எனது இந்த மனிதப்பிறவியில்இயன்றவரை உயிர்களை கொல்லாமை,அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துவது எனும் கோட்பாட்டின் கீழ் மாமிச உணவை தவிர்க்க நினைக்கின்றேன். குடும்பத்தார், சுற்றத்தார்களில் பெரும்பாலனவர்கள் மாமிசம் உண்ணுபவர்களாக இருப்பதால், அவர்களுக்கு நடுவே எனக்கு மட்டும் சைவத்தை ஏற்பாடு செய்துகொள்வதில் பொதுவாக அவர்களுக்கும் சரி, எனக்கும் சரி சில சிரமங்கள், சங்கடங்கள் உண்டு. அதை தவிர்த்து பார்த்தால், சில நேரங்களில் பழகிய நாக்கு கொள்கையை மறந்துவிடுகிறது. சில நேரங்களில் சூழல் நாக்கை நிர்பந்தித்துவிடுகிறது. இதில் சைவம் என்றாலும், அதுவும் உயிர்தானே ? அதையெல்லாம் பார்த்தால் கதைக்கு ஆகுமா? என்ற கேள்வியை எதிர்வாதிகள் எழுப்புவதுண்டு. நான் அதற்கு எடுத்துக்கொண்ட பதில், இரத்தம் சிந்தும் உயிர்களை கொன்று உண்பதில்லை என்ற கோட்பாடு. அதாவது ஓரறிவு உயிரினங்களை மட்டுமே உண்பது. ஐந்தறிவு உயிரனங்களை அறவே தவிர்ப்பது. ஆனால், அவைகளில் தாவர, தானிய பாகங்களை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளும் விலங்குகள் மூலம் கிடைக்கும் பால், தயிர்,மோர், நெய் போன்றவற்றில் என் உடலுக்கு உகந்ததை எடுத்துக்கொள்வது. இது எனக்கான எனது உணவு கொள்கை. இதுதான் சிறந்த உணவுமுறை என்று நான் கூறமாட்டேன், கூறவும் கூடாது. எனக்கு நானே இக்கொள்கை வகுத்துக்கொண்டு பல வருடங்கள் ஆகிறது, பின்பற்றத்தான் முடிவதில்லை. (சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்.) முடிந்தவரை முழுமைப் படுத்தும் முயற்சியில் என் உணவு கொள்கை பயணம்….
– ராஜீவ்.

Tamil books Online