வருகிறது, வறட்சி… வாருங்கள், சமாளிப்போம்!

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, ஒவ்வொரு ஐந்தாண்டுகளின் இடைவெளிகளிலும் ஐந்தாண்டுத் திட்டங்கள் போடப்படுகின்றன. ஒவ்வொரு திட்டத்திலுமே… கிராமங்களை வளர்த்தெடுப்போம்… வறுமையை ஒழிப்போம்… என்கிற திட்டம் கட்டாயமாக இடம்பெறுகிறது. ஆனால், அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும்… இன்னும் வளராமல்தான் இருக்கின்றன கிராமங்கள்”

-இது, ‘பி.யூ.சி.எல்’ (மக்கள் சிவில் உரிமைச் சங்கம்) அமைப்பின் தேசிய செயலாளர் சுரேஷ§டைய வருத்தம் கலந்த ஆதங்கம்!

விழுப்புரம் மாவட்டம், நடுக்குப்பம் கிராமத்தை, ‘ஆரோவில் பிச்சாண்டிக்குளம்காடு’, ‘பேர்ஃபுட் அகாடமி’ ஆகிய அமைப்புகள் இணைந்து தத்தெடுத்துள்ளன. இதன்மூலம் அந்த கிராமத்தை தன்னிறைவு அடையச் செய்வதுதான் நோக்கம். இதற்காக, ‘தொலைநோக்குப் பார்வையில் நடுக்குப்பம்’ என்கிற பெயரில் டிசம்பர்- 22 மற்றும் 23-ம் தேதிகளில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. அங்கேதான் இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் சுரேஷ்!

தொடர்ந்து பேசியவர், ”தங்களுக்கு என்னென்ன வசதிகள் தேவை என்பதை சம்பந்தப்பட்ட கிராமத்தினர் முடிவு செய்வதுதான் சரியானதாக இருக்கும். ஆனால், இங்கே நடப்பது என்ன? டெல்லி, சென்னை என்று எங்கோ ஓரிடத்தில், கைகளில் அதிகாரங்களைக் குவித்து வைத்திருப்பவர்கள்தான் கிராமங்களின் தேவையை நிர்ணயம் செய்கிறார்கள். இந்நிலை மாறவேண்டும். நம் தேவையை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

இன்றைக்குத் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. இதற்குக் காரணம் அளவுக்கு அதிகமாக போடப்பட்ட போர்வெல்கள்தான். கிணறு மூலம் குறிப்பிட்ட அளவுக்குத்தான் தண்ணீரை எடுக்க முடியும். ஆனால் ‘போர்வெல்’ மூலம் பாறைக்கு அடியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் தண்ணீரையும் துளைபோட்டு உறிஞ்சுகிறோம். இப்படியே போனால், ஒரு கட்டத்தில் மிகக்கடுமையான வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும். ஆனால், இதற்கான தீர்வு நம்மிடமே இருக்கிறது. ஒன்றாக இணைந்து, தீர்வுகளைக் காண நாம்தான் முயற்சிக்க வேண்டும்” என்றும் யோசனைகளைச் சொன்னார் சுரேஷ்.

தொடர்ந்து, பேசிய பயிற்சியாளர் மனோகரன், ”பிரச்னைகளுக்குத் தீர்வுகளை நீங்களே கண்டுபிடிக்க வழிகாட்டுவதுதான் எங்கள் வேலை. இன்றைக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை தண்ணீர். அதைச் சேமிக்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுப்பதுடன், முறையாகக் கையாளும் முறைகளையும் கற்றுக்கொடுக்கத் தயாராக இருக்கிறோம்” என்று சொன்னதோடு, குறிப்பிட்ட சில விஷயங்கள் தொடர்பான பயிற்சிகளையும் அளித்தார்.

”இங்கே கற்றுக்கொண்ட விஷயங்கள், எங்க கிராம முன்னேற்றத்துக்கு உதவும் என்று நம்புகிறோம். இந்த கிராமத்தை, மாதிரி கிராமமாக மாற்றியே தீருவோம்” என்று பயிற்சியில் பங்கேற்றவர்கள் சொல்லிச் சென்றது… நம்பிக்கை தருவதாக இருந்தது!

நன்றி : பசுமை விகடன்