தமிழகத்தின் சட்டமன்றத்தின் நிலைமை – ஜீரோ. பன்னீர்செல்வம்.

இன்று காலையில் கூட எ.வ.வேலு ஷவரில் நன்றாக குளித்து விட்டுத்தான் வந்திருக்கிறார்- ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

ஒரு வாரகால புறக்கணிப்புக்குப் பின் திமுக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு வந்தனர். திமுக எம்எல்ஏ எ.வ.வேலு ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது நடந்த விவாதம்,

எ.வ.வேலு: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து வரும் கிருஷ்ணா தண்ணீர் வரதபாளையம் உப்பளமேடு மதகுக்கு வரும் பகுதியில் மதில் சுவர் கால்வாயில் விழுந்ததால் தண்ணீர் வீணாகிறது. ஏப்ரல் மாதம் வெயில் அதிகம் என்பதால் நிறைய தண்ணீர் ஆவியாகி வீணாகும். எனவே மதகை சீர் செய்தால்தான் தேவையான தண்ணீரை கொண்டு வர முடியும்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி: உறுப்பினர் இந்த அரசின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்ற எண்ணத்துடனேயே பேசுகிறார். தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியதையெல்லாம் சொல்கிறார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம்: காவிரி தண்ணீரை கோட்டை விட்டது கடந்த கால திமுக அரசு. ஆனால் இவர்கள் கண்டலேறு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.

இதற்கு மு.க.ஸ்டாலின் எழுந்து எதிர்ப்பு தெரிவிக்க முயன்றபோது அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, பொதுப் பணித்துறை அமைச்சர் நல்ல பதிலைத்தான் சொன்னார். காவிரி நடுவர் மன்றம் 16 வருடத்துக்கு பிறகு இறுதி தீர்ப்பு வழங்கியது. தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரிக்கு எவ்வளவு தண்ணீர் பங்கிடுவது என்று கூறி இருந்தது. அதை மத்திய அரசு இன்னும் நிறைவேற்றவில்லை. அரசிழிலும் வெளியிடவில்லை. 10 ஆண்டுகளாக மத்திய அரசில் நீங்கள்அங்கம் வகித்தீர்கள். நீங்கள் இதற்கான முயற்சியை எடுத்தீர்களா? இதைத்தானே அமைச்சர் சொன்னார்.

மு.க.ஸ்டாலின்: இங்கே கொண்டு வரப்பட்ட கண்டலேறு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கும் காவிரி பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம்?. தேவை என்றால் அது பற்றி தனியாக விவாதிக்கலாம்.

ஓ.பன்னீர்செல்வம்: இதில் சம்பந்தம் இருக்கிறது. சென்னை குடிநீர் ஏரிகளில் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது. இன்று காலையில் கூட எ.வ.வேலு ஷவரில் நன்றாக குளித்து விட்டுத்தான் வந்திருக்கிறார். குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாக அவர் சொன்னதால்தான் இதை கூற வேண்டி இருக்கிறது. காவிரி நீரை கோட்டை விட்டவர்கள் கண்டலேறு பற்றி சொல்ல என்ன யோக்கியதை உள்ளது.

சபாநாயகர்:
பேரவை முன்னவர் (ஓ.பன்னீர்செல்வம்) அளித்த விளக்கம் சரியானதுதான்.

அமைச்சர் கே.வி.ராமலிங்கம்: மேட்டூர் அணை தண்ணீரை ஜூன் 6ம் தேதி திறந்து விவசாயத்துக்கு உதவுபவர் புரட்சித் தலைவி. அதேபோல் கிருஷ்ணா தண்ணீரையும் இந்த ஆண்டு சாதனை அளவாக 8.5 டி.எம்.சி. பெற்றுத் தந்துள்ளார். முழு அளவான 12 டி.எம்.சி.யும் விரைவில் பெற்றுத் தருவார். சென்னையில் 7 மாதத்துக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பே கிடையாது.

ஆனாலும் அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படாததால், அதை நீக்க வேண்டும் என திமுகவினர் தொடர்ந்து நின்று கொண்டே வலியுறுத்தினர். ஆனால், அந்தக் கோரிக்கை ஏற்கப்படாததால் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் பள்ளிக் கல்வி மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பங்கேற்க திமுகவினர் அவைக்குத் திரும்பினர்.