தூத்துக்குடி to ஜப்பான் – கல்வியில் சாதனை சரித்திரம்

ஒரு பாத்திரக் கடை வியாபாரியின் மகன், மேடு பள்ளங்கள் நிறைந்த கல்விப் பாதையைக் கடந்துவந்து முன்னேறிய சாதனைச் சரித்திரம் இது! 

‘ஜப்பான் அறிவியல் மேம்பாட்டுக் கழகம்’ பன்னாட்டு அறிவியல் கருத்தரங்கை ஆண்டுதோறும் நடத்துகிறது. அதில் கலந்துகொள்ள ஆசிய நாடுகளில் இருந்து, முனைவர் பட்டம் முடித்த ஆய்வாளர்களை தேர்வுசெய்கிறது. அவர்​களுடன் நோபல் பரிசு பெற்ற அறிவியல் அறிஞர்கள் கலந்துரை​யாடுவார்கள். இந்த வருடம் உயிரியல் துறையில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற 120 பேரை கருத்தரங்குக்கு அழைத்​துள்ளது. அதில் இந்தியாவில் இருந்து எட்டு பேரைத் தேர்வு​செய்திருக்கிறது. அதில் தென் இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இருந்து தேர்வானவர் ஒரே ஒருவர்தான்.

இந்தக் கருத்தரங்குக்குத் தேர்வாகியிருக்கும் உதய​குமாரை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சந்தித்துப் பேசினோம்.

”எனக்கு சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் எல்லு​விலை கிராமம். சிறு வயதிலேயே குடும்பத்துடன் சேலம் மாவட்​டம் ஆத்தூருக்கு வந்துவிட்டோம். இரண்டு அண்ணன்கள், ஒரு அக்கா, நான்தான் கடைசிப் பையன். அங்கேயே அரசுப் பள்ளியில் படித்தேன். அப்பா பாத்திரக் கடை நடத்தினார். வசதியாகத்தான் இருந்தோம். பத்தாம் வகுப்பில் 400 மார்க் எடுத்து வகுப்பிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன். அந்த சமயத்தில், அப்பாவோட தொழிலில் பெரும்நஷ்டம். அதனால், பிழைப்பு தேடி சென்னை வந்தோம். திருநின்றவூரில் குடியேறினோம்.

சென்னை வந்ததும் வீட்டு வாடகை, குடும்பப் பிரச்னை என்று இன்னும் கஷ்டம். ‘படிச்சது போதும். எதாவது வேலைக்குப் போ’ என்று அப்பா சொன்னதும், இடிந்து போய்விட்டேன். குடும்பச் சூழலுக்காக ஆவடியில் இருக்கும் ஒயின்​ஷாப் பாரில் வேலைக்குப் போனேன். ஒரு நாளைக்கு 60 ரூபாய் கொடுப்பார்கள். ஒரு வருஷம் இப்படியே சென்றது. மார்ச் மாதம் மதிய நேரம்… ப்ளஸ் டூ மாணவர்கள் எக்ஸாம் எழுதிவிட்டு கும்பலா கையில் கொஸ்டீன் பேப்​பரை எடுத்துக்கொண்டு போவதைப் பார்த்தேன். அதைப் பார்க்கும்போது படிப்புக்காக ஏங்கி, தினமும் அழுவேன். திரும்பவும் ஸ்கூலில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று வெறி ஏற்பட்டது. அம்மாவிடம் சொல்லி அழுதேன். அருகில் இருக்கும் அரசுப் பள்ளியில் சேர்த்து​விட்டார். அங்கு படித்து ப்ளஸ் டூ-வில் 900 மார்க் வாங்கினேன்.

ப்ளஸ் டூ-வில் பயாலஜி குரூப் படித்தேன். எந்தக் கல்லூரியில் சேர்ந்தாலும் இங்கிலீஷ் மீடியத்தில்தான் படிக்க வேண்டும் என்றார்​கள். மாநிலக் கல்லூரியில் மட்டும்தான் தமிழ் மீடியம் தாவரவியல் இருக்கிறது என்றனர். நான் பயாலஜியில் 180 மார்க் வாங்கியிருந்தேன். அதனால், மாநிலக் கல்லூரியில் தாவரவியல் ஸீட்  கிடைத்தது. முதல் செமஸ்டரிலேயே நான் வகுப்பில் முதல் மார்க் எடுத்​தேன். அதன்பிறகுதான் வாழ்க்கையில் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. 97 சதவிகிதம் மார்க் எடுத்து தங்கப் பதக்கம் வாங்கினேன். படிக்கும்போது படிப்புச் செலவுக்கு அப்பாவைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று, திரும்பவும் அதே ஒயின்ஷாப்பில் கணக்கு எழுதும் வேலை செய்தேன். அடுத்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் நுண் ஆராய்ச்சி மையத்தில் முதுகலைப் படிப்பு சேர்ந்தேன். ஆங்கிலத்தில் படிக்க மிகவும் சிரமமாக இருந்தது. பேராசிரியர் அஜிதா தாஸ் சார் பாடங்களை எளிமையாகப் புரியவைத்தார். முதுகலைப் படிப்பிலும் 87 சதவிகிதம் மார்க் எடுத்து தங்கப் பதக்கம் வாங்கினேன்” என்கிறார் பெருமை பொங்க.

அடுத்து, தன் முனைவர் பட்டம் ஆய்வு குறித்துப் பேசினார். ”பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் சேகர் சாரிடம் முனைவர் பட்ட ஆய்வுக்குச் சேர்ந்தேன். என் ஆய்வை ஆந்திராவில் உள்ள பசுமை மாறாக் காடுகளில் செய்தேன். ஒவ்வொரு மரத்துக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடை உட்கொள்ளும் தன்மை எவ்வளவு இருக்கிறது என்று ஆய்வுசெய்து புத்தகம் வெளியிட்டு அங்கீகாரத்துக்காக அனுப்பியிருக்கிறேன்.

நோபல் பரிசு பெற்ற அறிஞர்களுடன் உரையாடப் போகிறேன் என்பதை நினைத்​தால் பெருமையாக இருக்கிறது. அந்தக் கருத்தரங்கில் ‘உலக வெப்பமயமாதல்’ குறித்து விவாதிக்க இருக்கிறேன். பூமி வெப்பமடைவதைத் தடுக்க மரங்கள் எவ்வளவு தூரம் பயன்படுகின்றன என்பது குறித்து பேசவிருக்கிறேன். மரங்களின் அருமை மக்களுக்குப் புரிய வேண்டும். அப்போதுதான் வெப்பயமாதலில் இருந்து உலகம் தப்பிக்க முடியும்” என்றார்.

”முதுகலையில் தங்கப் பதக்கம் வாங்கிய​வர்கள் பி.ஹெச்டி. படிக்க மத்திய அரசு மாதம் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது. அதன் மூலம்தான் ஆய்வை முடித்தேன். இப்போது, அப்பாவும் தொழிலை விரிவுபடுத்தி நன்றாக நடத்திவருகிறார். அண்ணன்கள், அக்கா எல்லோருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரு வருடத்துக்கு முன் எனக்கும் திருமணமாகி, ஒரு பையன் பிறந்திருக்கிறான். வாழ்க்கை நன்றாகப்போகிறது. இதேபோல் எல்லோரும் கல்வியில் உயர வேண்டும். அதுதான் நம் நாட்டுக்குப் பெருமை” – கல்வியின் மேன்மைப் பற்றி செய்தி சொல்லிவிட்டு கருத்தரங்குக்குக் கிளம்பினார் உதயகுமார்.

வாழ்த்துகள்!

கவிமணி

படங்கள்: எஸ்.நாகராஜ்

நன்றி : விகடன்