என்ன செய்ய வேண்டும் ? – சவுக்கு

நாம் என்ன செய்ய வேண்டும் என்ற சவுக்கின் கருத்துக்களை நூறு சதவிதம் நாம் வழி மொழிகிறேன்.

Source: http://savukku.net/home/715-2011-04-12-09-57-37.html

வாசகர்கள் பல்வேறு பேர், பின்னூட்டங்களிலும், நேரிலும், தொலைபேசியிலும், யாருக்கு வாக்களிப்பது, என்ன செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.

நம்முன் இப்போது உள்ள தலையாய கடமை, திமுக காங்கிரஸ் கூட்டணி வீழ்த்தப் பட வேண்டும் என்பதே…. இந்தக் கூட்டணி வீழ்த்தப் பட்டே ஆக வேண்டும். அவ்வாறு வீழ்த்தப் பட வேண்டியது, நமக்காக மட்டுமல்ல, தமிழகத்தையும், தமிழக மக்களையும், நமது சந்ததியினரையும் பாதுகாப்பதற்காகத் தான்.

ஏன் வீழ்த்தப் பட வேண்டும் இந்தக் கூட்டணி ? ஒவ்வொன்றாக பார்ப்போம்.

முதல் காரணம்

இக்கூட்டணி வீழ்த்தப் பட வேண்டியதற்கான தலையாய காரணமாக சவுக்கு பார்ப்பது, தமிழக மீனவர் பிரச்சினை. நாம் அனைவரும், வேலைக்குப் போகிறோம், சம்பாதிக்கிறோம், அதன் மூலம், நமது குடும்பத்தை வாழ்விக்கிறோம். தினமும் நீங்கள் வேலைக்குப் போகும் இடத்தில், யாராவது ஒருவர் உங்களை சுடுவார்கள், உங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை, உயிரோடு திரும்பி வர உத்தரவாதம் இல்லை என்ற ஒரு நிலையை எண்ணிப்பாருங்கள்…. !! வேலைக்குப் போகாமல் இருக்க முடியுமா ? பெண்டாட்டி பிள்ளைகளை பட்டினி போட முடியுமா ? தமிழக கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு மீன் பிடித்தலைத் தவிர வேறு என்னதான் வாழ்வு ? யோசித்துப் பாருங்கள்….. தினந்தோறும், சிங்களக் கடற்படையினரால் தாக்கப் படுகிறான், அவன் மீன்கள் கடலில் கொட்டி அழிக்கப் படுகின்றன, அவன் வலைகள் அறுத்தெரியப் படுகின்றன, நிராயுதபாணியான அவன் சுட்டுக் கொல்லப் படுகிறான், கயிற்றைக் கட்டி கடல் தூக்கிப் போடப் படுகிறான்….. இத்தனை அட்டூழியங்களையும், ஒரு மாநில அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்றால் எதற்காக இந்த அரசுகள் ? என் தேசத்தைச் சேர்ந்த ஒரு குடிமகனை ஒரு சுண்டைக்காய் நாட்டின் கடற்படை சிப்பாய் தினந்தோறும் அடிக்கிறான், தாக்குகிறான். அந்தக் குடிமகனை பாதுகாக்க வக்கில்லாத காங்கிரசும், திமுகவும், பதவியில் இருந்து அகற்றப் பட வேண்டியது மட்டுமல்ல, அழித்து ஒழிக்கப் பட வேண்டாமா ? மீனவன் கொல்லப் படும்போதெல்லாம், மத்திய அரசுக்கு கடிதமும் தந்தியும் அனுப்புவதும் இறந்த மீனவனை ஏளனம் செய்வது போலில்லை ? இதையெல்லாம் மீறி, மீனவர்களை பேராசைக்காரர்கள் என்று அழைத்த கருணாநிதியை என்னவென்று சொல்வது ? தன் வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் அந்த மீனவன் பேராசைக்காரனா…. ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை விழுங்கி ஏப்பம் விட்ட கருணாநிதியும் அவர் குடும்பமும், பேராசைக்காரர்களா ?

சென்னை கெனட் லேனில் உள்ள புத்த விகாரத்தில், ஒரு நான்கு புத்த பிட்சுகள் தாக்கப் பட்டார்கள் என்ற செய்தியை அறிந்த அன்றே இலங்கை ஹை கமிஷனர் இந்தியாவுக்கு ஓடோடி வரவில்லை ? ஆனால் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொன்று அழிக்கப் பட்ட பிறகும், இந்த கோரம் தொடர்ந்து கொண்டிருக்கும் போதும், கடிதம் எழுதும் கருணாநிதியை எப்படி மன்னிக்க முடியும் ?

இரண்டாவது காரணம்

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுங்கள் என்று நமக்கு கற்றுக் கொடுத்த வள்ளளார் பிறந்த தேசம் இது. பயிர் வாடினாலே நாம் வாட வேண்டும், ஆனால் லட்சக்கணக்கான உயிர்கள் வாடி வதங்கி, கோரமாக படுகொலை செய்யப் பட்ட போது, திமுகவும் காங்கிரஸும் என்ன செய்து கொண்டிருந்தன.. ஒருவர் தனது கணவரை கொன்ற இனம் அழிக்கப் படுவதில், புளகாங்கிதம் அடைந்து கொண்டிருந்தார். மற்றொருவர், குடும்பத்தோடு ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, சிங்கள அரசுக்கு ஆயுத உதவி உட்பட அத்தனை உதவிகளையும் செய்தது இந்திய அரசு என்பது வெட்ட வெளிச்சமாக்கப் பட்டுள்ளது. உதவிகள் செய்தது மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தலையிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டது இந்தியா. மேற்கத்திய நாடுகள் தலையிட்டால் ஒரு வேளை போர் நின்று, தமிழினம் அழிக்கப் படாமல் பாதுகாக்கப் பட்டிருக்குமே….. அதற்காகத் தான் கவனமாக பார்த்துக் கொண்டது இந்தியா. இன்று பதிவு இணையதளம் வெளியிட்டிருக்கும் செய்திகளின் படி, இறுதிக் கட்டப் போரின் போது, தனக்கு கடிதம் எழுதிய புலிகள் இயக்கத்தின் வேண்டுகோளை கருணாநிதி சட்டை செய்யவில்லை என்பது தெரிய வருகிறது.

இதில் கருணாநிதி செய்த மிகப் பெரிய கயமைத்தனம் என்னவென்றால், ஈழப் போரை நிறுத்தக் கோரி, தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருந்த போது, அந்தப் போராட்டத்தின் வீச்சை நீர்த்துப் போகச் செய்தது தான். கற்பனையாக ஒரு சூழலை நினைத்துப் பாருங்கள். கருணாநிதி தன் பதவியைப் பற்றி கவலைப் படவில்லை. உண்மையிலேயே தமிழ் இன உணர்வோடு, போரை நிறுத்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மத்திய அரசுக்கு ஒரே ஒரு எச்சரிக்கை. 24 மணி நேரம் அவகாசம். மத்திய அரசு, போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசு கேட்கவில்லை யென்றால், இந்திய ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று எச்சரிக்கை விட்டு விட்டு, நடவடிக்கை எடுக்கப் படாவிட்டால், என்னவெல்லாம் செய்திருக்க முடியும் ? பந்த் அறிவித்து, தமிழகத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை அடித்து நொறுக்கியிருக்க வேண்டாமா ? துணைத் தூதரகம் இருந்த தடம் தெரியாமல் செய்திருக்க வேண்டாமா ? கருணாநிதியால் செய்ய முடியாததா இது ? திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டதே இல்லையா ? வட இந்தியாவில் ஒரு சாமியார், கருணாநிதியின் தலையை துண்டிக்கப் போகிறேன் என்று சொன்னதும், திமுகவின் கழக உடன்பிறப்புகள், பிஜேபி அலுவலகத்தை துவம்சம் செய்யவில்லை ? கருணாநிதிக்கு கருப்புக் கொடி காட்டப் போகிறார்கள் வழக்கறிஞர்கள் என்று தெரிந்ததும், இன்று சீட் கிடைக்காமல் அல்லாடும், விஎஸ்.பாபு தலைமையிலான ரவுடிகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாகவே வழக்கறிஞர்களையும் பத்திரிக்கையாளர்களையும் அடித்து நொறுக்கவில்லையா ? அப்போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்தானே இந்தக் கருணாநிதி ?

தன்னுடைய ஈகோ பாதிக்கப் படுவதற்காக வன்முறையில் இறங்க திமுக தொண்டர்களை களமிறக்கி விடும் கருணாநிதி, தமிழர்களின் உயிரை பாதுகாப்பதற்காக வன்முறையில் இறங்கியிருக்கலாமே ?

அந்தப் போராட்டங்களையெல்லாம் எப்படி நீர்த்துப் போகச் செய்தார் என்று எண்ணிப் பாருங்கள். “ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும் ? இறுதி எச்சரிக்கை. இறுதியாக கேட்டுக் கொள்கிறோம். இறுதித் தீர்மானம்“ என்று என்னென்ன வசனங்கள் பேசினார் கருணாநிதி ? மனிதச் சங்கிலி, பொது வேலை நிறுத்தம், கடிதம், தந்தி, சட்டசபை தீர்மானம், என்று கருணாநிதி ஆடிய நாடகங்களுக்கெல்லாம் உச்சம் அவரது உண்ணாவிரதம். எத்தனை பெரிய அயோக்கியத்தனம் அது ? காலையில் கடற்கரைக்குச் சென்று, உண்ணாவிரதம் இருக்கிறேன் பேர்விழி என்று, மனைவி, துணைவியின் சக்களத்தி சண்டையோடு, தனது பெரும் பரிவாரத்தை கடற்கரை காற்று வாங்குவதற்காக அழைத்து வந்து நடத்திய நாடகம் எப்படிப் பட்ட துரோகம் ? இந்த பனங்காட்டு நரியோடு செர்ந்து, செட்டி நாட்டுச் சீமான் சிதம்பரமும் நாடகம் ஆடினார். கருணாநிதியை தொலைபேசியில் அழைத்து போர் நின்று விட்டது என்று அவர் கூறியதும், உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கருணாநிதி. அதற்குப் பிறகும், கொத்துக் குண்டுகள் போடப்பட்டு குழந்தைகளெல்லாம் செத்துப் போகின்றனரே என்று கேட்டதற்கு, “மழை விட்டும் தூவானம் விடாதது போல“ என்று உயிர்கள் கொல்லப் படுவதை தூறலோடு ஒப்பிடும் கருணாநிதியை கழுவிலேற்ற வேண்டாம் ?

இது மட்டுமல்லாமல், ஈழத் தமிழருக்காக போராட்டத்தில் இறங்கிய அத்தனை சக்திகளையும் காவல்துறையை விட்டு அடித்து நொறுக்கி, பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையில் வைத்து முடக்கியது. ஈழத் தமிழருக்காக சிடி தயாரித்தால் வழக்கு, ஈழப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தால், தேசிய பாதுகாப்புச் சட்டம். இந்தக் கருணாநிதியை மன்னிக்க முடியுமா ? எத்தனை பேர் அப்போது போடப்பட்ட வழக்குகளுக்காக இன்னும் நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ?

மூன்றாவது காரணம்

ஊழல். 2006ல் திமுக பதவியேற்று, ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஒரு உயர் அதிகாரியை சந்தித்த போது அவர் சொன்ன தகவல், இன்று தமிழகத்தில் வரலாறு காணாத ஊழல் நடைபெற்று வருகிறது என்பது. அந்தத் தகவல் அப்போது அதிர்ச்சி அளித்தாலும், நாட்கள் செல்லச் செல்ல, அந்தத் தகவலை உறுதிப் படுத்தும் பல்வேறு விவகாரங்கள் வெளிவரத் தொடங்கின. இங்குதான் ஊழல் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத வகையில், எல்லா துறைகளிலும் ஊழல் என்பதோடு மட்டுமல்லாமல், ஊழல் தடுப்புத் துறையிலும் ஊழல் என்பது கருணாநிதி அரசின் சாதனை. எத்தனை ஊழல்கள் புரிந்தாலும், நாம் தப்பித்துக் கொள்ளலாம் நமக்கு எந்த தண்டனையும் கிடைக்காது என்ற துணிச்சல் கருணாநிதிக்கு வந்ததற்கு காரணம், நாம்தான். திருமங்கலம் இடைத் தேர்தலில் தொடங்கி, அதற்குப் பிறகு நடந்த அத்தனை இடைத்தேர்தல்களிலும், பாராளுமன்றத் தேர்தல்களிலும், கருணாநிதி கடைபிடித்த வாக்குகளுக்கு பணம் கொடுக்கும் தந்திரம் பெரிய அளவில் வெற்றி பெற்றதே, கருணாநிதிக்கு இப்படிப் பட்ட துணிச்சலை கொடுத்தது. கருணாநிதியின் ஊழல் பணத்தை கை நீட்டிப் பெற்றதால், நாமும் கருணாநிதியின் ஊழல்களுக்கு பங்குதாரராக ஆனோம். ஏழைகளும், விளிம்பு நிலை மக்களும் பணத்தைப் பெற்றால், பரவாயில்லை…. நடுத்தர வகுப்பினர், மேல் நடுத்தர வகுப்பினர், அரசு ஊழியர்கள் பணம் படைத்தவர்களும் இந்தப் பணத்தை பெற்றுக் கொண்டு வாக்களிப்பது எத்தனை வேதனையான விஷயம் ? இந்த அயோக்கியத்தனத்துக்கு கடவுளையும் துணைக்கு அழைத்துக் கொண்டார் கருணாநிதி. வாக்குக்கு பணம் கொடுத்த பெரும்பாலான இடங்களில், கடவுள் படங்களின் மேல், திமுகவுக்கு வாக்களிப்பேன் என்று சத்தியம் வேறு பெற்றிருக்கிறார்கள்.

பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஊழல் மடங்களாகவே மாறிப் போயின…. எந்த அரசு ஊழியருக்கும், லஞ்சம் வாங்குவது தவறு, மாட்டிக் கொள்வோம் என்ற எந்த விதமான பயமும், துளியும் இல்லாமல், கொள்ளையடித்து குவிக்கின்றனர். லஞ்ச ஒழிப்புத் துறையிலும், மாமூல் கொடிகட்டிப் பறப்பதாக தகவல்கள் வருகின்றன. ஒரு அரசில் ஒரு சில துறைகளில் ஊழல் இருக்கும். ஆனால், அரசே ஊழல் அரசாக இருப்பது இதுதான் முதல் முறை என்று தோன்றுகிறது. தான் ஊழல் பேர்விழியாக இருப்பதோடல்லாமல், ஒரு ஒட்டு மொத்த அரசாங்கத்தின் ஊழியர்களையும் ஊழல் பேர்விழிகளாக மாற்றிய அயோக்கியத்தனத்துக்காகவே கருணாநிதியை மன்னிக்க முடியாது. தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, திமுக என்ற கட்சியையே ஊழல் கட்சியாக மாற்றியுள்ளார் கருணாநிதி.

நான்காவது காரணம்

குடும்ப ஆதிக்கம். சாதாரணமாக ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி, இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் என்று இருக்கும். ஆனால், கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங்கள். பத்மாவதி, தயாளு, தர்மாம்பாள் என்கிற ராசாத்தி. இவர்களின் பிள்ளைகள். இதோடு இவரின் அக்காள் சண்முகத்தம்மாளின் வாரிசுகள். அவர்களின் பிள்ளைகள், பேரன்கள் என்று இந்த ஆக்டோபஸ் குடும்பத்தின் லீலைகள் தாங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளன. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் இந்த குடும்பம் ஆட்சியில் தொடர்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு உதாரணம்.

சென்னையில் உள்ள நியூ உடலண்ட்ஸ் ஹோட்டலில், காலையில் தனது பென்ஸ் காரை எடுத்துக் கொண்டு, அமிர்தத்தின் பிள்ளை குணநிதி செல்கிறார். அங்கிருந்து வேறு ஒரு காரில், ஒரு பெண்ணோடு செல்பவர், இரவு 9.30க்கு வந்து தனது காரை எடுக்கிறார். அப்போது அங்கே இருந்த செக்யூரிட்டி, ‘என்ன சார்…. வண்டிய இங்கே பார்க் பண்ணிட்டு எங்கயோ போயிட்டு வர்றீங்க’ என்று கேட்கிறார். இதற்காக அந்த ஏழை செக்யூரிட்டியை துப்பாக்கியை எடுத்து சுட்டால் ? ஆம், குணநிதி துப்பாக்கியை எடுத்து அந்த செக்யூரிட்டியை நோக்கிச் சுட, செக்யூரிட்டி குனிந்து கொண்டதால், உயிர் பிழைத்தார். அடுத்த ஐந்தாவது நிமிடம் அந்த இடத்துக்கு வந்த ஜாபர் சேட், எந்த வழக்கும் பதியப்படாமல் குணநிதியை பத்திரமாக காப்பாற்றிக் கூட்டிச் சென்றார். குணநிதி அந்த செக்யூரிட்டியை சுட்டதோடு நிற்காமல், அவர் தப்பித்ததால், அவரை அடித்து வேறு இருக்கிறார். இந்த குணநிதியைத் தான் கருணாநிதி ஒரு மேடைப் பேச்சில், யாருக்கும் அடங்காத முரட்டுக் காளை என்று பாராட்டினார். இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப் படவில்லை. இது ஒரே ஒரு சம்பவம். இது போல கருணாநிதியின் ஆக்டோபஸ் குடும்பத்தின் லீலைகளை சொல்லி மாளாது. இன்னும் கனிமொழியின் சிறிய மகன், ஆதித்யா அதிகாரிகளை மிரட்டினான் என்றுதான் தகவல்கள் வரவில்லை.

தமிழகம் முழுக்கவும், குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் முதல் மனைவி பத்மாவதி வழி வந்த மு.க.முத்துவின் மகன் அறிவுநிதியும் அடக்கம். (அது என்ன சார் எல்லார் பேர்லயும் நிதிய சேத்துக்குறார் கருணாநிதி ?) அறிவு நிதி, சிஎம் க்ராண்ட் சன் பேசுறேன், என்று அதிகாரிகளை அழைத்து மிரட்டுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. இந்தக் குடும்பத்தின் பூதாகர ஆதிக்கத்தை, ஆனந்த விகடனில் வந்த கருணாநிதி தர்பார் என்ற கட்டுரை தெளிவாகவே விளக்குகிறது.

ஐந்தாவது காரணம்.

அதிகாரிகளின் ஊழல். ஜெயலலிதாவின் ஆட்சியில் மிக மிக சிறப்பான, வரவேற்கத் தகுந்த அம்சம் என்னவென்றால், அதிகாரிகள் பெருமளவில் கட்டுக்குள் வைக்கப் பட்டார்கள். அதிகாரிகள் கட்டுக்குள் இருந்ததற்கான முக்கிய காரணம், எந்த அதிகாரிக்கும், நாளை இந்தப் பதவியில் இருப்போமோ என்பதே தெரியாது. சென்னை மாநகர கமிஷனர், பத்திரிக்கையாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கும் போதே, புதிய கமிஷனர் நியமனத்துக்கான ஆணை வரும். இதன் காரணமாக, பெரும்பாலான அதிகாரிகள், கட்டுக்குள் வைக்கப் பட்டனர். அதிகாரிகளை கட்டுக்குள் வைக்காமல், தலைகொழுத்து அலைய விட்டால் என்ன ஆகும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், திமுகவின் 2006-2011 ஆட்சி.

இந்த ஆட்சியின் அயோக்கியத்தனத்தின் உச்சம் யாரென்றால், ஜாபர் சேட். இந்த ஜாபர் சேட் செய்யாத அயோக்கியத்தனங்களே இல்லை எனும் அளவுக்கு, அத்தனை அட்டூழியங்களை கடந்த நான்காண்டுகளில் அரங்கேற்றியிருக்கிறார். அடுத்தவர் தொலைபேசியை ஒட்டுக் கேட்பது என்பது எத்தனை பெரிய மனித உரிமை மீறல் தெரியுமா ? எத்தனை பேரின் தொலைபேசிகள் இந்த ஐந்தாண்டுகளில் ஒட்டுக் கேட்கப் பட்டிருக்கின்றன தெரியுமா ? இன்று கருணாநிதியோடு கொஞ்சிக் குலவுகிறாரே மருத்துவர் அய்யா…. அவரது தொலைபேசி ஒட்டுக் கேட்கப் பட்ட பிறகுதான் கடும் கோபம் அடைந்து 2008ல் கருணாநிதியை விமர்சிக்க ஆரம்பித்தார். ராமதாஸூக்கு தியாகராயா நகரில் இருந்த ஒரு நட்பை கண்டுபிடித்து விட்டார் என்றதாலேயே ராமதாஸ் அத்தனை கோபம் அடைந்தார்.

ஜாபர் சேட் செய்த அநியாயங்கள் ஒன்றா இரண்டா ? எத்தனை இசுலாமிய சகோதரர்கள் பொய் வழக்கில் சிறைக்குள் போடப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா ? எத்தனை வழக்குகளில், நீதிபதியின் அறைக்குச் சென்று பேசி, உளவுத்துறையால் தண்டனை பெறப்பட்டிருக்கிறது தெரியுமா ? விடுதலைப் புலிகளின் பணத்தை எவ்வளவு கையாடல் செய்திருக்கிறார் தெரியுமா ? ஜாபர் சேட்டைப் போன்ற ஒரு அயோக்கியத்தனமாக அதிகாரியை செல்லம் கொடுத்து சீராட்டி வளர்த்திருப்பதற்காகவே கருணாநிதி வீட்டுக்குச் செல்ல வேண்டும். ஜாபர் சேட் மட்டுமா ? லத்திக்கா சரண், கே.ராதாகிருஷ்ணன், கண்ணாயிரம், பெரியய்யா, சாரங்கன் என்று காவல்துறை அதிகாரிகள் என்ற பெயரில் ஒரு கயவாளிக் கூட்டத்தை வளர்த்தெடுத்தது கருணாநிதியின் குற்றம் தானே ?

திரிபாதி என்ற தலைமைச் செயலாளருக்கு, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு போன் செய்து, ஜெயலலிதா மீது வழக்கு போடுங்கள் என்று பேசுகிறார் என்றால் என்ன துணிச்சல் இருக்கும்… ? இந்த ஆள் தலைமைச் செயலாளரா திமுக மாவட்டச் செயலாளரா ? அடுத்த தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியும் திரிபாதிக்கு சளைத்தவர் அல்ல…. அவர் தன் பங்குக்கு ராதாகிருஷ்ணன் மீது வந்த ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்காதே என்று போனில் பேசுகிறார். இப்போது உள்ள திமுக மகளிர் அணித் தலைவி மாலதியைப் பற்றி கேட்கவே வேண்டாம். சமீபத்தில் கூட, ரித்தீஷ் காவல்துறையால் கைது செய்யப் பட்ட போது, அந்த மாவட்ட காவல்துறை அதிகாரிக்கு போன் செய்து ரித்தீஷை விடுவிக்க சொன்னவர். இது தவிரவும், திமுக மாவட்டச் செயலாளரை விட, மோசமாக மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்தான் மாலதி.

சுகாதரத் துறைச் செயலர், வி.கே.சுப்புராஜ், பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து வாங்கியதில் மட்டும் 100 கோடிக்கு மேல் அடித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இது போக வீட்டு வசதி வாரியத்தில் நடந்த ஊழலைப் பற்றி சவுக்கிலேயே விரிவாக பல முறை எழுதப்பட்டுள்ளது.

இது போல திமுக அரசில் இந்த அதிகாரிகளின் அட்டூழியம் எல்லை மீறிப் போய் விட்டது.

ஆறாவது காரணம்

செம்மொழி மாநாடு. செம்மொழி மாநாடு என்ற பெயரில், கருணாநிதியும், அவர் குடும்பத்தினரும் அடித்த கூத்துக்களை மறந்திருக்க மாட்டீர்கள். மொத்தமாக 660 கோடிகள் செலவிடப்பட்டதாக தகவல்கள் கூறினாலும், 1000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த மாநாடு நடத்தியதால், தமிழ் ஒரு இன்ச் அளவுக்காவது வளர்ந்திருக்கிறதா ? இந்த 1000 கோடி ரூபாயை, தமிழில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித் தொகையாக வழங்கியிருந்தால் கூட, இந்நேரத்திற்கு பலர் தமிழ் படிக்க ஆர்வத்தோடு தமிழ் படிப்பை தேர்ந்தெடுத்திருப்பார்கள். எத்தனை பண விரயம், எத்தனை நேர விரயம்… ? தமிழகத்தின் ஒட்டு மொத்த அதிகாரிகளையும், கோவையில் குவித்து, அரசு நிர்வாகத்தையே ஒரு மாதத்துக்கு முடக்கவில்லையா ?

செம்மொழி மாநாட்டில் கனிமொழியின் கவிதைகளைப் பற்றி மட்டும், 13 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டன. கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் வீணை கற்றுக் கொள்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக, வீணை கச்சேரி அந்த மாநாட்டில் சேர்க்கப் பட்டது என்ற விபரங்கள், செம்மொழி மாநாடு யாருக்காக நடத்தப் பட்டது என்பதை விளக்குகிறதே….

எத்தனை பெரிய ஆடம்பர விழா ? நாளை கருணாநிதி மீண்டும் முதல்வரானால், இது போன்ற மற்றொரு செம்மொழி மாநாட்டை நடத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?

ஏழாவது காரணம்

நெறிக்கப் பட்ட பத்திரிக்கை சுதந்திரம். கருணாநிதி அரசுக்கு பத்திரிக்கைகளின் குரல்வளையை நெறிப்பது கைவந்த கலை. எழுபதுகளில், அலைஓசை, குமுதம் போன்ற பத்திரிக்கை அலுவலகங்களை அடித்து நொறுக்கியது கருணாநிதிதான். ஆனால், இப்போது அது போல அதிரடிகளில் ஈடுபடாமல், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, தமிழகத்தின் பல்வேறு ஊடகங்களை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

கருணாநிதியின் கட்டுப்பாட்டில் பாரம்பரியம் மிக்க இந்து பத்திரிக்கையே வந்து விட்டதென்றால், கருணாநிதியின் சாதுர்யத்திற்கு வேறு எந்த உதாரணமும் தேவையில்லை. இந்து பத்திரிக்கையில் ராம் ஆசிரியராக இருக்கக் கூடிய காலம் முடிந்து விட்டதால், அந்தப் பத்திரிக்கையை விட முடியாமல், ராம் அதே பதவியில் நீடிக்க விரும்பி, அவ்விருப்பத்தை நிறைவேற்றவே, கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி குழுமங்களோடு, விளம்பரம் நிறுத்தப் படும் என்ற மிரட்டல் அவர்களை வழிக்கு கொண்டு வந்தது. மனோஜ் குமார் சோந்தாலியாவோடு, நேரடியாக பேசி கருணாநிதியோடு ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக ஏறக்குறைய ஒரு ஆண்டு காலமாக கருணாநிதி குடும்பத்திற்கு எதிராக எந்த ஒரு செய்தியும் இந்த இரண்டு பத்திரிக்கைகளிலும் வராமல் பார்த்துக் கொண்டார்.

தொலைபேசி உரையாடலை வெளியிட்ட 2008ம் ஆண்டுக்குப் பிறகே, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழுக்கு அரசு விளம்பரத்தை நிறுத்திய கருணாநிதி இதைக் காரணம் காட்டியே இந்த நாளிதழையும் வழிக்கு கொண்டு வந்தார்.

பாரம்பரியம் மிக்க விகடன் நிறுவனம், அரசு தொடர்ந்த வழக்குகளாலும், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநரை தொடர்ந்து கண்காணிப்பில் வைத்திருந்ததாலும், வேறு சில காரணங்களாலும், கருணாநிதி குடும்பத்திற்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் இருந்தது.

குமுதம் குழுமத்தில் ஏற்பட்ட, பாகப் பிரிவினை தொடர்பான சண்டைகள் காரணமாக, அந்த இரு பத்திரிக்கைகளையும் தன் வழிக்கு கொண்டு வந்தார் கருணாநிதி.

தினத்தந்தியைப் பற்றி சொல்லவே வேண்டாம். தினமலர் குழுமம், திரைப்பட நடிகைகளைப் பற்றி வெளியிட்ட சர்ச்சையான செய்திகளால் வழிக்கு கொண்டு வரப்பட்டது.

இது போன்ற பெரும்பாலான ஊடகங்கள் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்த காரணமாகவே, சவுக்கு பிறந்தது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்.

இந்த ஊடகங்களைத் தவிர்த்த மற்றவை எல்லாம் கருணாநிதி குடுமபத்தால் நடத்தப் படுபவை.

இத்தனை பத்திரிக்கைகளையும், அடக்கி ஒடுக்கிய கருணாநிதி, அத்தனை பத்திரிக்கைகளும், ஒட்டு மொத்தமாக திருப்பி அடிப்பது கண்டு பொறுக்க முடியாமல், திணறுகிறார்.

ஒரு ஜனநாயகத்தில் முக்கியப் பங்கை வகிக்கும் பத்திரிக்கைகளை இவ்வாறு மிரட்டி, அடக்கி ஒடுக்கி வைப்பது, ஜனநாயகத்தையே சீர்குலைக்கும் செயலாகும்.

எட்டாவது காரணம்

ஆடம்பர செலவுகளும், பாராட்டு விழாக்களும். இந்த ஐந்தாண்டுகளில் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாக்களைப் போல, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் பாராட்டு விழாக்கள் நடந்திருக்குமா என்பது சந்தேகமே….. எத்தனை பாராட்டு விழாக்கள் ? இந்தப் பாராட்டு விழாக்களில் முதல்வர் கலந்து கொள்வதால், கணிசமான அரசு அதிகாரிகளும் இதில் கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தம். இதற்காக செலவிடப்படும் தொகை மக்களின் வரிப்பணம் என்பதுதான் வேதனையை ஏற்படுத்தும் விவகாரம்.

ஒரு குழந்தை கடையில் லாலிபாப் ஆசைப்படுவது போல, புதிய தலைமைச் செயலகம் கட்டியே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, தலைமைச் செயலகத்தை பல கோடி ரூபாய் செலவில் கட்டி முடித்து, குறிப்பிட்ட நாளில் அதைத் திறக்க வேண்டும் என்பதற்காக 2 கோடி ரூபாயில் தோட்டா தரணியை வைத்து செட் போட்டு, திறப்பு விழா நடத்தி இப்போது என்ன முன்னேறி விட்டது தமிழகம் ? எதிர்க்கட்சியினர் யாரையுமே பேச விடாமல் சட்டசபை நடத்தியதை விட, வேறு என்ன சாதித்து விட்டார் கருணாநிதி ?

கலைமாமணி விருதுகள் என்ற பெயரிலும், சின்னத்திரை விருதுகள் என்ற பெயரிலும், குடும்பத் தொலைக்காட்சியில் நடிப்பவர்களுக்கும், குடும்பத் தயாரிப்புகளில் நடிப்பவர்களுக்கும் மட்டும் விருது கொடுக்கும் அயோக்கியத்தனம் வேறு எந்த மாநிலத்திலாவது நடக்குமா ?

ஈழத் தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி செத்து விழுந்து கொண்டிருந்த போது, பாராட்டு விழாக்களில் திளைத்துக் கொண்டிருந்தவர் இந்தக் கருணாநிதி என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

ஒன்பதாவது காரணம்

திரைப்படத் துறை. திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு என்று வைத்துக் கொண்டாலும், லட்சக்கணக்கான திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் தொழில் அது. தமிழில் பெயர் வைத்தால் முழுமையான வரி விலக்கு என்பதை விட ஒரு அயோக்கியத்தனமான விஷயம் எங்குமே பார்க்க முடியாது. கோடிக்கணக்கில் பணம் போட்டு எடுக்கப் படும் திரைப்படத்துக்கு, வெறும் பெயரை மட்டும் தமிழில் வைத்தால், முழுமையான வரிவிலக்கு என்று, அறிவித்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு சேரவேண்டிய தொகையை வர விடாமல் செய்தது கொடுமையின் உச்சக் கட்டம்.

திரைப்படத் துறைக்கு இது போல சலுகைகளை அறிவித்து, உதவி செய்தது, ஏதோ திரைப்படத் துறையை வாழ்விக்க என்று நினைத்தால், அதற்குப் பின்னணியில், கருணாநிதியின் நயவஞ்சகமே மிஞ்சியிருக்கிறது என்ற விபரம், போகப் போகத்தான் தெரிந்தது.

திரைப்பட ஹீரோக்களை மிரட்டி, அவர்களை குடும்ப தயாரிப்புக் கம்பெனிகளான மோகனா மூவிஸ், ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் மிரட்டி நடிக்க வைப்பது ஒரு பக்கமென்றால், இவர்களிடம் தங்கள் படத்தை விற்க மறுக்கும், தயாரிப்பாளர்களை மிரட்டி, அவர்களின் படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை கொடுக்க விடாமல் செய்தது மற்றொரு கொடுமை. இதனால் பல்வேறு ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் இருந்த பல தயாரிப்பாளர்களும், பிரபல நிறுவனங்களும், இத்தொழிலை விட்டே போய் விட்டன.

பத்தாவது காரணம்

ஸ்பெக்ட்ரம். சமீபத்தில் வட இந்தியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. வட இந்தியாவில், தமிழகத்தை “சோரோங் கா ஸ்டேட்” என்று அழைக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். அந்த இந்தி வாக்கியத்துக்கு பொருள், திருடர்களின் மாநிலம் என்பது. மனம் பதை பதைக்கும் அளவுக்கு இந்தியாவுக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி நஷ்டம் ஏற்படும் அளவுக்கு ஊழல் புரிந்து விட்டு, அந்த ஊழலைப் புரிந்தவரைப் பற்றி பத்திரிக்கைகள் எழுதினால், தலித் என்பதால் இவ்வாறு எழுதுகிறார்கள் என்பது கொடுமையின் உச்சமில்லையா ? எத்தனை கயமை இருந்தால் கருணாநிதி இந்த ஊழலில் சாதியைத் திணிப்பார் ?

ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இந்த தேசத்துக்கு நஷ்டம் ஆக்கிய ஒருவனை தகத்தகாய கதிரவன் என்று பாராட்டி எழுதுகிறார் என்றால் கருணாநிதிக்கு எத்தனை பெரிய துணிச்சல் இருக்க முடியும் ?

இப்போது அந்த தகத்தகாய கதிரவனைப் பற்றிப் பேசுகிறாரா ? ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடைபெறவில்லை, பத்திரிக்கைகள் பொய் கூறுகின்றன என்று பேசியும் எழுதியும் வந்த கருணாநிதி, இப்போது 80 ஆயிரம் பக்க குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்த பிறகு அதைப் பற்றிப் பேசுகிறாரா ?

தமிழ்நாட்டுக்கு எத்தனை பெரிய தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார் கருணாநிதி ? இந்த ஒரு ஊழலுக்காகவே கருணாநிதியையும் அவர் குடும்பத்தையும், காலம் முழுக்க அல்லவா சிறையில் தள்ள வேண்டும்.

இந்த பத்து காரணங்கள், இருப்பதில் தலையாய காரணங்கள் மட்டுமே.. இவையே முழுமையானவை அல்ல. இன்னும் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம் என்றாலும், நேரம் மற்றும் படிப்பவர்களுக்கு அயற்சியை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே இத்தோடு நிறுத்தப் படுகிறது.

சரி, ஜெயலலிதா ஊழல் செய்ய மாட்டாரா என்ற கேள்விக்கான பதில், செய்திருக்கிறார், செய்ய மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்பதுதான். அப்போது எதற்காக ஜெயலலிதாவை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு, மீண்டும் கருணாநிதி ஆட்சியை பிடித்தால், தமிழகமே இருக்காது என்பது மட்டுமல்ல, சவுக்கை படிப்பவர்களையும், வழக்கு போட்டு உள்ளே தள்ளுவார் கருணாநிதி. ஒட்டு மொத்த தமிழகத்தையும், தன் குடும்பத்துக்கு பிரித்துக் கொடுக்கவும் தயங்க மாட்டார் கருணாநிதி.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், திமுக அரசின் ஊழல்களில் 50 சதவிகிதமாவது வெளியில் வரும். ஓரளவுக்காவது, இவர்களின் ஊழல்களுக்கு தண்டனை பெற்றுத் தர முடியும். ஆனால், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், என்ன செய்தாலும் மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்து விட முடியும் என்ற இறுமாப்பு, இன்னும் பல்வேறு தவறுகளை செய்யும் துணிச்சலை கருணாநிதிக்கும், அவர் குடும்பத்தினருக்கும் கொடுக்கும்.

தமிழ் லீடர் இணையதளத்தில் பார்த்த ஒரு தலைப்பு பொறுத்தமாக இருக்கிறது. “தேள் கடித்தால் உயிர் பிழைக்கலாம்…. பாம்பு கடித்தால் ?”

என் அன்பு உறவுகளே….. சவுக்கு, தனது வாசகர்கள் அனைவரையும் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறது. உங்களுக்குத் தெரிந்தவர்களையும், அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். கருணாநிதி குடும்பத்தை வீட்டுக்கு அனுப்புவது மட்டுமல்ல….. சிறைக்கு அனுப்ப வேண்டியதும் நமது கடமை.