(25th August 2009) பா‌ல் ‌கொ‌ள்முத‌ல் ‌விலை‌க்கு வரவே‌ற்பு‌; பா‌ல் ‌வ‌ிலை உய‌ர்வு‌க்கு ஜெயல‌லிதா எ‌தி‌ர்‌ப்பு

Chennai: August 25th 2009 : ஆவின் பால் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளதற்கு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா, பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை வரவேற்கும் நிலையில், பால் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இ‌‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இரண்டு மாதங்கள் ஆவதற்குள், தி.மு.க அரசு தன் பங்கிற்கு பாலின் விலையை மூன்றாவது முறையாக உயர்த்தி மக்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது. ஆண்டுக்கு ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது போல், தவறாமல் ஆண்டுக்கு ஆண்டு பாலின் விலையை உயர்த்திக் கொண்டு இருக்கும் தி.மு.க அரசிற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தி.மு.க அரசு பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்குள் முதல் முறையாக 6.3.2007 அன்று பாலின் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 25 காசு வீதம், 12 ரூபாய் 50 காசில் இருந்து 13 ரூபாய் 75 காசு என்ற அளவிற்கு உயர்த்தப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக, 2008 ஆம் ஆண்டு பாலின் விலை லிட்டருக்கு 2 ரூபாய் வீதம், அதாவது 13 ரூபாய் 75 காசில் இருந்து 15 ரூபாய் 75 காசாக தி.மு.க அரசால் உயர்த்தப்பட்டது.

தற்போது மூன்றாவது முறையாக லிட்டருக்கு 2 ரூபாய் வீதம், 15 ரூபாய் 75 காசில் இருந்து 17.75 காசாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். மாதாந்திர அட்டையில்லாமல் தினசரி ரொக்கமாக கொடுத்து வாங்குபவர்களுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் 50 பைசா வீதம் 18 ரூபாயிலிருந்து 20 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

நிலைப்படுத்திய பால், நிறை கொழுப்புச் சத்து பால் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 4 ரூபாய் வீதம் உயர்த்தப்பட்டுள்ளன. அதாவது குறைந்தபட்சம் 2 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 4 ரூபாய் வரை பாலின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் இதர பால் பொருட்களின் விலைகள் அறிவிப்பு இல்லாமலேயே உயர்ந்து கொண்டிருக்கின்றன.

எனது ஆட்சிக் காலத்தில் 2004 ஆம் ஆண்டு, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலை உயர்த்திக் கொடுக்கப்பட்டது. அதே சமயத்தில் நுகர்வோர் நலன் கருதி பாலின் விற்பனை விலை உயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் என இருதரப்பினரும் பயன் அடைந்தனர். ஆனால் தி.மு.க ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதாவது மூன்று மாதங்களுக்குள் அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் உட்பட அனைத்துப் பொருட்களின் விலையும் பெருமளவு உயர்ந்து விட்டன. இந்தச் சூழ்நிலையில், பாலின் விலையை தி.மு.க அரசு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள இந்தச் சூழ்நிலையில், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று, பால் கொள்முதல் விலையை உயர்த்தியதை வரவேற்கும் அதே சமயத்தில், நுகர்வோர் நலன் கருதி, பால் விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறுமாறு தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியுள்ளார்.