இந்த குளறுபடிகள் தவிர்க்கப்பட வேண்டியவை

இந்த செய்தி இன்று இணையத்தளத்தில் வந்தது, நாளை தமிழக நாளிதழ் களில் வருமா என்று தெரியவில்லை.

நேற்று சென்னையில் இருந்து எனது நண்பருடன் பேசிய பொழுது, அதிமுகவின் ஆட்சிகளில் வழக்கமாக நடக்கும் இந்த தவறு தனது நினைவில் இருபதாக தெரிவித்தார் அதேபோல் இந்த செய்தியை இணையத்தில் பார்த்தவுடன் இதை எழுதுகிறேன்.

இந்த வெற்றி மக்கள் உங்களின் கடந்த கால நல்லாட்சிக்கு கொடுத்தது அல்ல.

திமுகவின் தவறான ஆட்சிக்கு மக்கள் கொடுத்த மதிப்பெண்கள். மிண்டும் நாங்கள் இந்த மாதிரியான தவறுகளை தாங்க முடியாது. இந்த தவறுகள் தொடருந்து நடந்தால் நிங்களும் தூக்கி எறியப்படுவிர்கள்.

போலீஸாரும் தற்போது அதிமுகவின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்வதாக ஒரு கருத்து எழுந்துள்ளது.

நேற்று ஜெயலலிதா தலைவர்களின் சிலைகள், நினைவிடங்களுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அண்ணா சாலையில் உள்ள எம்.ஜிஆர் சிலை, பெரியார் சிலை மற்றும் அண்ணா சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்தார். இதையடுத்து ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டு வந்தனர். இதையடுத்து போக்குவரத்தையே நிறுத்தி விட்டனர் போலீஸார். இது வாகன ஓட்டிகளை கடும் அதிருப்திக்குள்ளாக்கியது. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்திற்குப் போக்குரவத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் அண்ணா சாலையில் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்தது.

போக்குவரத்துப் போலீஸார் தேவையில்லாமல் வாகனங்களை நிறுத்தி வைத்ததாக மக்கள் அதிருப்தி அடைந்தனர். ஒருபக்கம் வாகனங்களை சிக்கல் இல்லாமல் செல்ல வழி வகுத்து விட்டு போக்குவரத்தைக் கட்டுப்படுத்தாமல் இப்படியா போக்குவரத்தை முடக்கி வைப்பது என்று அவர்கள் முனு முனுத்தனர். அதற்குள்ளேயே இப்படியா என்று அவர்கள் சலித்துக் கொண்டனர். கடந்த 1991 முதல் 96 வரை ஆட்சியில் இருந்த அதிமுக, அடுத்த தேர்தலில் தோல்வி அடைய இந்த போக்குவரத்துக் குளறுபடிகளும் ஒரு முக்கியக் காரணம்.

சென்னை நகரில் ஜெயலலிதா எங்கு சென்றாலும் உடனே அந்தப் பாதையில் போக்குவரத்தை நிறுத்தி விடுவார்கள் போலீஸார், ஜெயலலிதா போன பின்னர்தான் போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும். இது மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கியது மட்டுமல்லாமல் அதிமுக மீதான அதிருப்தியையும் ஏற்படுத்தியது.

தற்போது மிகப் பெரிய வெற்றியுடன் கோட்டைக்குத் திரும்பியுள்ள அதிமுக இந்த விஷயத்தில் மிகக் கவனமுடன் இருப்பதே நல்லது. தேவையில்லாமல் பல மணி நேரத்திற்குப் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதால் மக்கள் அவதிப்படுவார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களுக்கு ஆட்சி மீதும், அதிமுக மீதும் அதிருப்தியும் வந்து விடும் என்பதை முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதா மனதில் கொள்ள வேண்டும்.

நல்லாட்சியைத் தருவது மட்டும் ஒரு கட்சிக்கு முக்கியமானதல்ல. அவர்களையும் அறியாமல் கெட்ட பெயரை சம்பாதிப்பதையும் கண்காணித்து தடுக்க வேண்டியதும் அவசியமானது.