தமிழகம் இருண்ட எதிர்காலத்தை நோக்கி ….

இது விகடன் இணையத்தில் வந்த ஒரு வாசகரின் கருத்து. என்னுடைய கருத்தும் இதேதான்.

நடிகர் ஒருவர், தனது படம் ஆளும்கட்சியால் கட்டம் கட்டப்பட்டதும் தன்னை காந்தி என்கிறார், எம்‌ஜிஆர் என்கிறார், அவமானப்படுத்தப்பட்டேன் என குமுறுகிறார். அடுத்து நாந்தான் என சூளுரைக்கிறார். நாமும் அத்தனையையும் காது குளிர கேட்டு மேனி சிலிர்க்கிறோம். உன்னுடைய படம் ஆளும் கட்சியால் நெருக்கடிக்குள்ளான ஒரு நிகழ்வு மட்டுமே தமிழகத்தை ஆளுவதற்கான தகுதியை உனக்கு தந்துவிட்டதா என ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. ஏனென்றால் சினிமாக்காரர்களுக்கு நாட்டை தாரைவார்க்க நமது அடிமை மனம் எப்போதும் தயாராகவே உள்ளது.

தமிழகத்தை ஆண்டவர்களும், ஆளுகிறவர்களும் செய்யும் அதிகார அத்துமீறல்களும், அடாவடிகளும்தான் விஜயகாந்த் போன்றவர்களை நோக்கி பலரையும் போக வைக்கிறது என்று எதிர்கருத்து கூறலாம். குடும்ப அரசியலையும், ஊழலையும் எதிர்த்துதான் அரசியலுக்கு வரும் நடிகர்களுக்கு ஆதரவு அளிக்கிறோம் என விளக்கம் தரலாம். ஆனால் அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது ஒன்றுதான். ஆண்டவர்களையும், ஆளுகிறவர்களையும் நோக்கி நாம் சொல்லும் அத்தனை குறைகளும், குற்றாச்சட்டுகளும் இவர்களிடமும் உள்ளன. குடும்ப அரசியல், ஊழல் அத்தனையும்.

தகுதியில்லாத நேற்றைய அரசியல்வாதியும் சினிமாவிலிருந்தே உருவாக்கப்பட்டான். அந்த தகுதில்லாதவர்களை தோற்கடிக்க மீண்டும் சினிமாவிலிருந்தே தகுதியில்லாத நபர்களை நாம் முன்னிறுத்த வேண்டுமா என்பதே நமது கேள்வி. இருக்கிற இரு தீமைகளை ஒழிக்க புதிதாக இரு தீமைகளை உருவாக்குவது தீமைகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்குமே தவிர ஒருபோதும் நன்மை தரப் போவதில்லை.

மலையாளிகளைப் போல, தெலுங்கர்களைப் போல சினிமா நட்சத்திரங்களுக்கு அரசியல்வாதி அந்தஸ்து கொடுப்பதை நிறுத்தினால் மட்டுமே எதிர்காலத்திலேனும் நல்லதொரு அரசு தமிழகத்தில் அமையும். அதைவிடுத்து நடிகர்களை அரசியல்வாதிகளாக்கினால் எதிர்காலம் இதைவிட இருண்டதாகவே அமையும்.