நன்றி: ஜூனியர் விகடன்
அன்பிற்கினிய சகோதரி… வணக்கம். வளர்க நலம்.
உங்களுக்கு இவ்வளவு விரைவில் இன்னொரு கடிதம் எழுத நேரிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் காலம் தந்த பாடத்தில் ஞானம் பெற்றிருப்பீர்கள் என்று நம்பினேன். உங்கள் அணுகுமுறையில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கக்கூடும் என்று மக்களும் நம்பி மகிழ்ச்சிகொண்டனர். ஆனால், எந்த வகையிலும் நீங்கள் மாறவே இல்லை என்ற அதிர்ச்சி தரும் உண்மை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. கூட்டணிக் கட்சிகளை நீங்கள் கையாளும் முறை கவலை தருகிறது. உங்கள் ஏவல் கூவல்களாகவும், எடுபிடிகளாகவும் எல்லாக் கட்சிகளும் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?
நீங்கள் திரைப்பட உலகத்தில் இருந்து வந்தவர். ஒரு படத்தின் வெற்றி ஒருவரால் மட்டுமே வாய்த்துவிடாது என்ற உண்மை மற்றவர்களைவிட உங்களுக்கு தெளிவாகத் தெரிந்திருக்கும். எம்.ஜி.ஆர். – சிவாஜி என்ற கலையுலக இமயங்களே நடித்திருந்தாலும், கதையின் போக்கும், இயக்குநரின் திறமையும். கவிஞரின் கருத்தும். இசையமைப்பாளரின் நெஞ்சைக் கவர்ந்திருக்கும் இசையும், ஒளிப்பதிவாளரின் நேர்த்தியும், எடிட்டரின் கூர்மையான பார்வையும் சேர்ந்து மக்கள் ரசனைக்கு ஏற்றாற்போல் அமைந்தால்தான், படத்தின் வெற்றி நிச்சயம். பலருடைய கூட்டு உழைப்பில்தான் ஒரு படம் உருவாகிறது. அந்தப் படத்தின் வெற்றியில் ‘லைட் பாய்’ உழைப்பும் சேர்ந்திருக்கிறது. எம்.ஜி.ஆரும், சிவாஜியும் தங்கள் முகங்களைக் காட்டினாலே போதும் என்று ஆணவமாக நினைத்து இருந்தால், அடுத்த படத்திலேயே காணாமல் போயிருப்பார்கள். அவர்களுக்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தியும், கே.வி.மகாதேவனும், கண்ணதாசனும், வாலியும் திறமைமிக்க இயக்குநர்களும் தேவைப்பட்டனர். அப்படிப் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய படங்கள்கூட சில நேரங்களில் எடுபடாமல் சுருண்டுவிட்டன. நீங்களும், எம்.ஜி.ஆரும் இணைந்து நடித்த எல்லாப் படங்களும் வெள்ளிவிழாவா கொண்டாடின? கொஞ்சம் யோசியுங்கள்.
கடந்த ஐந்து ஆண்டுகளும் நீங்கள் பொறுப்புமிக்க எதிர்க் கட்சித் தலைவராகச் செயல்பட்டீர்களா என்று உங்கள் மனச்சான்றைக் கேட்டுப் பாருங்கள். பையனூர் பங்களாவிலும், கொடநாடு எஸ்டேட்டிலும் நீங்கள் இளைப்பாறிய காலம்தான் அதிகம். அறிக்கைகளில் உங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டதற்கு மேல், கூடுதலாக நீங்கள் ஒன்றும் செய்துவிடவில்லை. நம் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தால் சிறப்பாக மந்திரி வேலை பார்ப்பார். அதிகார பீடத்தில் இருந்து காங்கிரஸ் கவிழ்ந்தால், கறுப்பு அங்கியுடன் உச்ச நீதிமன்றத்தில் போய் உட்கார்ந்துவிடுவார். அவரைப்போன்றுதான் நீங்களும் மக்கள் ஆதரவுடன் முதல்வரானால், கோட்டைக்குப் போவீர்கள். தோற்றுவிட்டால் கொடநாடு செல்வீர்கள். தேர்தல் வரும்போதுதான் நீங்கள் ஓய்விடத்தில் இருந்து வெளிவருவது வழக்கமாகிவிட்டது.
ஐந்து ஆண்டுகளில் நீங்கள் சட்டமன்றத்துக்கு எத்தனை முறை சென்று மக்கள் பிரச்னைகளைப் பதிவு செய்தீர்கள்? நடந்து முடிந்த ஐந்து ஆண்டுகளில் உண்மையான எதிர்க் கட்சிகளாக இடதுசாரி இயக்கங்களும், வைகோவின் ம.தி.மு.க-வும்தான் இயங்கின என்பது மறுக்க முடியாத உண்மை. இது உங்களுக்குக் கசக்கத்தான் செய்யும். கலைஞருக்கும் உங்களுக்கும்… இச்சகம் பேசுபவரைத்தான் பிடிக்கும்.
உங்கள் கூட்டணியில் இடம் பெற்றவர்களின் தகுதி அறிந்து நீங்கள் நடக்கத் தவறிவிட்டீர்கள். 80 வயது கடந்த நிலையிலும், ஒரு செப்புக் காசைக்கூடத் தன் குடும்பத்துக்கு சேர்க்காமல், மக்கள் நலனுக்காகவே தன் வாழ்வை முற்றாக அர்ப்பணித்துவிட்ட தோழர் நல்லக்கண்ணுவைப்போல் ஒரே ஒரு மனிதரை உங்கள் கட்சியில் காட்ட முடியுமா? மணல் கொள்ளை குறித்து நீங்கள் அறிக்கைவிட்டதோடு சரி. நீதிமன்றத்தில் போய் நேரில் நின்று அந்த பகல் கொள்ளையைத் தடுக்கத் தடையாணை வாங்கிய அந்த முதுகிழவர் நல்லக்கண்ணுக்கு தாமிரபரணி நதி, நாளும் நன்றி சொல்கிறது. ஆறுகளின் பாஷை அறிந்தவர்களுக்கு அது புரியும்.
தோழர் தா.பாண்டியனைப்போன்ற ஆழ்ந்த அரசியல் ஞானம்கொண்ட ஒரு நபரை, உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களில்கூட நீங்கள் காட்ட முடியாது. மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ-வான நன்மாறனைப்போன்று ஏழையாகவே வலம் வரும் ஓர் ஊராட்சி உறுப்பினரையாவது உங்கள் கட்சியில் அடையாளம் காட்டக்கூடுமா? தோழர்கள் ஜி.ராமகிருஷ்ணனும், சவுந்திரராஜனும் தங்கள் அரசியல் வாழ்வில் பொதுச் சொத்தை அபகரித்தவர்கள் என்று யாரேனும் பழி பேச முடியுமா? இடதுசாரி இயக்கங்களின் ஆதரவு இத்தனை நாளும் உங்களுக்கு இருந்ததற்காக, ஆளும் கட்சிக்கு எதிராக நீங்கள் பேச வேண்டியதை எல்லாம் பேசி, உங்களுக்குச் சாதகமாகக் களம் அமைத்துக் கொடுத்த அவர்களை உங்கள் கட்சி கை கூப்பிக் கொண்டாட வேண்டும்.
கூழாங்கற்களுக்கு இடையில் இருந்தால், மாணிக்கத்தின் மரியாதை புரியாது. இன்று வைகோவின் நிலைமையும் அதுதான். பெரியார் வளர்த்தெடுத்த திராவிட இயக்கத்தின் உண்மையான எச்சமாக உலா வருபவர் வைகோ. அவர் ஒருபோதுமே பொழுதுபோக்கு அரசியல்வாதியாக இல்லை. கொண்ட கொள்கைகளுக்காக அவர் கண்ட சோதனைகள் அதிகம். தனி இயக்கம் கண்ட காலம் தொட்டு, இன்று வரை அந்த மனிதர் கலைஞரோடும், உங்களோடும் இணக்கம்கொள்ளாமல், பெரியாருக்குப் பின் நீர்த்துப்போன திராவிட இயக்கத்துக்கு மறுமலர்ச்சி தரும் பணியில் மட்டுமே பூரணமாக ஈடுபட்டு இருந்தால், அவருடைய உயரம் இந்நேரம் உங்களை எல்லாம் குள்ளமாக்கி இருக்கும். இன்று நீங்கள் குனிந்து பார்க்கும் நிலை அவராகவே உருவாக்கிக்கொண்டது. உண்மையான இன உணர்வும், மேன்மையான மொழிப் பற்றும் தமிழினத்தால் ஆராதிக்கப்படுவது இல்லை. சொந்த ஆதாயத்துக்காகவே அரசியல் அரிதாரம் பூசிக்கொண்ட சில சந்தர்ப்பவாதிகள் இடம் மாறியதாலேயே, வைகோவின் வலிமை பறிபோய்விட்டதாக நீங்கள் கணித்தது பிழை. நாகரிகமான அரசியலை நேசிக்கும் வாக்காளர்களில் கணிசமானவர்கள் ஆதரவு வைகோவுக்கு உண்டு என்பதை நீங்கள் கணக்கில்கொள்ளவில்லை சகோதரி. அது மட்டும் அல்ல… காலம் காலமாக உதயசூரியனைத் தவிர வேறு சின்னத்துக்கு முத்திரை குத்தி அறியாத ‘கமிட்டட்’ தி.மு.க. வாக்காளர்களில் பலர்கூட, தற்போதைய தி.மு.க-வின் செயல்பாடுகளில் கசந்து இருக்கும் நேரம் இது. ‘இரட்டை இலை’க்கு ஓட்டுப் போடுவது பெரும் பாவம் என்று இத்தனை நாளும் நினைத்து இருந்த அந்த வாக்காளர்கள்கூட, ‘தி.மு.க-வை இந்த முறை பதவி இறக்கி எதிர்க் கட்சி ஆக்கினால்தான், மறுபடி தன் கொள்கைகளுக்காக தன்னை கூர் தீட்டிக்கொள்ளும்’ என்று நினைக்கிறார்கள். அவர்கள் எல்லாம், வைகோ உங்கள் கூட்டணிக்குள் இருப்பதையே இரட்டை இலைக்கு வாக்களிக்க ஒரு சமாதானமாக நினைத்துக்கொண்டு இருந்தார்கள். வைகோ தனியே போனால், தயங்காமல் அங்கேதான் விழும் இந்த ‘தி.மு.க. நலம் விரும்பும்’ ஓட்டுகள்!
ஒரு சாதாரண கட்டடம் கட்டுவதற்குக்கூட 100 பேர் உழைப்பு அவசியம். நம் கையில் எடுக்கும் ஒரு கவளம் சோற்றில் முகம் தெரியாத பலருடைய வியர்வை மறைந்து இருப்பதுதான் வாழ்வின் ரகசியம். தானாகவே பிறந்து, தானாகவே வளர்ந்து, தானாகவே வாழ்ந்து, தானாகவே கல்லறைக்குச் செல்லும் சக்தி மண்ணில் யாருக்கும் கிடையாது சகோதரி. ‘நான் மற்றவர்க்கும்… மற்றவர் எனக்கும்’ என்ற மனோபாவம்தான் அரசியலை அர்த்தப்படுத்தும். ‘நான் பல்லக்கில் பவனி வருவேன். நீங்கள் அனைவரும் என்னை எப்போதும் சுமக்கக் கடவீர்’ என்ற அணுகுமுறை கூட்டணி அரசியலுக்குப் பொருந்துமா?
ஊர் சேருவதற்கு முன்பே, பயணம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக ஒரு பிரமை கொண்டு, பல்லக்கு தூக்கி வந்தவர்களைக் கேவலப்படுத்தினால்… கோட்டையை அடைந்து ராணி அங்கே எப்படி கொலுவிருக்க முடியும்? நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர். அதனால்தான், அரங்கன் பள்ளிகொண்ட இடத்தில் நிற்க முடிவெடுத்து, கூடலழகர் குடியிருக்கும் மதுரையம்பதியில் உங்கள் தேர்தல் பயணத்தைத் தொடங்குகிறீர்கள். நல்லது. வைணவ சம்பிரதாயத்தில் ஆழ்ந்த நம்பிக்கைகொண்டவர் நீங்கள். ராமாவதாரம் உங்களைப் பொறுத்தளவில் பொய்யன்று. அந்த ராமன் ‘கூட்டு ஒன்று வேண்டா கொற்றவன்’ என்று கம்பனால் வருணிக்கப்படுகிறான். ஆனால், அவனும் வானரப் படையின் கூட்டணியோடுதான் தன்னைவிட்டுப் பிரிந்த சீதையை மீட்டான் என்பது இதிகாசம்.
ஒவ்வொரு கட்சியும் முன்பு வென்ற தொகுதிகளை விட்டுக்கொடுப்பதுதான் குறைந்தபட்சக் கூட்டணி தர்மம். அதையும் அங்கீகரிக்க மறுப்பது அரசியல் அதர்மம். நீங்கள் வீழ்ந்து கிடந்தபோது, உங்கள் பாசறையில் இருந்து ஒவ்வொரு தளபதியும் விலை போனபோது, ‘அ.தி.மு.க. எங்கே இருக்கிறது?’ என்று மு.க.அழகிரி ஆர்ப்பரித்தபோது, உங்களுக்குப் பக்கத் துணையாக நின்றவர்கள் வைகோவும், இடதுசாரி இயக்கத் தலைவர்களும்.
கலைஞரின் குடும்ப ஆதிக்கம், கட்டு மீறிய ஊழல், ஸ்பெக்ட்ரம் விவகாரம், விண்ணை முட்டும் விலைவாசி என்று தி.மு.க. கோட்டை ஒவ்வொரு நாளும் கிடுகிடுக்கத் தொடங்கியபோது, அதை மக்களிடம் உடனுக்குடன் தங்கள் ஆற்றல்மிகு பேச்சால் கொண்டுபோய்ச் சேர்த்தவர்கள் அவர்கள். வரும் தேர்தல் களத்திலும்கூட, ஸ்பெக்ட்ரம் பற்றி தெளிவாக வாக்காளர்களிடம் எடுத்துச் சொல்ல உங்கள் கட்சியில் விவரமாக யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்?
30 விழுக்காடு வாக்குகளை வைத்திருக்கும் கட்சி உங்களுடையது மட்டுமே. அதனால்தான் சமூகப் பொறுப்பு உணர்வு மிக்க கட்சிகள் உங்களோடு அணி வகுத்து நிற்க விரும்பின.
நீங்களாகவே 160 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துவிட்டு, தன்னிச்சையாகப் பிரசாரம் செய்யப் புறப்படுவது எதிர்பார்க்கும் நல்ல விளைவைத் தராது. சகோதரி… ‘தேர்தல் முடிந்ததேவிட்டது. நாம் ஜெயித்து ஆட்சியைப் பிடித்தேவிட்டோம்’ என்ற மயக்கத்துக்கு ஆளாகாதீர்கள். வாக்காளர்கள் மிக சூட்சுமம் ஆனவர்கள். தி.மு.க. ஆட்சி மீது அவர்கள்கொண்டு இருக்கும் அதிருப்தி ஒன்றே உங்களை மறுபடி பதவி நாற்காலியில் அமர்த்திவிடும் என்று நினைக்காதீர்கள். அரசியலில் உங்களுக்குப் பொறுமையும் பக்குவமும் பெருந்தன்மையும் வளர்ந்து இருக்கிறது என்று நினைத்து இருக்கும் வாக்காளர்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிடாதீர்கள். மீண்டும் ஒரு முறை நந்தவனத்து ஆண்டியாக மாறிவிடாதீர்கள். உங்களுக்காக மக்களால் உருவாக்கப்படும் ‘முதல்வர் இடம்’ உங்களாலேயே உடைக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சம் மாற்றத்தை எதிர்பார்க்கும் வாக்காளர்களுக்கு வந்திருக்கிறது. பறக்கிற பட்டுப் பூச்சி எந்தப் பூவில் உட்காரும் என்று யாரும் கணிக்க முடியாது. நீங்கள் கூட்டணிக் கட்சிகளை அவமதித்தால், வெற்றி அலை எந்தப் பக்கம் வீசும் என்பதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
எம்.ஜி.ஆர். இறக்கும் வரை, கலைஞரால் ஆட்சிக்கு வர முடியவில்லை. இப்போது அவர் முதல்வராக இருப்பதே உங்களால்தான். மீண்டும் அவரே முதல்வராக வேண்டும் என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால்… பிறகு யார் என்ன செய்ய முடியும்?
முற்கால அனுபவம், தற்காலச் சூழல், பிற்கால விளைவுகள் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்று நீங்கள் புரிந்துகொள்வது நல்லது சகோதரி!
இப்படிக்கு
மாற்றமே மானிட தத்துவம் என்பதை எப்போதுதான் அறிவீர்களோ என்ற ஏக்கத்துடன்,
தமிழருவி மணியன்
பஹிர்தமைக்கு நன்றி.