகிலம் போற்றும் சோனியா காந்தி 120 கோடி மக்கள் வாழும் மகத்தான இந்திய தேசத்தில் பிரதமர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு மக்களுக்காக பணியாற்றுவேன் என்று மகுடம் சூட்டிக் கொண்ட அந்த மகத்தான தலைவி, அவரது அருமைக் கணவர் ராஜீவ் காந்தியை இழந்து வாடிக் கொண்டிருக்கிறாரே? அவருக்கு யார் பதில் சொல்லப் போகிறீர்கள்?

அதேபோல அருமை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தன் தந்தையை இழந்து 20 ஆண்டுகளாக துடித்துக் கொண்டிருக்கிறாரே அந்த தம்பியின் துடிப்பிற்கு உங்களால் மருந்து போட முடியுமா?

அருமை சகோதரி பிரியங்கா தன் தந்தையை இழந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக தவியாய் தவிக்கிறாரே, அந்த தங்கையின் உணர்வுக்கு யார் பதில் சொல்ல முடியும்?

காங்கிரஸ் கட்சியும், கோடிக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் அனைவரும் சுதந்திரத்திற்காகவும், ஜனநாயகத்திற்காகவும் சுதந்திர வேள்வி தொடங்கி இன்று வரை பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்க ‘தனக்கென வாழா, பிறர்க்கென வாழும் தகைமைசால் குடும்பமாய்” இந்தியத் நாட்டின் பெருமைக்காக இந்திரா காந்தி, அதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி என தொடர்கதையாய் தியாகங்களை வழங்கி வரும் இந்த தலைமைக்கும், இந்த இயக்கத்திற்கும் இணையான தலைமை எங்கே? இந்த தலைவர்களுக்கும், அவர்தம் சீரிய பணிகளுக்கும் இணையானவர்கள் யார் இந்தியாவில்?.

இந்தியாவில் தொடர்ந்து வரும் ஜனநாயகமும், சுதந்திரமும் நிலைக்க வேண்டுமானால் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும்.

ஒரு சிலருக்காக சட்டம் வளைக்கப்படுமேயானால், அல்லது சட்டத்தின் ஆட்சி சீர்குலைக்கப்படுமேயானால், இந்தியாவில் மீண்டும் 65 ஆண்டுகளுக்கு பின்னோக்கி தான் செல்ல வேண்டும்.

ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத சில தனி நபர்கள், சில கட்சிகள் சட்டத்திற்கு புறம்பாக பேசுவதும், எழுதுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என நடத்துவதும், அதற்காக அப்பாவி தமிழினத்தை அழைப்பதும், அவர்களை தவறாக நடத்துவதும், குறிப்பாக ஏதுமறியத இனம் புரியாத இளம் சிறார்களை, மாணவர்களை போராட அழைப்பதும், தவறான முன்னுதாரணங்களை உருவாக்கி தமிழினத்தை அழித்து விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நாடாளுமன்ற- சட்டமன்ற ஜனநாயகம் இருக்காது. நீதிமன்றங்கள் இருக்காது. அரசுகள் இருக்காது. ஆட்சிகள் இருக்காது. யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம். அல்லது தனியாக தங்களுக்கென தனி ஆட்சி உருவாக்கிக் கொண்டு தாறுமாறாக எதை வேண்டுமானாலும் செய்யலாம். கொலை செய்யலாம், கொள்ளையடிக்கலாம். கேட்பதற்கு யார் இருப்பார்கள்?.

மீண்டும் ஜனநாயக பாதையிலிருந்து இந்தியா என்ற மாபெரும் தேசம் திசைமாறிப் போக வேண்டுமா? என்பதை கனிவுள்ள கணவான்கள் கனிவோடு எமது கருத்துக்களை பரிசீலிப்பார்களாக. அதன் பிறகாவது சட்டத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் தொடர்வதற்கு ஒத்துழைப்பு கொடுப்பார்களாக.

இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவில் வாழும் அத்துணை குடிமக்களுக்கும், ஒப்பற்ற எல்லோருக்கும் இணையான அந்தஸ்தை, சமூக நீதியை, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தி வரும் பேரியக்கம். அந்த பேரியக்கத்தின் சார்பில் உண்மையான தமிழின மக்களை, தமிழினத்தின் பண்பாட்டை, நாகரீகத்தை கட்டிக்காத்து, கடமைகளை மறந்துவிடாமல் தொடர்ந்து ஜனநாயக நெறிகளை காப்பதற்கு சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம். இது ஒன்று தான் ஒவ்வொரு தமிழின மக்களையும், இந்திய மக்களையும் பாதுகாத்து பண்போடு நடந்து வர வழியாகும், வாய்ப்பாக அமையும் என்று கூறியுள்ளார் தங்கபாலு.

பின்னர் சத்திய மூர்த்தி பவனில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் சில நிகழ்வுகள் நடக்கிறது. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்களை சில அரசியல் கட்சிகள், சில சுயநலவாதிகள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இது ஆபத்தானது.

ராஜீவ் கொலையாளிகளுக்கு சட்டம் வழங்கிய தீர்ப்பின்படி தூக்கில் போட வேண்டும். இதை நிறைவேற்றுவது ஒவ்வொரு ஆட்சியாளர்களின் கடமை. கொலையாளிகள் 3 பேரும் எல்லா மேல்முறையீடுகளையும் கடந்து வந்து விட்டார்கள். எனவே தண்டனையை நிறைவேற்றத் தான் வேண்டும் என்றார். பின்னர் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்,

கேள்வி: இது பழிக்கு பழி ஆகாதா?

பதில்: காங்கிரஸ் யாரையும் பழிவாங்கும் கட்சி அல்ல. நாங்கள்தான் எங்களை அழித்து கொண்டுள்ளோம். இந்திரா, ராஜீவை இழந்துள்ளோம். இன்னும் இழக்க என்ன உள்ளது?

கேள்வி: இந்திரா கொலையாளிகள் கூட மன்னிக்கப்பட்டார்கள். ராஜீவ் கொலையில் சிக்கியவர்கள் அப்பாவு தமிழர்கள் என்பதால் மன்னிக்க கூடாதா?

பதில்: நாங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பார்த்து பேசவில்லை. எல்லாம் ஒரே தேசம்தான். தனிநபர்களுக்கு காங்கிரஸ் எதிரி அல்ல.

கேள்வி: ஒரு கொலைக்கு கொலைதான் தீர்வா?

பதில்: அது தீர்வல்ல. ஆனால் சட்டத்துக்கு வேலை கிடையாதா? அது தன் கடமையை செய்ய வேண்டும் அல்லவா?

கேள்வி: தி.மு.க. தலைவர் கருணாநிகி கூட மரண தண்டனை தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளாரே.

பதில்: அது அவரது கருத்து. நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை கூறியுள்ளோம்.

கேள்வி: ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்கிறீர்கள். ஆனால், இலங்கை தமிழர்களை கொடூரமாக கொலை செய்த அதிபர் ராஜபக்சேவுக்கு இந்தியாவில் காங்கிரஸ் வரவேற்பு கொடுக்கிறதே?

பதில்: இலங்கை வன்முறையை காங்கிரசும் கண்டித்துள்ளது. எங்கு படுகொலை நடந்தாலும் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கும் என்றார்.