Uncategorized

நாளைய இந்தியா – செ. கிருஷ்ணமூர்த்தி – கிழக்கு பதிப்பகம்

நாளைய இந்தியாசெ. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்

நாளைய இந்தியா நூலை இணையத்தின் வழியாக வாங்க Tamil Books

அத்தானு தே
தமிழாக்கம்: செ.கிருஷ்ணமூர்த்தி



ஒரு முன்னேறிய, செல்வச் செழிப்பான நாடாகக்கூடிய ஆற்றல் இந்தியாவிடம் உள்ளது. ஆனால், இந்தியாவோ 120 கோடி மக்களைக் கொண்ட ஒரு ஏழை நாடு. வெறும் ஏழைமை மட்டுமல்ல, ஏழைமைப்படுத்தப்பட்ட நாடு. நாட்டில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பாதிபேர் சத்தான உணவுக்கு வழியற்றவர்கள். உலகிலேயே படிப்பறிவற்ற மக்களை அதிகபட்சமாகக் கொண்ட நாடு. மனிதவள மேம்பாடு சம்பந்தபட்ட பல அளவீடுகளில் இந்தியா மிக மோசமான நிலையில் உள்ளது.

ஒரு முன்னேறிய நாடாகக்கூடிய ஆற்றலை எப்போதுமே தன்வசம் கொண்டிருந்தும்கூட, தனது ஆற்றலை நிர்ணயிக்கும் நிலையை எட்டும் தொலைவில் கூட இந்தியா இருந்ததில்லை. அந்த நிலையை அடைந்திட வேண்டிய தருணம் இது.

எது முன்னேற்றம்:

முன்னேற்றம் என்பது பல பரிமாணங்களைக் கொண்டது. பொருளாதார வளர்ச்சி மட்டுமே முன்னேற்றம் ஆகிவிடாது. எனினும், முன்னேற்றத்தின் ஆரம்ப நிலைகளில் பொருளாதார வளர்ச்சி அத்தியாவசியமான தொடர்பைக் கொண்டது. முன்னேற்றம் இல்லாமல் வெறும் பொருளாதார வளர்ச்சி அடைவது சாத்தியம். அதேபோல் பொருளாதார வளர்ச்சி இல்லாமல் முன்னேற்றம் அடைவதும் சாத்தியமே. ஆனால், ஒரு குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகே முன்னேற்றம் என்பது சாத்தியம்.


நாட்டின் முன்னேற்றத்துக்கான பொறுப்பு நம்வசமே உள்ளது என்ற அளவில் நாம் பாக்கியம் செய்தவர்கள். மாற்றத்தை கொண்டு வருவதற்கான திறனும், சாமர்த்தியமும், முனைப்பும் நம்மிடம் உள்ளன. நாம் கல்வியறிவு பெற்றவர்கள். மாற்றத்தை உருவாக்குவதற்கான நேரத்தையும் உழைப்பையும் நம்மால் ஒதுக்க முடியும்.


ஒரு மாறுபட்ட எதிர்காலத்தைக் கற்பனைச் செய்யக்கூடிய ஆற்றல் நமக்கு உண்டு. அந்த மேன்மையுடைய எதிர்காலத்துக்காகத் திட்டம் தீட்டுவதற்கும், உழைப்பதற்குமான வசதியும் நமக்கு உண்டு. அத்துடன், இந்தியாவை முன்னேறிய நாடாக மாற்றுவதற்குத் தேவையானதைச் செய்ய வேண்டிய தனிப்பொறுப்பும் நமக்கு உண்டு.


நமக்கு ஏன் இந்த அக்கறை:

நீங்ளோ, நானோ, பெரும்பாலான இந்தியர்களைப் போல் தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே போராடும் நிலையில் இல்லை. அப்படி இருக்க நமக்கு ஏன் இந்த அக்கறை? இந்தியா முன்னேறத் தவறியதற்கு நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றியும் முன்னேற்றம் பற்றியும் நாம் ஆழமான அக்கறையைச் செலுத்தவேண்டும். ஏனென்றால் அது பலகோடி சக மனிதர்களின் துயரத்தை மீட்பதற்கான முதல் படி. நாம் பிறருக்கென உழைக்கும் கோட்பாடு இல்லாதவர்களாக இருக்கலாம். இருப்பினும், சுயநலத்துக்காகவும், நடைமுறைக் காரணங்களுக்காகவும் நாம் செயல்பட்டாக வேண்டும். பொருளாதார கோபுரத்தின் உச்சியில் இருக்கும் நம்முடைய நிலை உறுதியற்றது. ஏனெனில் அந்தக் கோபுரத்தின் அடித்தளம் பலவீனமானது. நம்முடைய விதியும், நம்பிக்கையிழந்த ஏழை மக்களின் தலைவிதியும் பிரிக்க இயலாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளன. ஆகவே, நாம் கட்டாயம் அக்கறை கொண்டாக வேண்டும்.


முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் நாம் அக்கறை கொள்ளாமல் போவது இந்தியா முழுமையாகச் சிதைந்து போகும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றான இந்தியா இந்தப் பூமிப்பரப்பில் இருந்து மறைந்துவிடக்கூடிய நிலையை நாம் அனுமதிக்கக் கூடாது. பல உன்னதமான விஷயங்களை உலகுக்குக் கொடுத்த நாடு இந்தியா. அதன் பொருட்டாவது இந்தியா நீடித்திருக்க வேண்டும். நம்முடைய நாடு செழுமையும் முன்னேற்றமும் அடைவது நமக்கு மிக அவசியம்.


ஏன் இந்தியா சுதந்தரம் பெற்று 70 வருடங்கள் ஆகியும் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடாக இல்லை? அதற்கு எவையெல்லாம் தடைகளாக இருந்தன, இருக்கின்றன? தடைகள் தானாக அமைந்தனவா அல்லது அமைக்கப்பட்டனவா? இந்தத் தடைகளை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும்?


தீர்வு காண்பது எப்படி?:

‘ஒரு பிரச்னையைத் தீர்க்க ஒருமணி நேரமே உள்ளது; அதன் தீர்வில்தான் நான் உயிர்வாழ்வது அடங்கி உள்ளது எனும்போதும், முதல் 55 நிமிடங்களை முறையான கேள்வியைத் தீர்மானிப்பதில்தான் செலவிடுவேன். ஏனெனில், முறையானக் கேள்வியைத் தெரிந்து கொண்ட பின்னால் அந்தப் பிரச்னைக்கு ஐந்து நிமிடங்களுக்குள் என்னால் தீர்வு கண்டுவிட முடியும்.’


இந்தியா ‘கூடிய விரைவில் ஒரு வல்லரசாகிவிடும்‘ அல்லது ‘இந்த தேசத்தையோ அல்லது அந்த தேசத்தையோ முந்தப்போகிறது‘, ‘தகவல் தொழில்நுட்ப வல்லரசு‘ போன்ற கோஷங்களை நாம் எப்போதும் கேட்டவண்ணம் இருக்கிறோம். கேட்பதற்குப் பெருமையாக இருந்தாலும் அவையாவும் நம்பமுடியாத வீண் பேச்சுகள்; சிறிய ஆய்வுகளை எதிர்கொள்வதற்குக்கூட இந்தக் கோஷங்கள் தகுதியற்றவை.


இந்தியா பற்றிய புத்தகங்களை எழுதுவது குடிசைத் தொழில் அளவுக்கு மலிந்துவிட்டது. சிலர் இந்தியா எப்படி ஒரு உயர்ந்த நிலையை அடையப்போகிறது என்பது பற்றியும், சிலர் இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், சிலர் செய்வதற்கு என்ன மீதம் உள்ளது என்பது பற்றியும் எழுதுகிறார்கள். ஆனால் எந்தப் புத்தகமும் ‘ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு?’ என்ற கேள்வியை ஆராய்ந்ததாகத் தெரியவில்லை.


ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு?:

ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு? என்ற கேள்விக்கான விடை முக்கியமானது. ஏனெனில், அது பல கோடி மக்களின் வாழ்வாசாவா பிரச்னை சம்பந்தப்பட்டது. அந்தக் கேள்வி பின்வரும் இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது.


முதலில், இந்தியாவின் ஏழைமை என்பது தவிர்க்க இயலாமல் அமைந்தது அல்ல. இந்தியா செல்வச் செழிப்பான முன்னேறிய நாடாக ஆகியிருக்க முடியும். இரண்டு, இந்தியா ஏன் ஏழை நாடு என்பதற்குக் காரணங்கள் உண்டு. நாம் காரணங்களைப் புரிந்துகொள்ளும் பட்சத்தில் அவற்றைப் பற்றி ஏதேனும் செய்திட முடியும்.


ஏன் இந்தக் கேள்வியை எவருமே கேட்பதில்லை? அப்படி ஒரு கேள்வி நாகரிகம் அற்றதாக ஆகிவிட்டதுதான் அதற்கான காரணம் என்பது என்னுடைய ஊகம். குறிப்பாக, அந்தக் கேள்விக்கான நேர்மையான பதில் கேட்பதற்கு இனிமையானதாக இல்லை. அந்த நேர்மையான பதில், தொலைநோக்குப் பார்வை கொண்டவர்களாகக் கருதப்பட்ட, கருதப்படும் பல தலைவர்களின் பெருமைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துவிடும். சுதந்திரத்துக்குப்பின் நாட்டை வழி நடத்தியவர்கள் மேதைகளோ, மிகச் சிறந்த அறிவாளிகளோ அல்ல என்பதை அம்பலப்படுத்திவிடும்; நாம் பெருமையாகக் கருதும் பல நம்பிக்கைகளைத் தவறு என்று அப்பட்டமாகச் சுட்டிக்காட்டிவிடும்.


திணிக்கப்பட ஏழ்மை:

இந்தியா ஏழைமையைத் தேர்ந்தெடுத்த நாடு. ‘ஏழைகளாக வாழ்வோம்’ என்று மக்கள் விருப்பப்பட்டுத் தேர்ந்தெடுத்ததாக அதை அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. நாம் தேர்ந்தெடுத்த தேசத்தின் தலைவர்கள் தெரிந்தோ தெரியாமலோ மோசமான பொதுநலத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அதன் விளைவாக இன்று நம்மைச் சூழ்ந்திருக்கும் ஏழைமையைத் திணித்துள்ளனர். தவறான தலைவர்களும் அவர்களின் திட்டங்களும் காலப்போக்கில் பரவலான, கடுமையான ஏழைமை நிலைக்கு நாட்டைத் தள்ளியுள்ளது. பொருளாதாரத் திட்டங்களே ஒரு நாட்டின் பொருளாதாரம் எப்படி அமைகிறது என்பதைத் தீர்மானிக்கின்றன. மோசமான, தவறான திட்டங்கள் பொலிவற்ற பொருளாதார நிலைமைக்கு வித்திடுகின்றன; நல்லத் திட்டங்கள் மட்டுமே வெற்றிக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் வித்திடும். இந்த உண்மையை நாம் எப்போதும் மனத்தில் கொள்ள வேண்டும்.


ஏன் இந்தியா ஒரு ஏழை நாடு? என்ற கேள்விக்கான விடையைத் தேடும்போதுதான், நாம் வெகுவாகக் கொண்டாடும் தேசத் தலைவர்கள் என்ன மாதிரியான தவறுகளைத் திரும்பத் திரும்ப இழைத்துள்ளனர் என்பது வெளிப்படும். தவறுகளைச் சுட்டிக் காட்டுவது பதவியிலும் பலத்திலும் இருப்பவர்களுக்குப் பிடிக்காது. நாட்டின் சிற்பிகளாக நம்மால் கருதப்படும் தலைவர்கள் எந்த அளவுக்கு முட்டாள்களாக இருந்துள்ளனர் என்பதைக் கூறுவது பாதுகாப்பான செயலே அல்ல.


யார் காரணம்?:

இந்தியா முன்னேறத் தவறியதற்கு இந்தியாவை இதுவரை ஆண்ட அரசுகளைக் குற்றஞ்சாட்டுவது தவிர்க்க இயலாதது.


நான் பொருளாதாரம் படித்தவன். ஆகவே, என்னுடைய பார்வை ஒரு வரலாற்றாசிரியர் போலவோ, அரசியல் விஞ்ஞானியைப் போலவோ இல்லாமல் வேறுபட்டே இருக்கப்போகிறது.


நமது பெற்றோர்களும் பாட்டன்மார்களும் ஒரு கண்ணியமான வாழ்க்கைக்காகப் போராடியவர்கள். நமக்குப் பின்வரும் தலைமுறை அவலநிலைகளைக் காண்பதை நாம் விரும்பமாட்டோம். நாம்தான் இந்தியாவின் மாறுபாட்டை உருவாக்கியவர்களாக இருக்க வேண்டும். அதை இப்போதே செய்யவும் வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் உங்கள் குழந்தையோ, இளைய சமுதாயமோ உங்களிடம் ‘நீங்கள் நாடு இருந்த மீள முடியாத நிலையைக் கண்டீர்கள். என்ன செய்ய வேண்டும் என்பதையும் அறிந்து இருந்தீர்கள். ஏதாவது செய்தீர்களா?’ என்று கேட்கும்போது அந்தக் குழந்தையின் கண்களைப் பார்த்து, ‘ஆம். என்னால் இயன்ற அளவு செய்தேன். அதை உனக்காகச் செய்தேன்.’ என்று உங்களால் பதில் அளிக்க முடியும்.

புரையோடிய புரிதல்கள் – வெ. இறையன்பு

நெல்சன் மண்டேலா தன்னுடைய சுயசரிதத்தில் எழுதியிருக்கிறார்.

ஒருமுறை அவர் விமானத்தில் பயணம் செய்யும்போது அதை ஓட்டிச்சென்ற மாலுமி ஒரு கறுப்பர் என்பது தெரிந்ததும், அவர் சற்றுப்பயந்துவிட்டார். விமானத்தை அவர் சரியாக ஓட்டுவாரா விமானம் விபத்துக்குள்ளாகுமோ என்றெல்லாம் கூட அவர் நினைக்க ஆரம்பித்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து, ”அடச்சே” என்ன காரியம் செய்து விட்டோம். நாம் எந்த இலக்குக்காகப் போராடி வருகிறோமோ அதற்கு எதிராக நாமே இப்படிச் சிந்திக்கலாமா? என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.

இன்னொரு முறை ஓரிடத்தில் வெள்ளைக்காரப் பெண்மணி பிச்சையெடுப்பதைப் பார்க்கிறார். அவளுக்கு அதிகப் பிச்சையிடுகிறார். பல கறுப்பின மக்கள் பிச்சையெடுப்பதைப் பார்த்து ஒன்றும் தோன்றாத அவருக்கு ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியை அப்படிப் பார்த்ததும் அந்தப் பரிதாப உணர்வு ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.

அவரையும் அறியாமல் அவர் ஆழ்மனத்தில் வெள்ளை நிரத்தின் மேன்மையைப் பற்றிய எண்ணம் ஊடுருவிப் பாய்ச்சப்பட்டிருந்ததுதான் இந்த நிகழ்வுக்கு காரணம்.

சில நேரங்களில் நாம் யாரை எதிர்த்துப் போட்டியிடுகிறோமோ, அவர்கள் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்கிற எண்ணம் நமக்கு ஆழ்மனத்தில் பதிந்துவிடுவதுண்டு.

நாம் ஆழ்மனத்தில் பதிந்த பதிவுகளை நாம் உதிர்க்க முடியால் தவிக்கிறோம்.

வெள்ளை நிரத்திலிருப்பவர்களே அழகு என்றும்

ஆங்கிலம் பேசுபவர்கள் அறிவு ஜீவிகள் என்றும்

வெளிநாட்டு முத்திரை குத்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் உயர்தரமானவை. நம்நாட்டு பொருட்கள் மலிவானவை என்ற எண்ணங்கள் நம்மிடம் புரையோடிப் போய்விட்டன.

நம்முடைய பொருட்கள் உயர்ந்தவை என்று நாமே நம்பாதபோது மற்றவர்களை எப்படி நம்பவைக்கப் போகிறோம்?

மேல்மனத்தைக் காட்டிலும் உள்மனம் வலிமை வாய்ந்தது. சரியாகச் சமைக்கப்படாத புதுவகை உணவை முதல் முறை உட்கொள்ளும்போது ஜீரணமாகாவிட்டால் நம் ஆழ்மனம் அது குறித்த எதிர்மறைக் கருத்தைப் பதிவுசெய்து கொள்கிறது. அடுத்தமுறை சரியாகச் சமைத்திருந்தாலும் ஆழ்மனத்தின் பதிவு நமக்கு அஜீரண கோளாறை ஏற்படுத்திவிடுகிறது.

அதனால்தான் நாம் நல்ல சிந்தனைகளையே நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். நல்லவற்றையே தொடர்ந்து எண்ணும்போது ஆழ்மனத்தைத் தூண்டி அவை நமக்கு ஆற்றலையும், உந்து சக்தியையும் தருகின்றன.

ஒரு தேர்வை எழுதுவற்கு முன்பே ஆது சிரமம் என்று பயப்பட ஆரம்பித்தால் அது எதிர்மறையான பதிவுளை ஏற்படுத்திவிடும்.

இந்திய எல்லைப்பகுதிகளுக்குச் சென்றபோது, அங்கு கிடைத்த, கொட்டிக் கிடந்த வெளிநாட்டுப் பொருட்கள் வாங்க முனைந்தனர். தெரிந்த நபர் ஒருவர் தென்பட்டார்.

அவரிடம் அவர்கள் “எங்களுக்கு வெளிநாட்டுப் பொருட்கள் வேண்டும்” என்றார்கள்.

வெ. இறையன்பு

“எந்த நாட்டு பொருள் வேண்டும்”? என்றார்.

“எந்த நாட்டுப் பொருளும் கிடைக்குமா?”

”எல்லா நாட்டு பொருட்களையும் நாங்கள் செய்துதரத் தயார்” என்றார் அவர்.

மாலன் – அணிந்துரை

தமிழில் பயணக் கட்டுரை நூல்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால், பயணங்களை வரலாற்றுக் கோணத்தில் அணுகுகிற நூல்கள் அநேகமாக இல்லை.

அந்தக் குறையைப் போக்கும் வித்தியாசமான நூல் இது.

பயணக் கட்டுரை என்பது பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு அல்லது இடத்திற்குச் சென்று வந்த அனுபவத்தை, அங்கு கண்டவற்றையும் உண்டவற்றையும் பற்றி பேசுகிற சுய அனுபவப் பதிவுகளாக அமைந்திருக்கும்.

ஆனால், இந்த நூல் பயணத்தை வரலாற்றின் வெளிச்சத்தில் அணுகுகிற நூல். நாம் அன்றாடம் உண்ணுகிற உணவு, தினம் தினம் காண்கின்ற விலங்குகள், பறவைகள், தாவரங்கள், வாசித்து மகிழ்ந்த இலக்கியம், கேட்டு நெகிழ்கிற இசை, பல பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஏன் சில விழுமியங்களே கூடப் பயணங்கள் நம் மீது ஏற்படுத்திய மாற்றங்களின் விளைவாக நேர்ந்தவை. அந்தப் பயணங்கள் நேற்றோ அல்லது நெடுங்காலத்திற்கு முன்போ நிகழ்ந்தவையாக இருக்கலாம்.

சுருக்கமாக சொல்லப்போனால் அறிவியலுக்கு நிகராக வாழ்வின் மீது தாக்கங்களை ஏற்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வந்த சிறப்பு பயணங்களுக்கு உண்டு.

மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எண்ணிப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். இருக்கிறது. அதை திரு. இறையன்புவின் வழி தரிசிக்கும் போது அந்த ஆச்சரியம் பல மடங்காக விரிகிறது, தொலைநோக்கியின் வழியே நட்சத்திர மண்டலங்களைப் பார்ப்பது போல. அதே நேரம் அவை சிந்தனையையும் தூண்டுகின்றன, ஒரு நுண்ணுயிரை சூட்சம தரிசினியின் மூலம் காண்பதைப் போல.

அது திரு. இறையன்புவின் சொல்லிற்குள்ள வலிமை. கவிதையானாலும், கதையானாலும், கட்டுரையானாலும், உரையானாலும், ஒன்றை ஒரே நேரத்தில் விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கும் ஆற்றல் அவருக்குண்டு. நிறைய விவரங்களை எண்ணற்ற ஓவியங்களில் சித்தரிக்கும் மொகலாயச் சிற்றோவியங்களை (Mughal Miniatures) போன்றது அவரது அணுகுமுறை.

சுவாரசியமும், விவரிப்பும் ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கற்பனை மட்டுமல்ல உண்மைகளும் கூட சுவாரஸ்யமாக இருக்க முடியும். அதற்கு இந்த நூலே சாட்சி.

இந்த ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலம் நீங்கள் பல புத்தகங்களைப் படித்த பயனைப் பெற முடியும் என்பது உறுதி. ஏனெனில் திரு. இறையன்பு இந்தக் கட்டுரைகளை எழுத மேற்கொண்ட முயற்சியின்போது பல நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். குறிப்புகள் எடுத்துக் கொண்டார். அந்தக் குறிப்புகளை மற்ற நூல்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொண்டார், பின்னர்தான் அவற்றை உரிய இடத்தில் உரிய முறையில் கட்டுரைகளில் பயன்படுத்தினார்.

இந்தக் கட்டுரைகளை எழுத அவர் மேற்கொண்ட உழைப்பு அசாத்தியமானது, வணங்கத்தக்கது. அரசுப் பணியில் ஒரு மிக உயர்ந்த பொறுப்பில் பல பணிகளை ஆற்ற வேண்டிய சூழலில் இருந்தபோதிலும் இதற்கென முக்கியத்துவம் கொடுத்துத் தேடித் தேடி படித்து உழைத்து இந்தக் கட்டுரைகளை அவர் நமக்குத் தந்தார். அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அது அவர் ‘புதிய தலைமுறை’ யின் மீது வைத்திருந்த அன்பு. அதற்குத் தலை வணங்குகிறோம்.

‘புதிய தலைமுறை’ வார இதழில் 45 வாரங்கள் வெளிவந்த கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெறுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை வளர்த்தெடுப்பது என்பது ‘புதிய தலைமுறை’ யின் நோக்கங்களில் ஒன்று. ‘புதிய தலைமுறை’ யே ஒரு வித்தியாசமான முயற்சிதான். நான் முன்பு சொன்னது போல இந்த நூல் இதுவரை தமிழில் அதிகம் இல்லாத வகையைச் சேர்ந்த நூல். இதனை வெளியிடுவதில் புதிய தலைமுறை மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.

Malan – மாலன்