வரலாறு காணாத வறட்சி… விளம்பரங்களிலோ புரட்சி !

ரோம் நகரம் தீ பிடித்து எரிந்தபோது, பிடில் வாசித்தான் நீரோ மன்னன்’ என்கிற வரலாற்று வாசகம்… தற்போதைய, டெல்டா விவகாரத்துக்கு கனகச்சிதமாக பொருந்தும்! வரலாறு காணாத வறட்சியால்… கடன் வாங்கி, கண்ணீர்விட்டு வளர்த்த பயிர்கள் கருகுவதைக் காண சகிக்காமல், விரக்தியின் உச்சக்கட்டமாக உயிரையே மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் டெல்டா மற்றும் அதையட்டிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிலர். இத்தகையக் கொடுஞ்சூழலில்… டெல்டா பகுதியை, ஏதோ ரட்சகர் போல ஜெயலலிதா காப்பாற்றிவிட்டதாக பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமாக வண்ண விளம்பரங்கள் பளபளப்பதை வேறு எப்படி சொல்ல முடியும்?

‘பயிர் காத்து…
படுகை விவசாயிகளின் உயிர்காத்து…
தலைக் காவிரியினை
தமிழகம் மீட்டும் வரும்
காவிரித் தாயே !
புரட்சித் தலைவி அம்மா அவர்களே…
-காவிரி டெல்டா விவசாயிகளின் சார்பில் தங்களுக்கு

கோடானு கோடி நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.’

-இப்படிப்பட்ட வாசகங்களோடு ஜெயலலிதாவைப் பாராட்டி… ‘மன்னார்குடி’ ரங்கநாதன், ‘கக்கரை’ சுகுமாரன் உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்களின் பெயர்களில் நாளிதழ்களில் வண்ண வண்ணமாக விளம்பரங்கள் வெளியாக, விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக… கிட்டத்தட்ட மற்றொரு விதர்பாவாக மாறிவிடுமோ என்கிற அச்சம் டெல்டா முழுக்கவே பரவிக்கிடக்கிறது! ஆனால், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல், நிவாரணம் என்று எதையுமே இதுவரையிலும் அறிவிக்கவில்லை முதல்வர் ஜெயலலிதா.

‘விபத்துகளில் இறப்பவர்கள், மாரடைப்புகளில் இறப்பவர்கள் என்று பலருக்கும் இரங்கல் தெரிவித்து, நிவாரணம் அறிவிக்கும் முதல்வர், விவசாயிகள் விஷயத்தில் மட்டும் பாராமுகமாக இருக்கிறாரே’ என்று மிகுந்த வேதனையில் இருக்கிறார்கள் விவசாயிகள். இதுவரை 12 விவசாயிகளின் உயிர் பறிபோயும், கர்நாடக மாநிலத்தில் இருந்து தண்ணீரைப் பெற முடியவில்லை. இன்னமும் அரசிதழில்கூட தீர்ப்பு வெளியிடப்படவில்லை. இத்தகையச் சூழ்நிலையில், காவிரி நதி நீர் பிரச்னையே முடிந்தது போல, நன்றி தெரிவித்திருப்பதுதான் விவசாயிகளின் கோபத்துக்குக் காரணம்.

”இந்த விளம்பரங்களால் விவசாயிகள் பெரும் மன உளைச்சல் அடைந்திருக்கிறார்கள். விவசாயிகள் சங்க தலைவர்கள் எல்லோரையுமே நல்லவர்கள் என்றோ… நாணயமானவர்கள் என்றோ நம்பி விடக்கூடாது. விவசாயிகளின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி குறுக்கு வழியில் ஆதாயம் அடைபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். விளம்பரம் கொடுத்திருக்கும் தலைவர்களில் ஒருவர், எப்போதுமே விவசாயிகளுக்கு எதிராகத்தான் செயல்படுவார். பல தலைவர்கள், ஆளும்கட்சிகளுக்கு ஆதரவாக இயங்கியே ஆதாயம் அடைந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள் போல இவர்களும் செயல்படுவது அநாகரிகமான செயல். இந்த விளம்பரங்கள் கண்டனத்துக்குரியவை” என்று பொங்கிப் பாய்கிறார்… இயற்கை உழவர் இயக்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் கரிகாலன்.

இதுகுறித்து, ‘மன்னார்குடி’ ரங்கநாதனிடம் கேட்டபோது… ”பாராட்டு கொடுத்தோம்… வந்திருக்கு. இதுக்கு மேல சொல்றதுக்கு, ஒண்ணும் இல்ல” என கோபத்தோடு பேச்சை முடித்துக் கொண்டார்.

”இப்படி ஒரு விளம்பரம் கொடுக்குற அளவுக்கு நான் அநாகரிகமான ஆள் இல்லை. அமைச்சர் வைத்திலிங்கம்தான், எனக்கே தெரியாம, என் பேர்ல இப்படி ஒரு விளம்பரத்தைக் கொடுத்துருக்காரு” என்று பாய்ச்சல் காட்டினார் ‘கக்கரை’ சுகுமாரன்.

ஆனால், அமைச்சர் வைத்திலிங்கமோ, ”விளம்பரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் பேர்ல, நான் கொடுத்திருந்தா, என் மேல வழக்கு போட வேண்டியதுதானே?” என்று திருப்பிக் கேட்கிறார்.

டெல்டா மட்டுமல்லாது… திண்டுக்கல் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் என்கிற பெயரில்கூட, காவிரி பிரச்னைக்காக ஜெயலலிதாவைப் பாராட்டி விளம்பரம் கொடுக்கப்பட்டிருப்பதுதான் வேதனை!

நன்றி : பசுமை விகடன்