நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?

இந்த 100 நாள் வேலைத்திட்டங்களின் கீழ் முறைகேடுகள் நடந்திருப்பதாக மத்திய தணிக்கைக்குழுக்களின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளன. இந்தியா முழுவதும் சுமார் ரூ.935 கோடி அளவிற்கு இலஞ்சம், வேலை செய்யாத நபர்களின் பெயரில் பணம் ஏமாற்றுவது, அதிக விலை கொடுத்து பொருட்கள் வாங்குவது என முறைகேடுகள் நடந்துள்ளன. இவை கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ரூ. 12.5 கோடி மட்டுமே (1.34%) மீட்கப்பட்டுள்ளது.

இந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் அதிகமான பெண்கள் பங்கேற்று கிராமப்புற பணிகளை ஆக்கப்பூர்வமாக சாதித்ததை எல்லாம் இந்த முறைகேடுகள் மூடி மறைத்துவிட்டன. அல்லது இந்த முறைகேடுகளைக் காட்டி மக்களுக்குப் பலனளிக்கும் இந்தத் திட்டங்கள் இழிவுபடுத்தப்படுகின்றன. முறைகேடுகளில் ஈடுபட்டது, அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடங்கிய ஊழல் கிரிமினல் கூட்டம்தான். ஆனால் பழி உழைக்கும் மக்களின் மீது.
இந்த கிரிமினல் கூட்டத்திடமிருந்து 100 நாள் வேலைத்திட்டத்தை மீட்டெடுக்கவும், இத்திட்டத்தை நேரடியாக உழைப்பாளர்களே நிர்வகிக்கவும் ஏற்ற வகையில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பங்கேற்கும் உழைப்பாளர்கள் இணைந்து தங்களுக்குள் ஒரு சங்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அனைத்து முறைகேடுகளை  தடுத்து நிறுத்தவும், அரசு நிர்ணயிக்கும் கூலியை முழுமையாக உழைப்பாளருக்குக் கொண்டு சேர்க்கவும் முடியும். மேலும் விவசாய வேலைகளை, அது சார்ந்த பராமரிப்புப் பணிகளை 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் கொண்டு அந்து நிரந்தரப் பணியாக மாற்றவும் போராட முடியும்.

2000 பெண்கள் இணைந்து இவ்வேலைத்திட்டத்தின் கீழ், வறண்டு கிடந்த ஜவ்வாது மலை நாக நதி நகரக் கழிவுகளால் நாசமடைந்து ‘கூவமாக’ மாறியதை தங்களது கூட்டு உழைப்பால் மீட்டுருவாக்கம் செய்து இந்த நதியை மீண்டும் நீரோடும் ஜீவநதியாக மாற்றியுள்ளனர். இந்த மாற்றத்தைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட நிர்வாகம் பிற நதிகளான, அகரம் ஆறு, கவுண்டன்ய மகாநதி, மலட்டாறு, பாம்பாறு, மத்தூர் ஆறு ஆகிய ஆறுகளையும் இத்திட்டத்தின் கீழ் சீரமைத்து வருகிறது. இதற்காக உழைத்தவர்களைப் பற்றி கடந்த 20-10-2021 ஆனந்த விகடன் இதழில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.

நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 2021-22 ஆண்டில் ஏறக்குறைய 2.92 கோடி பேர் வேலை செய்துள்ளனர். குறிப்பாக வேலைவாய்ப்புகள் இல்லாமல் முடங்கிய கொரோனா காலத்தில், ஏழை எளிய கூலி விவசாயிகளுக்கு வாழ்வு கொடுத்தது இந்த 100 நாள் வேலைத்திட்டம் தான் என்றால் மிகையாகாது.
இது போன்ற வேலைவாய்ப்பு உறுதித் திட்டங்கள் அனைத்துமே மக்களை சாந்தப்படுத்தும் தற்காலிக ஏற்பாடுகள்தான். ஆனால் கோடிக்கணக்கான மக்களை பட்டினிக் கொடுமையிலிருந்து இத்திட்டங்கள் மீட்டுள்ளதை நிராகரிக்க முடியாது. அதனால் தான் விவசாய சங்கத் தலைவர்கள் தற்காலிக ஏற்பாட்டை நிரந்தரமாக்க விவசாய வேலைகளை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்று கோருகின்றனர்.