முட்டை கொள்முதலில் அரசுக்கு இழப்பு இல்லை, 29 காசு லாபம்தான்: பா.வளர்மதி

ஒரு முட்டைக்கு தோரயமாக ரூபாய் 1.25 அதிகம் கொடுத்து வாங்கி விட்டு, 29 காசு லாபம்தான் என்று சொல்ல தில்லு வேண்டும்.

necc_egg_price_june_2014_dec_2014

சென்னை: சத்துணவு முட்டைக் கொள்முதல் நடைமுறை குறித்து சரியாகத் தெரிந்துகொள்ளாமலோ அல்லது இந்த அரசுமீது வீண்பழி சுமத்தி, குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய சத்துணவுத் திட்டத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று முட்டைக்கு அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதாக ஒரு உண்மைக்கு மாறான குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளால் சொல்லப்படுகிறது என்று சமூக நலன் மற்றும் சத்துணவு திட்ட அமைச்சர் பா. வளர்மதி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் இன்று சத்துணவு முட்டை கொள்முதல் குறித்து எதிர்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து பேசிய அமைச்சர் பா. வளர்மதி கூறியதாவது: இதற்கு முன்னாள் மாவட்ட அளவில் முட்டைக் கொள்முதல் செய்ய டெண்டர்கள் பெறப்பட்டு முடிவு செய்யப்பட்டன என்றும், தற்போது மாநில அளவில் டெண்டர் முடிவு செய்யப்படுகிறது என்றும், அதன்காரணமாக அதிக விலையில் முட்டை வாங்கப்படுகிறது எனவும் தவறான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் மேற்கொண்டிருக்கிறது.

மாவட்ட அளவிலே முட்டை பெறப்பட்டது எந்த இலட்சணம் என்பதை இங்கே உறுப்பினர்கள் அறிய வேண்டுமென்பதற்காகச் சொல்கிறேன். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அறிவியல் ரீதியாக முட்டை ஒப்பந்ததாரர்களுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். அதாவது விஞ்ஞான ரீதியாக, முன்னனுபவம் இல்லாதவர்களையும், நிதி ஆதாரம் இல்லாதவர்களையும் முட்டை விலை குறைவு, உயர்வின்போது சப்ளைச் செய்ய திறமையற்றவர்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதனால் பல இழப்புகளும், நேர விரயமும் ஏற்பட்டது. மாநில அளவில் டெண்டர் முடிவு செய்வதால், அரசுக்கு எந்த இழப்புமில்லை என்பதையும், மாறாக, இதனால் அரசுக்குச் செலவு குறைந்துள்ளது என்பதையும், நான் முதலிலே தெரிவித்துக்கொள்கிறேன்.

மாவட்ட அளவில் கொள்முதல் செய்யப்படும்போது, தரம் குறைந்த முட்டைகள் வினியோகம் செய்வது கண்டறியப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி குறித்த விளம்பரங்கள் மாதந்தோறும் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டு வந்ததால், அதற்கான விளம்பரக் கட்டணம் அதிக அளவில் ஏற்பட்டது. மாதாந்திர ஒப்பந்தப்புள்ளி கோரும்போது முட்டை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்களிடம் முடிவான முட்டை விலை நிர்ணயம் செய்வதில் மிகுந்த சிரமமும், காலதாமதமும் ஏற்பட்டு, சத்துணவு மையங்களுக்கு முட்டை கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம் இருந்துவந்தது. ஒவ்வொரு மாதமும் அதிகாரிகளின் கவனமும், நேரமும் முட்டைகள் கொள்முதல் செய்வதிலேயே கவனம் போனது.

மாநில அளவிலான ஒப்பந்தப்புள்ளிகள் பின்பற்றப்பட்டால் மாநிலம் முழுவதும் ஒரே விலை நிர்ணயம் செய்தால், மாவட்டந்தோறும் உள்ள விளம்பரச் செலவு குறைத்தல், ஒரேமாதிரியான தரம் கொண்ட முட்டைகள் கிடைக்கும் வசதி, ஆகிய சாதகங்கள் ஏற்படும் என்று அரசுக்குத் தெரிவித்து மாநில ஒப்பந்தப்புள்ளி முறைக்குப் பரிந்துரைத்தனர். மாதாந்திர ஒப்பந்தப்புள்ளி கோரும் நடைமுறையில் உள்ள குளறுபடிகளைக் கருத்தில்கொண்டு, 17-10-2012 அளவில் மாநில அளவில் ஒரே ஒப்பந்தப்புள்ளி கோரும் முறை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளிச் சட்டம் 31-ன்படியும், விதிகள் 2000-ன்படியும், முதன்மைச் செயலாளர், சிறப்பு ஆணையர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணித் திட்டம் அவர்கள், முட்டை கொள்முதல் செய்ய ஆணையிட்டார். ஓராண்டிற்கு முட்டைகள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யலாம் எனவும், அக்மார்க் தரத்திலான முட்டைகளையே கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் ஆணையிட்டார்.

தமிழ்நாடு அரசால் சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, அக்மார்க் நிறுவனத்தால் வகைப்படுத்தப்பட்ட ஏ-மீடியம் ரக முட்டைகள் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டு, புதிய முட்டைகள் பெறப்படுவதும் உறுதி செய்யப்படுகிறது. “மாநில அளவிலான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட வேண்டும்” என்ற அரசாணையினை இரத்து செய்யக் கோரி, கோழிப் பண்ணையாளர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, அரசால் வெளியிடப்பட்ட ஆணையில் எந்தவித குறைபாடும் இல்லை என்று அங்கீகரித்தது. இவ்வாறு சீர்படுத்தப்படுத்தப்பட்ட நெறிமுறைகளினால் மாநிலம் முழுவதும் குறித்த நேரத்தில் தரமான முட்டைகள் கொள்முதல் செய்வது உறுதி செய்யப்பட்டது. மாநில அளவிலான ஒப்புந்தப்புள்ளி கோருவதால், ஏற்புடைய விலைகளில் முட்டைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய முடிந்தது. தொழில்நுட்பத் திறன், தக்க நிதி ஆதாரத்துடன்கூடிய நிறுவனங்களை தேர்வு செய்வதற்குரிய நிபந்தனைகள் ஒப்பந்தப்புள்ளியில் இடம்பெற்றன. ஒப்பந்ததாரர்களிடத்தில் ஏற்படும் விலை நிர்ணயம் குறித்த பாதகமான கூட்டணி உருவாவது தவிர்க்கப்பட்டது.

ஒப்பந்தப்புள்ளிகளை தேர்ந்தெடுத்து பரிந்துரை செய்ய உயர் அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழு ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2013-2014 ஆம் ஆண்டிற்கு, ஆணையர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணி அவர்களால் மாநில அளவில் முட்டை கொள்முதல் செய்வதற்கு, ஒப்பந்தப்புள்ளி கோரி 18-2-2013 அன்று நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதனடிப்படையில் மே 2013 முதல், ஏப்ரல் 2014 வரை முட்டை விலை 3ரூபாய்19 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டது. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவால், மே 2013 முதல் மே 2014 வரை முட்டை ஒன்றின் சராசரி விலை 3ரூபாய் 45 பைசா டிசம்பர் மாதம் என்.இ.சி.சியில் முட்டை ஒன்றின் விலை 3 ரூபாய் 92 பைசா என நிர்ணயம் செய்யப்பட்டபோதும், 3ரூபாய்19 பைசாவிற்கே முட்டை கொள்முதல் செய்யப்பட்டது. எனவே, மாநில அளவிலான வருடாந்திர விலை ஒப்பந்தப்புள்ளி மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் சேமிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் 3 ரூபாய் 19 பைசா என்ற விலைக்கு, ஒரு நாள் கூட எந்தவிதத் தங்குத்தடையும் இல்லாமல், இடை நிறுத்தம் இல்லாமல் முட்டைகள் பள்ளிக்குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. 2014-2015 ஆம் ஆண்டில் சத்துணவுத் திட்டத்திற்கு இதேபோன்று முட்டைகள் கொள்முதல் செய்வதற்காக முதன்மைச் செயலாளர், சிறப்பு ஆணையர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் அவர்களால் நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட்டது.

ஒப்பந்தப் புள்ளி ஏற்புக் குழுவால் முட்டை ஒன்றின் விலை 4ரூபாய்51பைசா என நிர்ணயம் செய்யப்பட்டது. ஜனவரி 2014 முதல் என்.இ.சி.சி நிர்ணயிக்கும் விலைதான், பண்ணை வாயில் விற்பனை விலை ஆகும். இதற்கு முன்னால், என்.இ.சி.சி நிர்ணயித்த விலை, போக்குவரத்து செலவு ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட விலையாகும். ஆனால் 2014 ஜனவரி முதல் என்.இ.சி.சி நிர்ணயிக்கப்படும் விலை பண்ணை வாயில் விலை என்பதை நாம் கருத்திற்கொள்ள வேண்டும். எனவே நிர்ணயிக்கும் விலை, பிற இடங்களில் கிடைக்கும் முட்டையின் விலை என எண்ணுவது மிகத் தவறு என்பதை உறுப்பினர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என்.இ.சி.சி நிர்ணயிக்கும் விலை, தரம் பிரிக்கப்படாத, அக்மார்க் முத்திரை இடப்படாத பொதுவான முட்டைக்கு நிர்ணயிக்கப்படும் விலை. ஆனால் ஒப்பந்தப்புள்ளிகளில் குறிப்பிட்டுள்ளபடி மீடியம் ரக அக்மார்க் முட்டைக்கு 30 காசுகள் கூடுதலாக விலை வழங்கப்படலாம் என என்.இ.சி.சி நிறுவனமே தெரிவித்துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் மண்டல தலைவர், சமூக நலத் துறை ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார், ‘முட்டை விலையினை வாரத்தில் மூன்று நாட்கள் ஏற்றுவோம்; திங்கட்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக் கிழமை ஆகிய தினங்களில். தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சங்க நிருவாகிகள் முன்னிலையில் சந்தையின் தேவை, முட்டைக் கையிருப்பு, தினசரி உற்பத்தி, ஏற்றுமதித் தேவை, முட்டைப் பயன்பாட்டின் பருவநிலைக்கேற்ற மாற்றம் மற்றும் உற்பத்திச் செலவினம் ஆகியவற்றின் அடிப்படையில் பண்ணை வாயில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது’ என்றும், இதில் முட்டைகள் உற்பத்தியாகும் இடத்திலிருந்து விற்பனை மையங்களுக்குக் கொண்டு செல்லுதல், தரம் பிரித்தல் ஆகியவற்றிற்கான செலவினம் சேர்க்கப்படவில்லை என்றும் ஜுன் 2014 முதல் மே 2015 முடிய ஓராண்டு முட்டையின் சராசரி விலை ‘ரூ.4.45 முதல் ரூ.4.50 வரை இருக்கும்’ என்றும் அந்தக் குழுவின் சார்பாக அவர் தெரிவித்திருக்கிறார்.

சமூகநலத் துறை ஆணையருக்கு எழுதி கடிதத்தில், சராசரி விலை ‘4.45 முதல் 4.50 வரை இருக்கும்’ என்றும், இது தவிர மீடியம் முட்டைக்கு 30 காசுகள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். ரூ.4.50 + 30 = ரூ.4.80 வரை இந்த ஆண்டினுடைய சராசரி விலையாக வழங்கவேண்டும் என்று அந்தக் குழு கூடி முடிவெடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு,4 ரூபாய் 80 காசுக்கு வாங்க வேண்டும் என்று சொன்னதை மீறி, 4ரூபாய் 51 காசுக்குத்தான் வாங்கியிருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். 29 காசுகள் அரசுக்கு சேமிப்பு வந்திருக்கிறது என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். நாளிழ்களில் வெளியிடப்பட்ட செய்திகளின் அடிப்படையில் முட்டை கொள்முதல் விலை அதிகம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது, தவறான செய்தியாகும். ஒரு ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில்கூட, முட்டை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 பைசா சில்லரை விலை ஒரு முட்டை 5ரூபாய். கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துவிட்டால் ஒரு முட்டையின் விலை 6.00 ரூபாய்க்குக் கூட உயரும் வாய்ப்பு இருக்கிறது என்று இதே குழுதான் தெரிவித்திருக்கிறது. குழு தெரிவித்ததைத்தான் பத்திரிகைகள், ஊடகங்கள் தெரிவித்திருக்கிறது. குறைந்த மற்றும் மாறுபட்ட தரத்தில் உள்ள முட்டைகளும் வெளிச்சந்தையில் விற்கப்படுகின்றன. அவ்வாறு விற்கப்படுகின்ற முட்டையின் விலையை அரசு கொள்முதல் செய்யும் அக்மார்க் தரமுள்ள முட்டையின் விலையோடு ஒப்பிடுவது சரியல்ல என்பதை உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் வளர்மதி பேசினார்.