வாழ்க பணநாயகம் – தினமணி தலையங்கம்

பணக்காரர்கள் மட்டும்தான் தேர்தலில் போட்டி போட முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், ஜனநாயகத்துக்கு அதைவிடப் பெரிய ஆபத்து வேறு எதுவுமே இருக்க முடியாது. ஒன்றிரண்டு தேர்தல்களில் வேண்டுமானால் இது செல்லுபடியாகுமே தவிர, இதுவே பரவலான அதிருப்தியையும், மக்களாட்சிக்கு எதிரான மனப்போக்கையும் ஏற்படுத்தித் தீவிரவாதிகளுக்குத் தீனிபோடும் சூழ்நிலைக்குத் தேசத்தைத் தள்ளிவிடக்கூடும்.

2011 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 240 கோடீஸ்வரர்கள் போட்டியிடுகிறார்கள். அதில் முதலிடத்தில் இருக்கும் நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எச். வசந்தகுமார், ஊரறிந்த வியாபாரி. தமிழகத்தின் மிகப்பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளர். இவருக்கு ரூ. 133 கோடி சொத்து இருப்பதில் குற்றம் காண முடியாது. ஆனால், எந்தவிதப் பின்னணியும் இல்லாத பலர் கோடீஸ்வரர்களாக வலம் வருவது எப்படி என்பதுதான் புரியவில்லை.

240 வேட்பாளர்களில் 75 பேர் அதிமுகவினர். 73 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். காங்கிரஸ் (33), பாஜக (25), தேமுதிக (12) பாமக (11) போன்ற கட்சிகள் மட்டுமல்லாமல் விடுதலைச் சிறுத்தைகள், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள்கூடத் தங்களது வேட்பாளர்களாகக் கோடீஸ்வரர்களைக் களமிறக்கி இருக்கின்றன என்பதுதான் வியப்புக்குரிய ஒன்று.

ஐந்து ஆண்டுகள் அமைச்சராக இருந்தால் ஐம்பது தலைமுறை வீட்டில் உட்கார்ந்து சாப்பிடலாம் போலிருக்கிறது. எப்படித்தான் இவர்களுக்கு இவ்வளவு சொத்துச் சேருகிறது என்று யாரையும் கேட்கவிடாமல் இருப்பதற்காகவே, நாய்க்கு ரொட்டித் துண்டு போடுவதுபோல, தனது தொகுதியிலுள்ள வாக்காளர்களின் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டதுக்கு “மொய்’ எழுதிவிடுகிறார்கள். அவர்களும் “அள்ளிக் கொடுக்கும் வள்ளல்’ என்று வாயாரப் புகழ்ந்து வாலாட்டவும் செய்கிறார்கள்.

தமிழக உணவு அமைச்சர் எ.வ. வேலு கடந்த 2006 தேர்தலில் போட்டியிடும்போது தனது வேட்புமனுவுடன் இணைத்திருந்த சொத்து விவரப்படி, அவரிடம் ரூ. 60,000 மதிப்புள்ள 1.1 ஏக்கர் விவசாய நிலமும், வெறும் ரூ. 15,000 மதிப்புள்ள நகைகளும், வங்கியில் ரூ. 25,000 இருப்பதாகவும் கணக்குத் தாக்கல் செய்திருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அவரது வங்கிக் கணக்கில் ரூ. 17.47 லட்சம் இருக்கிறது. ரூ. 1.75 கோடி மதிப்புள்ள விவசாய நிலங்கள் உள்ளன. அவரது வீட்டின் மதிப்பு ரூ. 4.5 கோடி. சொத்து பத்து எதுவும் இல்லாமல் இருந்த அவரது மனைவிக்கும் இப்போது லட்சக்கணக்கில் சொத்து சேர்ந்திருக்கிறது.

அவரை விடுங்கள் பாவம். தனது பெயரிலும், மனைவி பெயரிலும்தான் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார். முதல்வர் உள்ளிட்ட சில அமைச்சர்கள் தங்களைவிடத் தங்களது மனைவியின் பெயரிலும், அதைவிட அதிகமாகத் துணைவியின் பெயரிலும் சொத்துச் சேர்த்து வைத்திருக்கிறார்களே, அவர்களை என்ன சொல்ல?

முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு வெறும் ரூ. 4.92 கோடி மட்டுமே. அவரைவிட அவரது மனைவி தயாளு அம்மாளுக்குச் சொத்து அதிகம் – ரூ. 15.45 கோடி. அதைவிடத் துணைவியார் ராஜாத்தி அம்மாளுக்கு அதிகம் – ரூ. 23.97 கோடி. தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சொத்து மதிப்பு ரூ. 75.18 லட்சம் மட்டும்தானாம். அவரது மனைவி ரங்கநாயகியின் சொத்து மதிப்பு ரூ. 93 லட்சம். ஆனால், துணைவியார் லீலாவின் சொத்து எவ்வளவு தெரியுமா? ரூ. 2.25 கோடி.

அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், பெரியகருப்பன், பரிதி இளம்வழுதி, என். செல்வராஜ், வெள்ளக்கோவில் சாமிநாதன், தங்கம் தென்னரசு என்று இவர்களைவிட இவர்களது மனைவிகளுக்குத்தான் பல மடங்கு அதிகமாகச் சொத்துக் குவிகிறது. எந்தப் பதவியும் வகிக்காத அவர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர முடியாது. கேட்டால் வியாபாரம் செய்கிறார்கள் என்றோ, இப்போது யாரைக் கேட்டாலும் சொல்லும் பதிலான “ரியல் எஸ்டேட் செய்து சம்பாதித்தது’ என்றோ கூறுவார்களோ என்னவோ…

சட்டப்பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில் எப்படி இவ்வளவு சொத்துகளைத் தங்கள் பெயரிலும், தங்கள் உறவினர்கள் பெயரிலும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதைத் தட்டிக் கேட்க வேண்டிய வருமானவரித் துறையோ, லஞ்ச ஊழல் தடுப்புத் துறையோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே கிடையாது. கேட்டால் ஆடிட்டர் மூலம் முறையாகக் கணக்குத் தாக்கல் செய்து வரியும் கட்டி இருக்கிறார்கள் என்று பதிலளித்து விடுகின்றனர். முறைகேடாகச் சம்பாதித்து முறையாக வரி கட்டி விட்டால் நேர்மையான மனிதர் என்று நற்சான்றிதழ் கொடுக்கப்படும் ஒரே தேசம் நமது இந்தியாவாகத்தான் இருக்கும்.

ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று வேறுபாடே இல்லாமல் கோடீஸ்வரர்களை அடையாளம் கண்டு வேட்பாளர்களாகக் களமிறக்கி இருக்கின்றன. வேட்பாளர் தேர்வுக்கு வரும்போதே “உங்களால் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும்?’ என்கிற கேள்வியுடன்தான் நேர்முகமே தொடங்குகிறது. பணம் கொடுத்து வேட்பாளர்களானதாகக் கூறப்படுகிறது. அரசியல் என்பது மக்கள் சேவைக்கான ஒன்றாக இல்லாமல் ஆதாயம் தரும் தொழிலாக மாறிவிட்டதன் காரணம் இதுதான்.

தெருக்கோடியில் மக்கள், பல கோடிகளில் புரளும் வேட்பாளர்கள். வாழ்க பணநாயகம்!