மதுக் கடைகளை மூடக் கோரி கண்களைக் கட்டிக் கொண்டு பெண்கள் போராட்டம்!

சென்னை: தமிழகம் முழுவதும் பூரண மது விலக்கை அமல்பபடுத்தக் கோரி சென்னையில் இன்று பெண்கள் சங்கத்தினர் நடத்திய நூதனப் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மதுக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. தெருவில், சாலையில் நடந்து செல்ல முடியவில்லை. குடிகார்ரகள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.சாலையில் ஆங்காங்கே யாராவது குடிகாரர்கள் விழுந்து கிடப்பது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மது விலக்கை முழுமையாக அமல்படுத்த வேண்டும், மதுக் கடைகளை இழுத்த மூட வேண்டும் என்று மதிமுக, பாமக ஆகியவை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. போராடியும் வருகின்றன. பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராடியவண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சென்னையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அமைப்பின் சார்பில் பெண்கள் கலந்து கொண்ட போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள், கண்களை கருப்புத் துணியால் கட்டிக் கொண்டு முழுமையான மது விலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

அதேபோல காந்தியவாதி சசி பெருமாள் இன்று சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் இல்லம் எதிரே மது விலக்கை அமல்படுத்தக் கோரி தனி மனிதராக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார். ஆனால் அவரைப் போலீஸார் சமரசப்படுத்தி பேசி அங்கிருந்து போகச் செய்தனர்.